Wednesday, April 19, 2023

697. அமுதவல்லி

"நல்லது அமைச்சரே! நாட்டில் குற்றம் செய்பவர்களைக் கண்டுபிடித்து அவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கி, அதன் மூலம் நாட்டில் குற்றச் செயல்கள் குறைக்கப்பட்டுள்ளன என்று நீங்களும் காவல் தலைவரும் கூறியதைக் கேட்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. சிறையில் அடைக்கப்பட்டுள்ள முக்கியக் குற்றவாளிகள் பற்றிய நிகழ்வுகள் ஏதேனும் உண்டா?" என்றார் அரசர் பத்மபத்ரன்

"அப்படி எதுவும் இல்லை அரசே! தங்கள் ஆணைப்படி சிறையில் உள்ள அனைவருக்கும் நல்ல உணவு அளிக்கப்பட்டு, மருத்துவர்களைக் கொண்டு அவர்கள் உடல்நலம் பேணப்படுகிறது. ஒரு சிலர் வயதானதாலோ, நோய்வாய்ப்பட்டோ இறந்தால் அவர்கள் உறவினர்களுக்குத் தெரிவிக்கப்பட்டு இறந்தவர்களுக்கான இறுதிச் சடங்குகள் சிறப்பாகச் செய்யப்படுகின்றன. தங்கள் ஆட்சியில் எல்லாமே சிறப்பாகத்தான் நடக்கின்றன, அரசே!" என்றார் அமைச்சர்.

அரசர் சற்று நேரம் மௌனமாக இருந்து விட்டு, "வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருக்கும் கைதிகள் யாரேனும் இருக்கிறார்களா?" என்றார்.

"அரசே! வீட்டுச் சிறையில் யாரையும் வைக்கும் நடைமுறை நம் நாட்டில் இல்லை. தங்கள் தந்தையர் காலத்திலிருந்தே இந்த நிலைதானே இருந்து வருகிறது?" என்றார் அமைச்சர்.

ரசரைப் பார்த்து விட்டு வெளியே வந்ததும், "அமைச்சரே! அரசர் வீட்டுச் சிறையில் இருப்பவர்கள் பற்றிக் கேட்டதற்கு இல்லை என்று சொல்லி விட்டீர்களே!" என்றார் காவல் தலைவர், அமைச்சரிடம்.

"ஆமாம். ஏன் நீங்கள் யாரையாவது வீட்டுச் சிறையில் வைத்திருக்கிறீர்களா என்ன?" என்றார் அமைச்சர் வியப்புடன்.

"அமைச்சரே! அமுதவல்லி..."

"காவல் தலைவரே! அமுதவல்லியை நாம் வீட்டுச் சிறையில் வைக்கவில்லை. பத்ம்பத்ரரின் தந்தை துங்கபத்ரர் அரசராக இருந்தபோது அவர் விருப்பப்படி அமுதவல்லி தன் வீட்டுக்குள்ளேயே பாதுகாப்பாக இருந்து கொண்டு தன் வாழ்க்கையை நடத்துவதற்கான வசதிகளைச் செய்து கொடுத்திருக்கிறோம். அவ்வளவுதான்!" என்றார் அமைச்சர்.

"அமைச்சரே! அமுதவல்லி துங்கபத்ரரின் காதலி..."

"காவல் தலைவரே! தன் ரகசியக் காதல் தன் மகனுக்கோ மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கோ தெரியக் கூடாது என்பதற்காகத்தான் துங்கபத்ரர் இப்படி ஒரு ஏற்பாட்டைச் செய்தார். அமுதவல்லியை யாரும் சந்திக்காமல் இருக்கவும், அமுதவல்லியே யாரிடமும் இது பற்றிப் பேசாமல் இருக்கவும்தான் இந்த ஏற்பாடு. உங்கள் வீட்டிலும், என் வீட்டிலும் பாதுகாப்புக்காகக் காவலர்கள் இருப்பதைப் போல்தான் அமுதவல்லியின் வீட்டிலும் இருக்கிறார்கள். அமுதவல்லியின் ஆயுட்காலம் வரை இது தொடர வேண்டும் என்பதும், நம் இருவரைத் தவிர வேறு யாருக்கும் இது பற்றித் தெரியக் கூடாது என்பதும் துங்கபத்ரரின் விருப்பம்! இது உங்களுக்கு நினைவிருக்கிறது அல்லவா?" என்றார் அமைச்சர்.

"ஆனால் அரசர் இது பற்றிக் கேட்டதைப் பார்த்தால் அவருக்கு இது பற்றித் தெரிந்திருக்கும் போல் இருக்கிறதே!"

"அரசர் தெரிந்து கேட்டாரோ, ஊகத்தில் கேட்டாரோ எனக்குத் தெரியாது. ஆனால் நம் அரசரைப் பொருத்தவரை இது அவருக்குத் தேவையற்ற விஷயம், எந்த விதத்திலும் பயனற்ற விஷயமும் கூட அதனால்தான் அவர் குறிப்பிட்டுக் கேட்ட பிறகும் நான் அப்படிச் சொன்னேன். நான் சொன்னது உண்மைதானே! நாம் யாரையும் வீட்டுச் சிறையில் வைக்கவில்லையே! சிலருடைய வீடுகளுக்குப் பாதுகாப்பு அளித்திருக்கிறோம், அவ்வளவுதானே!" என்றார் அமைச்சர் சிரித்தபடி.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 70
மன்னரைச் சார்ந்தொழுதல்

குறள் 697:
வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்
கேட்பினும் சொல்லா விடல்.

பொருள்:
அரசர் விரும்புகின்றவற்றை மட்டும் சொல்லிப் பயனில்லாதவற்றை அவரே கேட்ட போதிலும் சொல்லாமல் விட வேண்டும்.

      அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...