Friday, April 21, 2023

698. கதிரவனுக்குப் புரியவில்லை!

"என்ன தலைவரே இது? கரிகாலன் என்னை திடீர்னு அமைச்சர் பதவியிலேந்து நீக்கி இருக்கான். நான் எந்தத் தப்பும் செய்யலியே!" என்றார் கதிரவன் கட்சித் தலைவர் நலங்கிள்ளியிடம்.

"அமைச்சர்களை நீக்கறது முதலமைச்சரோட உரிமை!" என்றார் நலங்கிள்ளி.

"அது சரிதான். ஆனா நான் ஒரு சீனியர் அமைச்சர். கட்சியிலேயும் அவனை விட சீனியர். வயசிலேயும் பெரியவன். அந்த மரியாதைக்காகவாவது என்ன பிரச்னைன்னு எங்கிட்ட கேட்டிருக்கணும் இல்ல?"

"நீங்க சீனியரா இருக்கறதுதான் பிரச்னை!" என்றார் நலங்கிள்ளி.

"என்ன சொல்றீங்க?"

இதற்கு பதில் சொல்ல நலங்கிள்ளி யத்தனித்தபோது, அவருடைய கைபேசி ஒலித்தது.

""முதல்வர்தான் கூப்பிடறாரு!" என்ற நலங்கிள்ளி, தொலைபேசியில், "சொல்லுங்க தம்பி!" என்றார்.

மறுமுனையியில் முதல்வர் ஏதோ சொல்ல, "சரி. அப்படியே செஞ்சுடலாம். எங்கிட்ட விட்டுடுங்க. நான் பாத்துக்கறேன்!" என்று கூறி உரையாடலை முடித்தார்.

";நான் கரிகாலன்கிட்ட பேசினதை கவனிச்சீங்களா?" என்றார் நலங்கிள்ளி கதிரவனிடம்.

"நீங்க, எதைப் பத்திப் பேசினீங்கன்னு எனக்குத் தெரியலியே!"

"நான் அதைக் கேக்கல. நான் முதல்வர்கிட்ட எப்படிப் பேசினேன்னு கவனிச்சீங்களா? அவர் முதல்வர் ஆறதுக்கு முன்னால அவர்கிட்ட நான் எப்படிப் பேசுவேன்னு கவனிச்சிருப்பீங்களே! அவரைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டு, வா, போன்னுதான் பேசுவேன். ஏன், ஆரம்ப காலத்தில அவரை வாடா போடான்னு கூடப் பேசி இருக்கேன். ஆனா இப்ப அவர் முதல்வர் ஆயிட்டாரு. அவர் பதவிக்கான மரியாதையைக் கொடுத்துத்தானே அவர்கிட்ட பேசணும்!"

"அப்படின்னா..?" என்றார் கதிரவன் புரிந்தது போல்.

"நீங்க மூத்த தலைவர்தான். ஆனா கரிகாலன் முதல்வர் ஆனப்பறம், அவரோட அமைச்சரவையில ஒரு அமைச்சரா இருந்துக்கிட்டு நீங்க அவரை வா, போன்னு பேசி இருக்கீங்க, மத்தவங்க முன்னால கூட! மத்தவங்ககிட்ட முதல்வரைப் பத்திப் பேசறப்ப அவன், இவன்னு பேசி இருக்கீங்க. ஏன், இப்ப எங்கிட்டபேசறப்ப கூட அப்படித்தானே பேசினீங்க? பதவியில இருக்கறவங்ககிட்ட உரிமையோடயோ, நெருக்கத்தோடயோ பேசினா அதை அவங்க விரும்ப மாட்டாங்க. நீங்க அப்படிப் பேசினது பிடிக்காமதான் முதல்வர் உங்களைத் தூக்கிட்டாரு. கொஞ்ச நாள் கழிச்சு மறுபடி ஒரு வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கலாம். அப்பவாவது பார்த்து நடந்துக்கங்க!" என்றார் நலங்கிள்ளி.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 70
மன்னரைச் சார்ந்தொழுதல்

குறள் 698:
இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற
ஒளியோடு ஒழுகப் படும்.

பொருள்:
ஆட்சியாளருடன் பழகும்போது இவர் என்னைக் காட்டிலும் வயதில் சிறியவர்; இவர் உறவால் எனக்கு இன்ன முறை வேண்டும் என்று எண்ணாமல், ஆட்சியாளர் இருக்கும் பதவியை எண்ணி அவருடன் பழக வேண்டும்..

      அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...