Tuesday, May 30, 2023

703. வரதுவுக்கு என்ன வேலை அங்கே?

"பூனையை மடியில கட்டிக்கிட்டு சகுனம் பாக்கற மாதிரி, சேம்பர் ஆஃப் காமர்ஸ் மீட்டிங்குக்குப் போறப்ப இந்த வரதுவை ஏன் கூட அழைச்சுக்கிட்டுப் போறாரு நம்ம எம். டி?" என்றான் சாந்தன் எரிச்சலுடன்.

"ஏன், உன்னை அழைச்சுக்கிட்டுப் போகலியேன்னு உனக்குப் பொறாமையா?" என்றாள் அவன் பக்கத்து இருக்கையில் அமைந்திருந்த சரளா.

"மானேஜர்னு ஒத்தர் இருக்காரு. அவரையே அழைச்சுக்கிட்டுப் போகல. என்னை அழைச்சுக்கிட்டுப் போகலையேன்னு நான் ஏன் வருத்தப்படப் போறேன்?" என்றான் சாந்தன்.

"மானேஜரை அழைச்சுக்கிட்டுப் போனா உங்களையெல்லாம் யார் கட்டி மேய்க்கறது? மானேஜர் அவர் அறைக்குள்ள இருக்கறப்பவே நீங்க இப்படி அரட்டை அடிக்கிறீங்க. அவரும் ஆஃபீஸ்ல இல்லேன்னா இது ஆஃபீஸ் மாதிரியா இருக்கும்?" என்றார் மூத்த ஊழியர் குமாரசாமி.

"பெரிசுக்குத் தான் மட்டும்தான் வேலை செய்யறதா நினைப்பு! இவரு மாய்ஞ்சு மாய்ஞ்சு செய்யற வேலையை விட நாம பேசிக்கிட்டே செய்யற வேலை அதிகம்!" என்று சரளாவுக்கு மட்டும் கேட்கும்படி சிரித்துக் கொண்டே முணுமுணுத்தான்  சாந்தன்.

சேம்பர் ஆஃப் காமர்ஸ் கூட்டம் நடந்து கொண்டிருந்த அறைக்குள் வரதராஜன் ஒரு ஓரமாக அமர்ந்திருந்தான்.

நல்லசிவம் சேம்பர் ஆஃப் காமர்ஸ் கூட்டங்களுக்குத் தன் உதவியாளர் ஒருவரை அழைத்து வருவது மற்ற உறுப்பினர்களுக்குப் பிடிக்காவிட்டாலும், அவ்வாறு ஒரு உதவியாளரை அழைத்து வருவதற்கு விதிகளில் அனுமதி இருந்ததால் அதற்கு யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.

கூட்டம் முடிந்து தன் அலுவலகத்துக்கு வந்து தன் அறைக்குள் சென்ற நல்லசிவம் சில நிமிடங்களுக்குப் பிறகு வரதராஜனைத் தன் அறைக்கு அழைத்தார்.

"ரெண்டு பேரும் சேர்ந்து மீட்டிங் போயிட்டு இப்பதானே வந்தாங்க! அதுக்குள்ள எதுக்கு அவனைக் கூப்பிடறாரு எம் டி?" என்றான் சாந்தன் சரளாவிடம்.

"சேம்பர் ஆஃப் காமர்ஸ் மீட்டிங்ல நடந்த விஷயங்களைப் பற்றி விவாதிக்கறதுக்காக இருக்கும்!" என்றாள் சரளா கேலியாக.

"சொல்லு வரதா?" என்றார் நல்லசிவம்.

"நீங்க ஜாடை காட்டினப்பல்லாம் நீங்க ஜாடையில குறிப்பிட்டுக் காட்டின ஆட்களை கவனிச்சேன். சம்பந்தம் சார் பேசினதை நிறைய பேர் விரும்பல, கதிரேசன் சார் சொன்ன யோசனை பல பேருக்குப் பிடிச்சிருந்தது. சுந்தரேசன் சார், சண்முகம் சார் ரெண்டு பேருக்கு மட்டும் அதில விருப்பமில்லை. அப்புறம்..."

வரதராஜன் சொன்னதை கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்த நல்லசிவம், அவன் சொல்லி முடித்ததும், "எப்படிடா! நான் பக்கத்தில உக்காந்து அவங்க முகங்களைப் பார்த்துக்கிட்டிருக்கேன். நீ தூரத்தில உக்காந்துக்கிட்டிருக்க. எனக்குப் புலப்படாத விஷயங்களெல்லாம் உனக்குப் புலப்படுதே! ஒவ்வொரு தடவையும் இதைப் பாத்து ஆச்சரியப்படறேன் நான்!" என்றார்.

"எனக்குத் தோணினதை சொல்றேன் சார். நான் சொல்றதெல்லாம் சரியாங்கறது உங்களுக்குத்தான் தெரியும்!" என்றான் வரதராஜன் சங்கடத்துடன் நெளிந்தபடி.

"அதுதான் ஒவ்வொரு தடவையும் சரியா இருக்கே! உனக்கு இருக்கற திறமை கடவுள் உனக்குக் க் கொடுத்த ஒரு கிஃப்ட். நீ எனக்குக் கிடைச்ச கிஃப்ட்!" என்ற நல்லசிவம், "மீட்டிங்குக்கெல்லாம் உன்னை ஏன் நான் அழைச்சுக்கிட்டுப் போறேன்னு ஆஃபீஸ்ல யாராவது கேட்டாங்களா?" என்றார் தொடர்ந்து.

"கேட்டாங்க. நீங்க சாப்பிட வேண்டிய மாத்திரைகளை உங்களுக்கு நேரத்துக்கு எடுத்துக் கொடுக்கறதுக்காகத்தான் என்னை அழைச்சுக்கிட்டுப் போறீங்கன்னு சொல்லி இருக்கேன்!" என்றான் வரதராஜன்.

"குட்!" என்றார் நல்லசிவம். 

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 71
குறிப்பறிதல்

குறள் 703:
குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்
யாது கொடுத்தும் கொளல்.

பொருள்:
தான் குறிப்புச் செய்ய, அதைக் கண்டு பிறர் முகத்தையும் கண்ணையும் பார்த்தே அவர் மனக்கருத்தைக் கண்டு சொல்லும் திறம் மிக்கவரைத் தன்னிடம் இருக்கும் செல்வங்களுள் எதைக் கொடுத்தேனும் துணையாக வைத்துக் கொள்ள வேண்டும்.

      அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...