Sunday, April 23, 2023

699. நம் ஊர்ப் பையன்!

"அப்ரூவல் விஷயமா அமைச்சரைப் பாக்கப் போனேனா? பாத்தா, அங்கே நம்ம மாணிக்கம்தான் அமைச்சரோட தனிச் செயலரா இருக்கான்!" என்றார் முருகப்பன்.

"எந்த மாணிக்கம்?" என்றார் அவர் அண்ணன் கணேசன்.

"நம்ம ஊர்ப் பையன்தான். கதிரேசனோட பையன்!"

"ஓ, அவனா? ஐ ஏ எஸ் படிச்சுட்டு அரசு அதிகாரியா இருக்கான்னு சொன்னாங்களே, அவனா? என்ன சொன்னான்?"

"ஃபைலைப் பாத்துட்டு அமைச்சர்கிட்ட பேசறேன்னு சொல்லி இருக்கான். நான் விசாரிச்சதில, அவன் அமைச்சருக்கு ரொம்ப நெருக்கமானவனாம். அமைச்சரே முதல்வர்கிட்ட கேட்டு, அவனைத் தன்னோட தனிச் செயலரா நியமிக்க வச்சிருக்காராம்!" என்றார் முருகப்பன், உற்சாகத்துடன்.

"அவ்வளவு நெருக்கமானவனா? அப்ப நம்ம வேலை சுலபமா முடிஞ்சுடும்னு சொல்லு!" என்று தம்பியின் உற்சாகத்தைப் பகிர்ந்து கொண்டார் கணேசன்

"என்னப்பா இப்படிச் சொல்ற?" என்றார் முருகப்பன், அதிர்ச்சியுடன்.

"ஆமாங்க. உங்க அப்ளிகேஷனைப் பார்த்தேன். விதிமுறைப்படி, அதுக்கு நாங்க அங்கீகாரம் கொடுக்க முடியாதே!" என்றார் அமைச்சரின் தனிச் செயலர் மாணிக்கம்.

"அதான் கீழேந்து எல்லா நிலைகளிலேயும் ரெகமெண்ட் பண்ணி இருக்காங்களே!" என்ற முருகப்பன், "இதுக்கெல்லாம் நாங்க எவ்வளவு கஷ்டப்பட்டிருப்போம்னு உன்னால புரிஞ்சுக்க முடியுமே!" என்றார் சற்றுத் தாழ்ந்த குரலில், கண்ணைச் சிமிட்டியபடி.

"விதிமுறைகளுக்கு உட்படாத எதையும் அமைச்சர் அங்கீகரிக்க மாட்டார்!" என்றார் மாணிக்கம், சுருக்கமாக.

"என்னப்பா இது? நீ அமைச்சருக்கு நெருக்கமானவன், நீ சொன்னா அமைச்சர் மறுக்க மாட்டார்னு கேள்விப்பட்டிருக்கேன். நீ நம்ம ஊர்க்காரன். எங்களுக்கு உதவி செய்யக் கூடாதா?"

"ஐயா! அமைச்சர் என் மேல நம்பிக்கை வச்சுத்தான், என்னைத் தனிச் செயலரா வச்சுக்கிட்டிருக்காரு. அவர் எல்லாம் விதிமுறைகள்படி நடக்கணும்னு நினைக்கிறவரு. அவரோட விருப்பத்துக்கு மாறான எதையும் நான் செய்ய மாட்டேன். என்னை மன்னிச்சுடுங்க!" என்றார் மாணிக்கம்.

பொருட்பால்
அமைச்சியல்
அதிகாரம் 70
மன்னரைச் சேர்ந்தொழுகல்

குறள் 699:
கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்
துளக்கற்ற காட்சி யவர்.

பொருள்:
சலனம் அற்ற அறிவை உடையவர்கள், தாம் ஆட்சியாளரால் நெருக்கமானவர்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டவர்கள் என்று எண்ணி, ஆட்சியாளர் விரும்பாதவற்றைச் செய்ய மாட்டார்.

      அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...