மார்பில் எதிரியின் வாள் பாய்ந்த இடத்தில் வலி அதிகமாக இருப்பதை அவன் உணர்ந்தான்.
'எவ்வளவு ரத்தம் கீழே போயிருக்குமோ தெரியவில்லை, ஆனால், ஏன் இன்னும் உயிர் போகவில்லை?'
தன்னைச் சுற்றிலும் பார்த்தான். பார்வை மங்கலாக இருந்தது. அரை மயக்கத்தில் இருந்தது ஒரு காரணம் என்றாலும், பொழுது சாய்ந்து விட்டதும் இன்னொரு காரணம் என்று அவனுக்குப் புரிந்தது.
பொழுது சாய்ந்து விட்டதால், போர் நிறுத்தப்பட்டிருந்தது. ஆங்காங்கே ஒரு சிலர் நடமாடிக் கொண்டிருந்தனர்.
அவனுக்கு அருகில் சிலர் நடந்து வரும் காலடிச் சத்தம் கேட்டது. அவன் தலைமாட்டுக்கருகில் வந்ததும், காலடிச் சத்தம் நின்று விட்டது.
ஒருவர் அவன் அருகில் அமர்ந்து, அவன் தலையை எடுத்துத் தன் மடியில் வைத்துக் கொண்டார்.
"வல்லபரே!" என்றார் அவர், மெல்லிய குரலில்
கொஞ்சம் கொஞ்சமாக நினைவு தப்பிக் கொண்டிருந்த நிலையிலும், வல்லபனுக்கு அந்தக் குரல் பரிச்சயமானதாகத் தோன்றியது.
மிகவும் சிரமப்பட்டுக் கண்களைத் திறந்து பார்த்தான் வல்லபன்.
மங்கலான மாலை வெளிச்சத்தில், பார்வை மங்கிய அவன் கண்களுக்குத் தெரிந்த அந்த முகம்! அது உண்மைதானா, இல்லை தான் ஏதாவது கனவு காண்கிறோமா என்று ஒரு கணம் குழம்பிய வல்லபன், "அரசே! நீங்களா?" என்றான், மிகவும் மெலிந்த குரலில்.
"நான்தான்!"
"அரசே! என்ன ஒரு பாக்கியம்! நான் யாருக்காகப் போர் செய்தேனோ, அந்த அரசர் முன்னிலையில், அதுவும் அவர் மடியில் தலை வைத்து உயிரை விடுவது எத்தகைய பேறு!" என்றான் வல்லபன், உணர்ச்சிப் பெருக்குடன்.
"இல்லை, வல்லபரே! அரண்மனை வைத்தியர் வந்திருக்கிறார். அவர் உங்களைப் பிழைக்க வைத்து விடுவார்!" என்றார் அரசர்.
அப்போதுதான் தன் மார்பில் ரத்தம் வழிந்த இடம் துடைக்கப்பட்டு, மருந்துச் சாறு பிழியப்படுவதை வல்லபன் உணர்ந்தான். அரண்மனை வைத்தியர் தான் இருப்பதே தெரியாமல், தன் வேலையைச் செய்து கொண்டிருக்கிறார்!
"இல்லை, அரசே! நான் பிழைக்க மாட்டேன். தங்கள் கண் முன்பே, தங்கள் அன்பும், கனிவும் நிரம்பி வழியும் இந்தச் சூழ்நிலையில் மரணம் அடைவதையே நான் விரும்புகிறேன்! தங்கள் கருணையே கருணை!" என்றான் வல்லபன், மனநிறைவுடன்.
"இல்லை, வல்லபரே! நாட்டுக்காக உங்கள் உயிரைப் பணயம் வைத்துப் போரில் ஈடுபட்டு காயம் பட்டு விழுந்திருக்கும் உங்களைப் போன்ற வீரர்களை நேரில் பார்த்து என் நன்றியையும், மரியாதையையும் தெரிவிப்பது எனக்குத்தான் பெருமை!" என்று அரசர் கூறிக் கொண்டிருந்தபோதே, வல்லபனின் தலை சாய்ந்தது.
பொருட்பால்
படையியல்
அதிகாரம் 78
படைச்செருக்கு
குறள் 780:
புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு
இரந்துகோள் தக்கது உடைத்து.
No comments:
Post a Comment