"பட்ஜெட்ல பாதுகாப்புத் துறைக்குக் கேட்டிருக்கிற ஒதுக்கீடு ரொம்ப அதிகமா இருக்குன்னு நிதி அமைச்சர் சொல்றாரு. அதைப் பத்திப் பேசி முடிவெடுக்கத்தான் இந்தக் கூட்டம். நிதி அமைச்சர் தன்னோட கருத்துக்களைச் சொல்லலாம்!" என்றார் பிரதமர்.
"சார்! நம் அரசாங்கம் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்துச் செயல்படுது. அவசியமான விஷயங்களுக்கு மட்டுமே செலவு செய்யணுங்கறது பிரதமரோட அறிவுறுத்தல். ஆனா, புதுசா வந்திருக்கிற பாதுகாப்பு அமைச்சர் நிறைய நிதி ஒதுக்கீடு கேட்டிருக்காரு. நாம் அமைதியை விரும்பற நாடு. படைகளுக்காக நாம் அதிகமா செலவழிக்க வேண்டிய தேவை இல்லை" என்றார் நிதி அமைச்சர்.
"சார்! கடந்த காலத்தில நாம பாதுகாப்புக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கல. முந்தைய பட்ஜெட்கள்ள ஏதோ தர்மகாரியங்களுக்கு நிதி ஒதுக்கற மாதிரி, பாதுகாப்புக்கு ஒப்புக்காக நிதி ஒதுக்கி இருக்காங்க. நம் தரைப்படை ஓரளவுக்கு வலுவா இருக்கு. ஆனா, விமானப்படை பெயரளவுக்குத்தான் இருக்கு. அதை நாம வலுப்படுத்தணும்!" என்றார் பாதுகாப்பு அமைச்சர்.
"நமக்கு தரைப்படை வலுவா இருந்தா போதும், விமானப்படை அந்த அளவுக்கு முக்கியமில்லை. இதை முந்தைய பாதுகாப்பு அமைச்சர் கூட ஒத்துக்கிட்டிருக்காரு!" என்றார் நிதி அமைச்சர்.
"மன்னிக்கணும் சார்!" என்று அவரை இடைமறித்த பாதுகாப்புத் துறைச் செயலர், "தரைப்படை மட்டும் வலுவா இருந்தாப் போதாது, விமானப்படையும் வலுவா இருக்கணும்னு நாங்க முந்தைய அமைச்சர்கிட்ட சொல்லி இருக்கோம். அவரும் உங்ககிட்ட சொல்லி இருக்காரு. ஆனா, நீங்க நிதி ஒதுக்காததால, அவர் அதை வற்புறுத்தல!" என்றார்.
"முந்தைய பாதுகாப்பு அமைச்சரோட செயல்பாடு சிறப்பா இல்லைங்கறதாலதான், அவரை மாத்தி இருக்கோம்!" என்றார் பிரதமர், நிதி அமைச்சரைப் பார்த்துச் சிரித்தபடி.
"தரைப்படையோட, விமானப்படையும் வலுவா இருக்கணுங்கற கருத்து சரிதான்னு நினைக்கிறேன்!" என்றார் பிரதமர், தொடர்ந்து.
"சரி சார்! விமானப்படையை வலுப்படுத்தறதுக்கான செலவுகளுக்கு பட்ஜெட்ல நிதி ஒதுக்கிடலாம்" என்ற நிதி அமைச்சர், "ஆனா பயிற்சிக்குன்னு பெரிய தொகை கேக்கறாங்க. அது அவசியமா?" என்றார், பாதுகாப்பு அமைச்சரைப் பார்த்து.
"படை வீரர்களுக்கு உடற்பயிற்சி, ஆயுதங்களைக் கையாள்கிற பயிற்சி தவிர, இடையூறுகளை எதிர்கொள்வதற்கான உத்திகள், மனப்பயிற்சி மாதிரி பல பயிற்சிகள் தேவை. எப்போதோ வரக் கூடிய போருக்கு, போர் வீரர்கள் எப்பவுமே தயாரா இருக்கணும்னா, தொடர்ந்த பயிற்சி ரொம்ப அவசியம். இப்ப நாம கொடுக்கற பயிற்சி போதாது. அதுக்குத்தான் கூடுதல் நிதி கேட்டிருக்கோம்!" என்றார் பாதுகாப்பு அமைச்சர்.
நிதி அமைச்சர் பிரதமரைப் பார்த்து, "சார்! நம் நாட்டை செல்வம் மிகுந்த நாடாக வளப்படுத்தணுங்கற நோக்கத்தோட பட்ஜெட் போடறோம். இது மாதிரி செலவுகளுக்கு அதிகம் பணம் செலவழிச்சா, வளர்ச்சிக்குச் செலவழிக்கிற தொகை குறைஞ்சுடும்!" என்றார்.
"பாதுகாப்பு ஒரு நாட்டோட அடிப்படையான தேவை. வலுவான படை இருந்தாதான் நம் செல்வங்களை நம்மால பாதுகாக்க முடியும். அதனால, நம் படைபலம் கூட நம்மோட முக்கியமான செல்வம்தான். இதை மனசில வச்சுக்கிட்டு, பாதுகாப்பு அமைச்சரோட பேசி பட்ஜெட் ஒதுக்கீட்டை முடிவு செய்யுங்க!" என்றார் பிரதமர்.
பொருட்பால்
படையியல்
அதிகாரம் 77
படைமாட்சி
குறள் 761:
உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன்
வெறுக்கையுள் எல்லாம் தலை.
No comments:
Post a Comment