முத்துக்குமரன் பதில் சொல்லாமல் சிரித்தான்.
"ரொம்பக் கஷ்டப்படாதேடா! நாம குடும்பம் நடத்த உன் சம்பளம் போதும். எதுக்கு ஓவர்டைம் எல்லாம் பார்த்து உடம்பைக் கெடுத்துக்கற?" என்றாள் முத்துக்குமரனின் அம்மா சியாமளா. ஆனால், முத்துக்குமரன் ஓவர்டைம் செய்து பணம் சம்பாதிப்பதில் குறியாக இருந்தான்.
முத்துக்குமரன் வேறு நல்ல வேலைக்குப் போன பிறகும், பிறகு சொந்தத் தொழிலைத் துவங்கிய பிறகும் கூட, மேலும் எப்படிப் பொருள் ஈட்டலாம் என்பதிலேயே கவனம் செலுத்தி வந்தான்.
"ஏண்டா இப்படிப் பணம், பணம்னு அலையற?" என்றாள் சியாமளா.
திருமணத்துக்குப் பிறகு அவன் மனைவி ரம்யாவும் இதைத்தான் கேட்டாள். ஆனால், முத்துக்குமரன் பணம் சம்பாதிப்பதுதான் தன் வாழ்க்கையின் ஒரே நோக்கம் என்பது போல் செயல்பட்டான்.
முத்துக்குமரன் தன் குடும்பத்துடன் தங்கள் குல தெய்வம் கோவிலுக்குப் போனான். வழிபாடு முடிந்ததும், முத்துக்குமரன் தன் தாயிடம், "அம்மா! நம்ம ஊருக்குப் போயிட்டு வரலாமா?" என்றான்.
சியாமளாவின் முகம் மாறியது.
"அங்கே எதுக்குடா போகணும்?" என்றாள் அவள்.
"கந்தப்பனைப் பார்க்கத்தான்!" என்றான் முத்துக்குமரன், சிரித்தபடி.
"உன் அப்பா வாங்கின கொஞ்சம் கடனுக்காக, அவரை ஏமாத்தி ஏதோ பத்திரத்தில எல்லாம் கையெழுத்து வாங்கிக்கிட்டு, அவர் போனப்பறம் நம்ம சொத்தையெல்லாம் பிடுங்கிக்கிட்டு நம்மை நடுத்தெருவில நிக்க வச்சு, நம்மை ஊரை விட்டே விரட்டிட்டானே அந்தக் கந்தப்பன், அவனைப் பார்க்கவா?" என்றாள் சியாமளா, கோபத்துடனும், ஆற்றாமையுடனும்.
"ஆமாம்மா!" என்றான் முத்துக்குமரன், சிரித்தபடி.
கந்தப்பன் விட்டு வாசலில் காரை நிறுத்திய முத்துக்குமன், "கந்தப்பன் இருக்காரா?" என்று காரிலிருந்தபடியே உரக்கக் கூவினான்.
வீட்டுக்குள்ளிருந்து வெளியே வந்த கந்தப்பன், "யாரு?" என்றான்.
"என்ன, கந்தப்பன் மாமா, என்னைத் தெரியலியா? இதோ, பின்னால உக்காந்திருக்காங்களே என் அம்மா, அவங்களைக் கூடவா தெரியல?" என்றான் முத்துக்குமரன், சிரித்தபடி.
கந்தப்பனின் முகம் வெளிறியது.
"இப்ப எதுக்கு இங்க வந்திருக்க?" என்றான் அவன்.
"இதென்ன கேள்வி? எனக்கு இந்த ஊர்ல நாலு வீடு இருக்கு. நான் இங்கே வரக் கூடாதா?"
"என்ன சொல்ற?" என்று கந்தப்பன் கேட்டபோதே, அவனுக்கு உண்மை புரிய ஆரம்பித்தது.
சென்னையிலிருந்து ஒருவர் அந்த ஊரில் நான்கு வீடுகளை வாங்கி இருப்பதாகவும், சில நாட்களில் பத்திரப் பதிவு நடக்கப் போவதாகவும், வீட்டை வாங்கியவர் யார் என்பது அப்போதுதான் தெரிய வருமென்றும் சில நாட்களுக்கு முன் அந்த ஊரில் ஒரு செய்தி பரவி, அவன் காதுக்கும் எட்டி இருந்தது.
'அப்ப, அந்த நாலு வீட்டையும் வாங்கினது இவன்தானா?'
"எங்க சொத்தையெல்லாம் பறிச்சுக்கிட்டு, எங்களை இந்த ஊரை விட்டே போக வச்சீங்க. இப்ப இந்த ஊர்ல எங்களுக்கு நாலு வீடு இருக்கு. இந்த ஊர்ல நாங்க வந்து இருக்கப் போறதில்ல. ஆனா நீங்க எங்ககிட்டேந்து பிடுங்கின ஒரு வீட்டுக்கு பதிலா, இப்ப எங்ககிட்ட நாலு வீடு இருக்கு. இதை உங்ககிட்ட சொல்லிட்டுப் போகத்தான் வந்தேன்!"
கந்தப்பனின் பதிலை எதிர்பார்க்காமல், காரைக் கிளப்பினான் முத்துக்குமரன்.
"என்னடா இதெல்லாம்?" என்றாள் சியாமளா.
"நம்ம சொத்தையெல்லாம் பிடுங்கிக்கிட்டு நம்மை நடுத்தெருவில நிறுத்தன எதிரியைப் பழி வாங்க நல்ல வழி, நாம நிறையப் பணம் சம்பாதிச்சு, அதை அவன் கண்ணுக்கு நேரா காட்டி, அவனை வயிறெறிய வைக்கறதுதான். அதனாலதான், நான் ஆரம்பத்திலேந்தே பணம் சம்பாதிக்கறதிலே குறியா இருந்தேன்!" என்றான் முத்துக்குமரன், தன் தாயிடம்.
பொருட்பால்
கூழியல்
அதிகாரம் 76
பொருள் செயல் வகை
குறள் 759:
செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எஃகதனிற் கூரிய தில்.
No comments:
Post a Comment