Saturday, April 22, 2023

760. பார்த்திபனுக்குப் புரிந்தது!

பல தொழில் நிறுவனங்களைத் தொடங்கி நடத்தி வந்த தனசேகர் அனைத்திலிருந்தும் ஓய்வு பெறப் போவதாக அறிவித்தார்.

"ஏன் திடீர்னு இந்த முடிவு?" என்றாள் அவர் மனைவி கோகிலா.

":திடீர்னு எனக்கு 65 வயசு ஆயிடுச்சு இல்ல! அதனாலதான்!" என்றார் தனசேகர் சிரித்துக் கொண்டே.

"நீங்க நிர்வாகத்தில ஈடுபடாம இருந்தாலும், நிறுவனங்கள்ள ஒரு டைரக்டரா இருந்தா எனக்கு வழிகாட்டியா இருக்க முடியும், இல்ல?" என்றான் அவர் மகன் பார்த்திபன்.

"பார்த்திபா! நீ அஞ்சாறு வருஷமா நம்ம நிறுவனங்களைப் பாத்துக்கற. இதுக்கு மேல உனக்கு நீயேதான் வழிகாட்டியா இருக்கணும். நீ சைக்கிள் ஓட்டக் கத்துக்கிட்டது நினைவிருக்கா? உனக்கு கத்துக் கொடுக்கறவரு நீ ஓட்டறப்ப பின் னால பிடிச்சுக்கிட்டே வருவாரு. கொஞ்ச நேரம் கழிச்சு கையை விட்டுடுவாரு. அவரு சைக்கிளைப் பிடிச்சுக்கிட்டிருக்காருன்னு நினைச்சுக்கிட்டு நீ ஓட்டிக்கிட்டிருப்ப! அப்புறம் திரும்பிப் பாத்தாத்தான் தெரியும், அவரு எப்பவோ கையை விட்டுட்டு ஒதுங்கி நின்னுட்டாருன்னு. அது மாதிரி நான் உனக்கு வழிகாட்டறதா நீ நினைச்சுக்கிட்டிருக்கே! ஆனா ரெண்டு மூணு வருஷமா நீயேதான் நம் நிறுவனங்களை நடத்திக்கிட்டிருக்கே. நான் சும்மா வேடிக்கை பாத்துக்கிட்டுத்தான் இருக்கேன்!"

பார்த்திபன் மௌனமாக இருந்தான்.

"ஆனா நீ என் வாழ்க்கையை ஆரம்பத்திலேந்துபாத்ததில்ல. அது முழுமையா இருக்கறப்பதான் பாத்திருக்க!" என்றார் தனசேகர் தொடர்ந்து.

"முழுமையான்னா?"

"நீ என்னைப் பார்த்தப்ப என் தொழில் சிறப்பா நடந்துக்கிட்டிருந்தது. எனக்கு வாழ்க்கையில எல்லா வசதிகளும் இருந்தது. எல்லாமே மகிழ்ச்சியா இருந்தது. அதைத் தவிர என் வருமானத்தில ஒரு பகுதியை கஷ்டப்படறவங்களுக்கு உதவறதுக்காக நன்கொடைகள் மூலமும், அறக்கட்டளைகள் மூலமும் பயன்படுத்திக்கிட்டிருந்தேன். அதில கிடைச்ச திருப்தியும், மனநிறைவும் என் வாழ்க்கையை இன்னும் வளமா ஆக்கின."

"ஆமாம்ப்பா. 'தொழில்ல வெற்றிகரமா இருக்கறவங்கள்ள பல பேருக்கு வாழ்க்கையில பல பிரச்னைகள் இருக்கும், நிறையப் பணம் இருந்தும் மகிழ்ச்சி இருக்காது, நிம்மதி இருக்காது, அல்லது திருப்தி இருக்காது. ஆனா உங்க அப்பா ஒரு நிறைவான வாழ்க்கை வாழறார்'னு எங்கிட்ட சில பேர் சொல்லி இருக்காங்க. நீங்க முழுமையான வாழ்க்கைன்னு சொன்னீங்களே, அதைத்தான் அவங்க குறிப்பிட்டாங்கன்னு நினைக்கிறேன்!" என்றான் பார்த்திபன்.

