சற்று நேரம் காத்திருந்த பின், தன் முறை வருவதற்கு நீண்ட நேரம் ஆகும் என்று தோன்றியதால், அவரை மற்றொரு நாள் பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து வீரா இருக்கையிலிருந்து எழுந்திருக்க முயன்றபோது, வங்கி மேலாளரின் அறைக்குள்ளிருந்து வெளியே வந்த பியூன், வீராவைப் பார்த்து, "சார்! மானேஜர் உங்களை உள்ளே வரச் சொல்றாரு!" என்றான்.
உள்ளே சென்ற வீரா, வங்கி மேலாளரிடம், "வெளியில அஞ்சாறு பேர் காத்துக்கிட்டிருக்கறதால, உங்களைப் பார்க்க நேரம் ஆகும்னு நினைச்சேன்!" என்றான்.
"அவங்களும் உங்களை மாதிரி தொழிலதிபர்கள்தான். அவங்கள்ளாம் தங்களோட கடன் தவணையைக் கட்டாததால, பாங்க்லேந்து நோட்டீஸ் அனுப்பிட்டோம், அதைப் பாத்துப் பதைபதைச்சுப் போய், 'நடவடிக்கை எதுவும் எடுத்துடாதீங்க, இன்னும் கொஞ்சம் அவகாசம் கொடுங்க!'ன்னு கேக்கறதுக்காக வந்திருக்காங்க. உங்களுக்குத்தான் அந்தப் பிரச்னை இல்லையே! நீங்க கடனே வாங்காம தொழில் பண்றவரு. எப்பவாவது கடன் வாங்கினாலும், சரியாத் திருப்பிக் கட்டிடறவரு. அனாலதான், கண்ணாடி வழியா உங்களைப் பார்த்ததும், உங்களை முதல்ல பார்த்துடலாம்னு வரச் சொன்னேன்!" என்றார் வங்கி மேலாளர்.
வங்கி மேலாளரிடம் பேசி விட்டு வெளியே வந்த வீரா, அங்கே பதட்டத்துடனும், கவலையுடனும் அமர்ந்திருந்த தொழிலதிபர்களின் முகங்களைப் பார்த்தான். உடனே அவனுக்குக் கண்ணனின் நினைவு வந்தது.
கண்ணன், வீரா இருவரும் பொறியியல் கல்லூரியில் படித்தபோதே, சொந்தத் தொழில் துவங்க வேண்டும் என்ற லட்சியத்தைக் கொண்டிருந்தனர். படிப்பை முடித்ததும், இருவரும் ஒரு பெரிய தொழில் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தனர்.
வேலையில் சேர்ந்து இரண்டு வருடங்களுக்குப் பிறகு, கண்ணன் வீராவிடம், "இந்த ரெண்டு வருஷத்தில நாம தொழிலை நல்லாக் கத்துக்கிட்டோம். நாம சொந்தத் தொழில் ஆரம்பிச்சுடலாம். அரசாங்கத்தில, புதுக்கோட்டை பக்கத்தில புதுசா ஒரு தொழிற்பேட்டை ஆரம்பிக்கறாங்க. நாம அப்ளை பண்ணினா, நமக்கு இடம் கிடைக்கும் - கட்டிடத்தோட. அதுக்குத் தவணை முறையில பணம் கொடுத்தாப் போதும். பாங்கல கடன் வாங்கி இயந்திரங்கள் வாங்கிக்கலாம். நாலஞ்சு வருஷத்தில கடனையெல்லாம் அடைச்சுடலாம்!" என்றான்.
"நம்மகிட்ட இருக்கற பணத்தை வச்சு சின்னதா ஒரு தொழில் ஆரம்பிச்சு, அந்தத் தொழில் வளர்ந்தப்பறம் கடன் வாங்கினா பரவாயில்ல. கடன் வாங்கித் தொழில் ஆரம்பிக்கறது சரியா இருக்குமா? ரெண்டு மூணு வருஷம் ஆகட்டும். நம் கையில கொஞ்சம் பணம் சேத்துக்கிட்டு, அப்புறமா தொழில் ஆரம்பிக்கலாம்!" என்றான் வீரா.
"அப்படியெல்லாம் என்னால காத்துக்கிட்டிருக்க முடியாது. நீயும் என்னோட சேர்ந்தா நல்லா இருக்கும்னு நினைச்சேன். பரவாயில்ல. நான் தனியாவே ஆரம்பிக்கறேன்!" என்றான் கண்ணன்.
அடுத்த சில நாட்களில், கண்ணன் வேலையை விட்டுச் சென்று விட்டான். போகும்போது வீராவிடம் சொல்லிக் கொள்ளக் கூட இல்லை. தன் யோசனையை நண்பன் ஏற்றுக் கொள்ளாதது அவனுக்கு ஏமாற்றத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தி இருக்க வேண்டும்.
சில வருடங்களுக்குப் பிறகு, வீரா தான் திட்டமிட்டபடியே, தான் சேமித்த பணத்தை முதலீடு செய்து, சிறிதாகத் தொழில் ஆரம்பித்து, சில வருடங்களில் அதை நிலைபெறச் செய்து விட்டான்.
தொழில் வளர்ச்சி அடைந்த பிறகு, அவ்வப்போது தேவைக்காக வங்கியில் சிறிய அளவுக்குக் கடன் வாங்கி, அதை உரிய காலத்தில் திருப்பிச் செலுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தான் வீரா.
கண்ணனைப் பற்றி அப்புறம் தகவல் ஏதுமில்லை. நிச்சயம், தான் விரும்பியபடி அவன் தொழிலை ஆரம்பித்திருப்பான். கடன் வாங்கித்தான் ஆரம்பித்திருப்பான்!
கடன் தொகையைத் திரும்பச் செலுத்த முடியாமல் வங்கி மேலாளரின் அறைக்கு வெளியே பதட்டத்துடன் அமர்ந்திருந்த தொழிலதிபர்களின் நிலை தன் நண்பனுக்கு ஏற்பட்டிருக்கக் கூடாது என்று நினைத்துக் கொண்டான் வீரா.
பொருட்பால்
கூழியல்
அதிகாரம் 76
பொருள் செயல் வகை
குறள் 758:
குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று
உண்டாகச் செய்வான் வினை.
No comments:
Post a Comment