காவல் தலைவர் அமைதியாக இருந்தார்.
"திருட்டுக் குற்றம் செய்பவர்களுக்குக் கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்பது அரசரின் கட்டளை. ஆனால், திருட்டுக் குற்றம் செய்து பிடிபட்ட குற்றவாளிகளில் சிலரை நீங்களே விசாரணை செய்து விட்டு, அவர்களை விடுதலை செய்திருக்கிறீர்கள்!"
"கடுமையான எச்சரிக்கை கொடுத்த பிறகுதான், அவர்களை விடுதலை செய்தேன்!" என்றார் காவல் தலைவர்.
"ஏன் அப்படிச் செய்தீர்கள் என்றுதான் கேட்கிறேன். குற்றவாளிகளைப் பிடிப்பதுதான் உங்கள் பணி. அவரகளை விசாரித்து தண்டனை வழங்குவதோ, விடுதலை செய்வதோ நீதிபதிகளின் பொறுப்பு. அந்தப் பொறுப்பை, அந்த அதிகாரத்தை நீங்கள் எப்படி எடுத்துக் கொள்ளலாம்?" என்றார் அமைச்சர், கடுமையாக.
"கைது செய்யப்பட்ட நபரிடம் ஆரம்ப கட்ட விசாரணை செய்ய வேண்டிய பொறுப்பு எனக்கு உண்டு. அப்படி விசாரித்தபோது, ஒரு சிலர் வறுமையினால் திருடி இருக்கிறார்கள், அதுவும் முதல் முறையாகத் திருடி இருக்கிறார்கள் என்று தெரிந்தது. நீதிபதியிடம் அவர்களை அனுப்பினால், அவர்களுக்கு தண்டனை கிடைப்பது உறுதி. அதனால்தான், நான் அவர்களைக் கடுமையாக எச்சரித்து விட்டு விடுதலை செய்தேன்!" என்றார் காவல் தலைவர்.
"அரசே! காவல் தலைவர் தான் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டு விட்டார். அவருக்கு உரிய தண்டனையைத் தாங்கள்தான் அளிக்க வேண்டும்!" என்றார் அமைச்சர்.
"காவல் தலைவரே! நீங்கள் செய்தது குற்றம்தான். ஆயினும், உங்களை என்னால் தண்டிக்க முடியாது!" என்றார் அரசர், காவல் தலைவரைப் பார்த்து.
"ஏன் அரசே?" என்றார் அமைச்சர், வியப்புடன்.
"அமைச்சரே! இவர் எப்படிக் காவல் தலைவர் ஆனார் என்பது உங்களுக்குத் தெரியும் அல்லவா?"
"தெரியும். சாதாரணப் படைவீரராக இருந்த இவர், போரில் எதிர்த்தரப்பு வீரர்கள் நூறு பேரையாவது கொல்வேன் என்று தன் நண்பர்களிடம் சூளுரைத்து, அதன்படி தன் உயிரைத் துச்சமாக மதித்துப் போர்க்களத்தில் அசாத்தியமான வீரத்துடன் போரிட்டார். இந்தச் செய்தியைப் படைத்தலைவர் மூலம் அறிந்து கொண்ட தாங்கள், இவருக்குக் காவல் தலைவர் என்ற உயர்ந்த பதவியைக் கொடுத்து இவரை கௌரவித்தீர்கள். ஆனால், இவர் தவறு இழைத்திருக்கும்போது..."
"இத்தகைய வீரச் செயல் புரிந்தவரை, அவர் தவறு செய்திருக்கிறார் என்றாலும், என்னால் தண்டிக்க முடியாது!" என்றார் அரசர்.
"அப்படியானால்...?"
"அவர் வழியையே பின்பற்றி அவரைக் கடுமையாக எச்சரித்து விட்டு விடுகிறேன். என்ன, காவல் தலைவரே?" என்றார் அரசர் காவல் தலைவரைப் பார்த்து.
காவல் தலைவர் மௌனமாக அரசருக்குத் தலை வணங்கினார்.
பொருட்பால்
படையியல்
அதிகாரம் 78
படைச்செருக்கு
குறள் 779:
இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே
பிழைத்தது ஒறுக்கிற் பவர்.
No comments:
Post a Comment