"மலய நாடும் சமீபத்தில் ஒரு போரில் தோற்றிருக்கிறதே! அவர்களும் வீரர்களையும், ஆயுதங்களையும் பெருமளவில் இழந்திருப்பார்களே! அது நம்மை விடச் சிறிய நாடு. அவர்களைத் தாக்கி வெற்றி கொள்ள இதுதான் சரியான தருணம்" என்றார் அரசர் வீரபாகு.
"அது சிறிய நாடுதான். ஆனாலும், இப்போது நாம் போரில் ஈடுபடுவது நமக்கு மேலும் இழப்புகளை ஏற்படுத்தும்!"
"மலய நாட்டை நாம் போரில் வென்று விட்டால், அதற்குப் பிறகு இழப்புகளை நாம் சமாளித்துக் கொள்ளலாம். மலய நாடு போரில் தோற்றதால், பலவீனமான நிலையில் இருக்கிறது. இது போன்ற ஒரு சந்தர்ப்பம் நமக்கு மீண்டும் கிடைக்காது" என்றார் அரசர், உறுதியாக.
"நீங்கள் சொன்னபடியே நடந்து விட்டது, அமைச்சரே! போரில் மலய நாட்டை நம்மால் வெற்றி கொள்ள முடியவில்லை. இந்தப் போர் நமக்குத்தான் பெரும் இழப்பை ஏற்படுத்தி இருக்கிறது!" என்றார் அரசர் வீரபாகு, வருத்தத்துடனும், ஏமாற்றத்துடனும்.
அமைச்சர் மௌனமாக இருந்தார்.
"எனக்கு ஒன்று புரியவில்லை அமைச்சரே! நம்மைப் போலவே அவர்களும் போரில் தோற்று பலவீனமான நிலையில்தான் இருந்தனர். நம்மை விடச் சிறிய நாடாக இருந்தாலும், எப்படிக் குறுகிய காலத்திலேயே தங்களைத் தயார்ப்படுத்திக் கொண்டு நம்மை வெல்ல அவர்களால் முடிந்தது?" என்றார் அரசர்.
"அரசே! நாம் நம் படைகளை வலுவாக அமைத்தது சமீபத்தில்தான். ஆனால், மலய நாட்டின் போர்ப்படை தொன்மையானது. சோழ நாடு போன்ற பெரிய நாடுகளுடன் கூட அவர்கள் போர் புரிந்திருக்கிறார்கள். நீண்ட காலமாக இருந்து வரும் படை என்பதால், அவர்களுடைய திறமை, அனுபவம், உத்தி ஆகியவை ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. அதனால், அவர்களால் எந்த ஒரு தோல்வி, அல்லது இடையூறு ஆகியவற்றிலிருந்தும் விரைவாக மீண்டு வர முடிகிறது. அதனால்தான், அவர்களுடன் இப்போது போர் செய்வது உசிதமல்ல என்று நான் கருத்துத் தெரிவித்தேன்!" என்றார் அமைச்சர், சற்றுத் தயக்கத்துடன்.
பொருட்பால்
படையியல்
அதிகாரம் 77
படைமாட்சி
குறள் 762:
உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத்
தொல்படைக் கல்லால் அரிது.
No comments:
Post a Comment