கரெக்ட்! இதுக்கு என்ன காரணம்னு நினைக்கற?"

"உங்களோட கடின உழைப்புதான் நினைக்கிறேன்!"

"கடின உழைப்பு மட்டும் இல்ல. எந்த சந்தர்ப்பத்திலேயும் முறையில்லாத வழியில பணம் சம்பாதிக்கக் கூடாதுன்னு நான் உறுதியா இருந்ததுதான் எனக்கு வாழ்க்கையில வளத்தையும், மகிழ்ச்சியையும் கொடுத்ததோட, என்னை அறவழியிலேயும் நடக்க வச்சுதுன்னு நினைக்கறேன்!"

தனசேகர் பார்த்திபனை உற்றுப் பார்த்தார். பார்த்திபன் சங்கடத்துடன் நெளிந்தான்.

"ஒரு உதராணம் சொல்றேன். தொழில் ஆரம்பிச்ச புதுசில எனக்கு ரொம்பப் பண நெருக்கடி. ஆர்டர்கள் கிடைக்கல. தொழிற்சாலையை நடத்த முடியாத நிலைமை. உன் அம்மாவோட நகையை நிறைய தடவை அடகு வச்சுத்தான் தொழிலை நடத்தி இருக்கேன்!" என்றுபடியே மனைவியைப் பார்த்தார் தனசேகர்.

"அதுதான் ஒவ்வொரு தடவையும் மீட்டுக் கொடுத்துடுவீங்களே!" என்றாள் கோகிலா.

"மீட்டாத்தானே மறுபடி நெருக்கடி வரும்போது அடகு வைக்க முடியும்! அப்ப சில பேர் எனக்கு ஒரு யோசனை சொன்னாங்க. என்னோட மூலப்பொருளா இருந்த ஒரு ரசாயனப் பொருளுக்கு அப்ப தட்டுப்பாடு இருந்தது. அதை அரசாங்கத்தில கோட்டா முறையில கொடுப்பாங்க. எனக்கு கோட்டாவில கிடைச்சதை சில பெரிய நிறுவனங்கள் மூணு நாலு பங்கு விலை கொடுத்து பிளாக்கில வாங்கிக்கத் தயாரா இருந்தாங்க. அப்படி நான் வித்திருந்தா என் பண நெருக்கடி பெருமளவு குறைஞ்சிருக்கும். ஆனா நான் அப்படி செய்யக் கூடாதுன்னு பிடிவாதமா இருந்தேன். எனக்குத் தேவைப்படாதபோது என்னோட கோட்டாவை வாங்கவே மாட்டேன். எல்லாரும் என்னைப் பைத்தியக்காரன்னு கூட சொன்னாங்க. அறவழியிலதான் பணம் சம்பாதிக்கணும்னு அப்படியெல்லாம் உறுதியா இருந்ததுதான் எனக்கு வாழ்க்கையில நிறைவைக் கொடுத்திருக்கு."

"இதையெல்லாம் எதுக்கு இப்ப அவங்கிட்ட சொல்றீங்க?" என்றாள் கோகிலா.

"எதுக்கு சொல்றேன்னு அவனுக்குப் புரியும்!" என்றார் தனசேகர் பார்த்திபனைப் பார்த்தபடி.

சில முறையற்ற செயல்கள் மூலம் அதிக லாபம் சம்பாதிக்க முடியும் என்று தன்னிடம் சில நண்பர்கள் யோசனை கூறியதைப் பற்றித் தெரிந்து கொண்டுதான் தந்தை இதைத் தன்னிடம் கூறுகிறார் என்பது பார்த்திபனுக்குப் புரிந்தது.

பொருட்பால்
கூழியல்
அதிகாரம் 76
பொருள் செயல் வகை

குறள் 760:
ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்
ஏனை இரண்டும் ஒருங்கு.

பொருள்: 
நல்ல வழியில் மிகுதியாகப் பணம் சேர்த்தவர்க்கு மற்ற இரு விழுப் பொருட்களான அறமும் இன்பமும் எளிதாகக் கிடைக்கும்.
அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...