Thursday, June 29, 2023

872. அக்கவுன்டன்ட்

"என் தொழில்ல எத்தனையோ விரோதிகளை சந்திச்சிருக்கேன். அவங்களை வெற்றி கொள்றது எனக்கு அவ்வளவு கஷ்டமா இல்லை. ஆனா..."

மனோகர் ஒரு நிமிடம் கண்ணை மூடிக் கொண்டார்.

"சொல்லுங்கப்பா!" என்றான் கார்த்திகேயன்.

"எங்கிட்ட ஒரு அக்கவுன்டன்ட் இருந்தாரு. அவரு நல்லாதான் வேலை செஞ்சுக்கிட்டிருந்தாரு. ஆனா ஒரு தடவை ஒரு சின்ன தப்பு பண்ணிட்டார்ங்கறதுக்காக அவரை ரொம்ப கோவிச்சுக்கிட்டேன். கோவத்தில 'வெளியில போ'ன்னு கூட சொல்லிட்டேன்!"

"அப்புறம்?"

"அவரு போயிட்டாரு. திரும்ப வரவே இல்லை. அந்த மாச சம்பளத்தைக் கூட வாங்கிக்கலை. ஆனா அவர் போய் சில நாட்கள்ள எனக்கு நிறைய பிரச்னைகள் வர ஆரம்பிச்சது. சேல்ஸ் டாக்ஸ்காரங்க திடீர்னு இன்ஸ்பெக்‌ஷனுக்கு வந்தாங்க. பில் போடாம நடந்த சில விற்பனைளக் கண்டுபிடிச்சு அபராதம் போட்டாங்க. வருமான வரித்துறையில எப்பவும் நான் கொடுக்கற கணக்கை ஏத்துக்கறவங்க அந்த வருஷம் திடீர்னு நிறைய கேள்வி கேக்க ஆரம்பிச்சாங்க. நான் பில் போடாம செஞ்ச விற்பனைகள், அதிகமாக் காட்டின சில செலவுகள் எல்லாத்தையும் கண்டுபிடிச்சு ஒரு பெரிய தொகையை அபராதமா விதிச்சாங்க!"

"இதுக்கெல்லாம் காரணம் அந்த அக்கவுன்டன்ட்தானே? அவர் கொடுத்த தகவல்களாலதான இதெல்லாம் நடந்தது?" என்றான் கார்த்திகேசன் கோபத்துடன்.

"ஆமாம்" என்றார் மனோகர்.

"அவர் வேற இடத்துக்கு வேலைக்குப் போயிருப்பாரு இல்ல, அங்கே சொல்லி அவர் வேலைக்கு உலை வச்சிருக்கலாமே?"

"அவரு எங்கேயும் வேலை செஞ்சதாத் தெரியல. தனியா சுயதொழில் மாதிரி ஏதோ பண்ணிக்கிட்டிருந்தாரு போலத்தான் தெரிஞ்சுது."

"என்ன செஞ்சக்கிட்டிருந்தா என்ன? அவரை நீங்க சும்மாவா விட்டீங்க?"

"இரு. இன்னும் நான் சொல்லி முடிக்கல. அதுக்கப்பறம் என்னோட பெரிய வாடிக்கையாளர்கள் சில பேர் என்னை விட்டுட்டு நம்ம போட்டியாளர்கள்கிட்ட போயிட்டாங்க!"

"ஏன் அப்படி?"

"பொருட்களைத் தயாரிக்கறதில சில ரகசியங்கள் இருக்கு."

"ஆமாம். இப்பவும் அப்படித்தானே?"

"ஆனா அந்த ரகசியங்கள் வாடிக்கையாளர்களுக்குத் தெரிஞ்சா அவங்க நம்ம பொருளை வாங்க மாட்டாங்க. நாம பயன்படுத்தற வழிமுறைகள் பொருளோட தரத்தைக் குறைச்சுடும்னு அவங்க நினைப்பாங்க. அது உண்மையில்லை. ஆனா அதை அவங்களுக்குச் சொல்லிப் புரிய வைக்க முடியாது."

"அப்படீன்னா அந்த ரகசியங்கள் தெரிஞ்சுதான் அவங்க நம்மை விட்டுப் போனாங்களா? அப்ப அந்த ரகசியங்களை அவங்ககிட்ட சொன்னது அந்த அக்கவுன்டன்ட்தானா?"

"இருக்கலாம். என்னால நிச்சயமாச் சொல்ல முடியாது."

"அவரு அக்கவுன்டன்ட்தானே? பொருள் தயாரிப்பு பற்றின விவரங்கள் அவருக்கு எப்படித் தெரியும்?"

"ஏன்னா, அவர் புத்திசாலி. அக்கவுன்டன்டா இருந்தாலும் கம்பெனிக்குள்ள என்ன நடக்குதுங்கறதெல்லாம் அவர் கூர்ந்து கவனிச்சிருப்பாரு!"

"சரி. அப்புறம் என்னாச்சு?"

"ரெண்டு மூணு வருஷத்துக்கப்புறம் எல்லாம் சரியாயிடுச்சு. கம்பெனியை உங்கிட்ட ஒப்படைக்கச்சே எல்லாமே  நல்லா இருக்கற மாதிரிதானே ஒப்படைச்சேன்?"

"ஆமாம். நானும் கம்பெனியை நல்லாத்தான் பாத்துக்கிட்டிருக்கேன். ஆமாம், இப்ப எதுக்கு இந்தக் கதையையெல்லாம் எங்கிட்ட சொல்றீங்க?"

"பணபலம், ஆள்பலம், அரசியல் பலம் இதெல்லாம் உள்ளவங்களைக் கூடப் பகைச்சுக்கலாம், ஆனா படிச்சவங்க, அறிவுள்ளவங்க, புத்திசாலிங்க இவங்களைப் பகைச்சுக்காதேன்னு உனக்கு சொல்லத்தான்!" என்றார் மனோகர் சிரித்தபடி.

"நீங்க சொல்றது சரிதான். ஆனா நீங்க அந்த அக்கவுன்டன்ட்டை சும்மா விட்டிருக்கக் கூடாது. நல்லவேளை, இப்ப நம்மகிட்ட அக்கவுன்டன்ட்டா இருக்கறவரு ரொம்பத் தங்கமானவரு. இவரு அப்படியெல்லாம் செய்ய மாட்டாரு. நான் அவரை வேலையை விட்டு அனுப்பவும் மாட்டேன். வயசானாலும் உங்களால முடியற வரைக்கும் வேலை பாருங்கன்னு சொல்லி இருக்கேன்!" என்றான் கார்த்திகேயன் பெருமையுடன்.

'தங்கமானவர்தான். அதனாலதானே நான் அவர்கிட்ட மன்னிப்புக் கேட்டப்பறம் திரும்ப எங்கிட்ட வேலைக்குச் சேர்ந்தாரு!' என்று நினைத்துக் கொண்டார் மனோகர்.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 88
பகைத்திறந்தெரிதல் (பகையின் தன்மையை அறிதல்)

குறள் 872:
வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க
சொல்லேர் உழவர் பகை.

பொருள்: 
வில்லை ஆயுதமாகக் கொண்ட வீரரோடு பகை கொண்டாலும், சொல்லை ஆயுதமாகக் கொண்ட அறிஞரோடு பகை கொள்ள வேண்டா.
குறள் 872 (விரைவில்)
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...