அவர்கள் சொன்ன விவரங்களைக் கேட்டுக் கொண்ட சண்முகம், "என்னைப் பொருத்தவரையிலும், உங்க பிசினஸ் பிளான் நல்லாத்தான் இருக்கு. இதில நான் முதலீடு செய்ய முடியும்னு நினைக்கறேன். ஆனா, உங்க ப்ராஜக்டை என்னோட ஃபைனான்ஸ் டீம் ஆராய்ஞ்சு பார்த்து அப்ரூவ் பண்ணினப்பறம்தான், என்னோட இறுதி முடிவைச் சொல்லுவேன். பொதுவா ஒரு ப்ராஜக்டை மேலோட்டமாப் பாக்கறப்பவே, எனக்கு அது லாபகரமானதா இல்லையான்னு தெரிஞ்சுடும். இதுவரையிலும், என்னோட முடிவைத்தான் என் ஃபைனான்ஸ் டீமூம் சொல்லி இருக்காங்க. ஆனாலும், இப்படி ஒரு சிஸ்டம் வச்சிருக்கேன். சிஸ்டம் வேணும் இல்ல?" என்று சொல்லிச் சிரித்தார் சண்முகம்.
"சரி சார்!" என்றான் ரமணி.
"அதுக்கு முன்னால, என்னோட டர்ம்ஸை சொல்லிடறேன்" என்ற சண்முகம், தன் நிபந்தனைகளைக் கூறினார்.
சண்முகம் தன் நிபந்தனைகளைக் கூறி முடித்ததும், "சரி சார்!" என்று கூறி இருவரும் எழுந்தனர்.
"ப்ராஜக்ட் ரிபோர்ட்டைக் கொடுக்காம போறீங்களே! அதைப் படிச்சுப் பார்த்துத்தானே, என்னோட டீம் முடிவு செய்யணும்?" என்றார் சண்முகம்.
"இல்லை சார். இதில ஒண்ணு ரெண்டு மாறுதல்கள் செய்ய வேண்டி இருக்கு. சின்ன மாறுதல்கள்தான். ஃபினிஷிங் டச்சஸ் மாதிரி. உங்க டீம் இதைப் படிக்கறப்ப அது பர்ஃபெக்டா இருக்கணும் இல்ல? அதானால, இதை ஃபைனலைஸ் பண்ணிட்டு, அப்புறம் கொண்டு வந்து கொடுக்கறோம்!" என்றான் குரு.
வெளியில் வந்ததும், "ப்ராஜக்ட் ரிபோர்ட்ல என்ன மாறுதல்கள் செய்யப் போற?" என்றான் ரமணி.
"ஒரு மாறுதலும் இல்ல. இவரோட முதலீடு நமக்கு வேண்டாம்னு நினைக்கிறேன்!" என்றான் குரு.
"ஏன்? அவர் சொன்ன நிபந்தனைகள் உனக்குப் பிடிக்கலையா!" என்றான் ரமணி.
"அவர் சொன்ன நிபந்தனைகள் பொதுவா எல்லாருமே சொல்றதுதான். அதில தப்பா எதுவும் இல்ல. ஆனா, அவரோட நோக்கம் சரியானது இல்லேன்னு நினைக்கிறேன்!" என்றான் குரு.
"என்ன நோக்கம்?"
குரு தன் சந்தேகத்தை விளக்கியதும், "எந்த அடிப்படையில இப்படிச் சொல்ற?" என்றான் ரமணி வியப்புடன்.
"எனக்கு அப்படித் தோணுது. நாம வேணும்னா, அவர்கிட்ட ஏற்கெனவே நிதி உதவி வாங்கினவங்க சில பேரைத் தேடிப் பிடிச்சு, அவங்ககிட்ட கேட்டுப் பாக்கலாம்!"
"சரி" என்றான் ரமணி.
"ரமணி! நான் உன்னோட ஒர்க்கிங் பார்ட்னர்தான். நீதான் முதலீடு செய்யப் போற. அதனால நான் இப்படிச் சொல்றது அதிகப்பிரசங்கித்தனமா இருந்தா...." என்றான் குரு, தயக்கத்துடன்.
"சேச்சே! என்னடா இது? உன்னோட ஆலோசனை எனக்கு வேணுங்கறதுக்காகத்தானே, உன்னை ஒர்க்கிங் பார்ட்னரா இருக்கச் சொல்லிக் கேட்டுக்கிட்டேன்? உன் மனசில தோணினதை நீ வெளிப்படையா சொன்னது எனக்கு சந்தோஷமா இருக்கு. நாம விசாரிச்சுப் பார்த்துடலாம்!" என்றான் ரமணி, குருவின் முதுகில் தட்டியபடி.
நான்கைந்து நாட்களுக்குப் பிறகு குருவைத் தொலைபேசியில் அழைத்த ரமணி, "நீ நினைச்சது முழுக்க முழுக்க சரிதான். சண்முகம் இதுக்கு முன்னால முதலீடு செஞ்ச சில நிறுவனங்களை, அவை லாபமா நடக்க ஆரம்பிச்சப்பறம் தானே எடுத்துக்க முயற்சி செஞ்சிருக்காரு. சில நிறுவனங்களைக் கபளீகரம் பண்ணிட்டாரு. சில பேர் இன்னும் அவரை எதிர்த்துப் போராடிக்கிட்டிருக்காங்க. ஆமாம், அவர் மனசில இப்படி ஒரு நோக்கம் இருக்கறதை நீ எப்படி தெரிஞ்சுக்கிட்ட?" என்றான்.
"எங்க வீட்டில ஒரு பூனை இருந்தது. ஒரு இரையைப் பாத்துட்டா, அதை முழுங்கப் போறோங்கற ஒரு ஆனந்தமும், பெருமிதமும் அதோட கண்ணில தெரியும். சண்முகத்தோட கண்ணில அப்படி ஒரு உணர்வு இருந்த மாதிரி எனக்குத் தோணிச்சு. அதான் அப்படிச் சொன்னேன். நல்லவேளை, என் சந்தேகம் தப்பா இருந்து, ஒரு முதலீடு வாய்ப்பை நீ இழக்கக் காரணமா இருந்துடுவேனோன்னு பயந்துகிட்டே இருந்தேன்!" என்றான் குரு, நிம்மதியுடன்.
"மத்தவங்க மனசில என்ன இருக்குங்கறது கடவுளுக்குத்தான் தெரியும்னு சொல்லுவாங்க. அது உனக்கும் தெரியுதுன்னா, உங்கிட்ட இருக்கறது ஒரு தெய்வீக சக்திதான். உன்னை எனக்குத் துணையா வச்சுக்கிட்டதுதான் நான் செஞ்ச புத்திசாலித்தனமான விஷயம்!" என்றான் ரமணி, உற்சாகத்துடன்.
பொருட்பால்
அமைச்சியல்
அதிகாரம் 71
குறிப்பறிதல்
குறள் 702:
ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்
தெய்வத்தோ டொப்பக் கொளல்.
பொருள்:
அடுத்தவனின் மனக்கருத்தைச் சந்தேகத்திற்கு இடம் இல்லாமல் கண்டுகொள்ளும் ஆற்றல் உள்ளவனைத் தெய்வத்திற்குச் சமமாக மதிக்க வேண்டும்.
No comments:
Post a Comment