பிரதீப் என்டர்பிரைசஸ் நிர்வாகிகளுடனான முக்கியமான சந்திப்புக்காக, விஜய் எஞ்சினியரிங் நிறுவனத்தின் மூத்த நிர்வாகிகள், தங்கள் அலுவலகத்தின் கான்ஃபரன்ஸ் அறையில் கூடி இருந்தனர்.
நிர்வாக இயக்குனரின் சுருக்கெழுத்தாளனான கிருஷ்ஷும், குறிப்புகள் எடுத்துக் கொள்வதற்காகப் பின் வரிசை இருக்கை ஒன்றில் அமர்ந்திருந்தான்
பிரதீப் என்டர்பிரைசஸைத் தங்கள் நிறுவனத்தின் வாடிக்கையாளராக ஆக்குவதற்கான முயற்சிக்கான சந்திப்பு அது.
கூட்டம் துவங்குமுன், விஜய் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் விஜயன், பிரதீப் என்டர்பிரைசஸ் நிர்வாக இயக்குனர் பிரதீப்பிடம், "சார்! உங்களுக்கு ஆட்சேபம் இல்லேன்னா, நாம விவாதிக்கிற முக்கியமான பாயின்ட்களை எங்க ஸ்டெனோ கிருஷ் குறிப்பு எடுத்துப்பாரு" என்றார்.
பிரதீப் ஆமோதிப்பதுபோல் தலையசைத்தார்.
கூட்டம் முடிந்ததும், கூட்டத்தில் கலந்து கொண்ட மூத்த நிர்வாகிகளைத் தன் அறைக்கு அழைத்தார் நிர்வாக இயக்குனர் விஜயன். கிருஷ்ஷும் அழைக்கப்பட்டு, நிர்வாகிகளுக்குப் பின்னால் அமர வைக்கப்பட்டான்.
பிரதீப் என்டர்பிரைசஸ் அதிகாரிகளுடன் தாங்கள் பேசிய விவரங்கள் பற்றி அவர்கள் விவாதித்தனர்.
"சார்! நாம சொன்ன இந்த யோசனை அவங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருக்குன்னு நினைக்கிறேன்!" என்றார் மார்க்கெடிங் மானேஜர் தனபால், உற்சாகமாக.
விஜயன் பின்னால் உட்கார்ந்திருந்த கிருஷ்ஷைப் பார்க்க, கிருஷ் தலையைப் பக்கவாட்டில் ஆட்டினான்.
"தனபால்! ஐ திங்க் யூ ஆர் ராங். அவங்களுக்கு இந்த யோசனை பிடிக்கலேன்னு நினைக்கிறேன்!" என்றார் விஜயன்.
"எப்படி சார் சொல்றீங்க?" என்றார் தனபால்.
"கிருஷ்ஷோட நோட்ஸில அப்படித்தான் இருக்கு. இல்லை, கிருஷ்?" என்றார் விஜயன்.
அனைவரும் பின்னால் திரும்பி, கிருஷ்ஷைப் பார்த்தனர். அவன் மௌனமாகத் தலையாட்டினான்.
"இல்லை சார்! எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு. அவங்க இதை மறுத்து எதுவும் சொல்லல. கிருஷ் தப்பா நோட்ஸ் எழுதி இருக்காரு!" என்றார் தனபால், உறுதியாக.
"அவங்க எதுவும் சொல்லல, தனபால். அதனால அவங்க அதை ஏத்துக்கிட்டாங்கன்னு அவசியம் இல்லை. ஒரு மரியாதைக்காக அவங்க மறுப்பு சொல்லாம இருந்திருக்கலாம்!"
"அப்ப எப்படி சார், கிருஷ் எடுத்த நோட்ஸில அவங்க அதை ஏத்துக்கலேன்னு இருக்கும்?"
"தனபால்! கிருஷ் எடுத்தது ஷார்ட்ஹேண்ட் நோட்ஸ் இல்ல. அவங்களோட முகக் குறிப்பிலேந்து அவர் புரிஞ்சுக்கிட்டதைத்தான் அவர் குறிப்பு எடுத்திருக்கார்!" என்றார் விஜயன், சிரித்தபடி.
அனைவரும் குழப்பத்துடன் விஜயனைப் பார்த்தார்.
"நாம மத்தவங்களோடபேசறப்ப, அவங்க பேச்சைக் கேட்கறதிலதான் கவனம் செலுத்தறோம். அவங்க முகக் குறிப்பை கவனிக்கறதில்ல. மனிதர்கள் மௌனமாக இருக்கறப்ப கூட பல செய்திகளை அவங்க முகக் குறிப்பிலேந்து நாம புரிஞ்சுக்க முடியும். கிருஷ் என்னோட சுருக்கெழுத்தாளரா இருக்கற இந்த ரெண்டு மாசத்தில, அவர்கிட்ட இந்தத் திறமை இருக்குன்னு நான் புரிஞ்சுக்கிட்டேன். என் அறைக்கு வந்து யாராவது எங்கிட்ட பேசிட்டுப் போனப்பறம், அவங்க முகக் குறிப்பிலேந்து தான் புரிஞ்சுக்கிட்டதை, கிருஷ் எங்கிட்ட சொல்லுவாரு. அதெல்லாம் சரியா இருந்திருக்கு. என்னால உணர முடியாத விஷயங்களை அவர் எனக்கு உணர்த்தி இருக்காரு. அதனாலதான், இந்த முக்கியமான மீட்டிங்குக்கு அவரை வரச் சொன்னேன்!" என்றார் விஜயன்.
பொருட்பால்
அமைச்சியல்
அதிகாரம் 71
குறிப்பறிதல்
குறள் 701:
கூறாமை நோக்கக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
மாறாநீர் வையக் கணி.
பொருள்:
ஒருவர் எதுவும் பேசாமலிருக்கும் போதே அவர் என்ன நினைக்கிறார் என்பதை முகக்குறிப்பால் உணருகிறவன் உலகத்திற்கே அணியாவான்.
No comments:
Post a Comment