இருவரும் அந்த மடத்தில் சீடர்களாக இருப்பவர்கள்.
மடத்தின் தலைவர் சாந்தானந்தர், மடத்துக்கு நன்கொடை அளித்தவர்களை கௌரவிப்பதற்காக ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்ததைப் பற்றித்தான் விஜயன் இவ்வாறு குறிப்பிட்டான்.
நிகழ்ச்சி நடப்பதற்கு ஒரு வாரம் முன்பு, மடத்தில் உள்ள சீடர்கள் அனைவரையும் அழைத்து, நிகழ்ச்சி எப்படி நடைபெற வேண்டும் என்பது பற்றி விவாதித்தார் சாந்தானதர்.
இறுதியில், "இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யற குழுவில பொருளாளர் இருக்கறதால, இந்த நிகழ்ச்சி முடிகிற வரையில் பொருளாளரோட வேலையை விஜயன் பாத்துக்கட்டும்!" என்ற சாந்தானந்தர், பொருளாளரைப் பார்த்து, "கையில இருக்கற பணத்தை விஜயன்கிட்ட ஒப்படைச்சு, செய்ய வேண்டிய வேலைகளைப் பத்தி அவன்கிட்ட சுருக்கமா சொல்லிடுங்க. அவன் தனியா கணக்கு எழுதி, நிகழ்ச்சி முடிஞ்சதும் உங்ககிட்ட கொடுக்கட்டும். அப்புறம், நீங்க முறையா கணக்கு எழுதிக்கலாம்!" என்றார்.
"என்ன விஜயா?" என்றார் சாந்தானந்தர், விஜயனைப் பார்த்துச் சிரித்தபடி
விஜயன் எதுவும் புரியாமல் தலையாட்டினான்.
நிகழ்ச்சி முடிந்து, விஜயன் கணக்குகளைப் பொருளாளரிடம் ஒப்படைத்து இரண்டு நாட்களுக்குப் பிறகு, அவனை சாந்தானந்தர் அழைத்தார்.
கணக்கில் ஏதேனும் தவறு நேர்ந்திருக்குமோ, அதை விசாரிக்கத்தான் தன்னை அழைக்கிறாரோ என்று பயந்தபடியே, சாந்தானந்தரைப் பார்க்கச் சென்றான் விஜயன்.
"வா, விஜயா! உக்காரு. பொருளாளரோட வேலையை சிறப்பா செஞ்சு, கணக்கெல்லாம் சரியாப் பராமரிச்சிருக்கேன்னு பொருளாளர் சொன்னாரு. பாராட்டுக்கள்!" என்றார் சாந்தானந்தர்.
விஜயன் எதிர்பாராத மகிழ்ச்சியில், என்ன சொல்வதென்று தெரியாமல் திகைத்தான்.
"சரி. நீ பொருளாளரா இருந்த ஒரு வாரத்தில, சுமாரா எவ்வளவு பணம் வரவு செலவு பண்ணி இருப்பே?"
விஜயன் ஒரு நிமிடம் யோசித்து விட்டு, "அஞ்சு லட்சம் ரூபா இருக்கும்" என்றான்.
"அப்படின்னா, நம்ம மடத்தில மாசம் இருபது இருபத்தைஞ்சு லட்சம் ரூபா புழங்குதுன்னு வச்சுக்கலாமா?"
விஜயன் தலையாட்டினான்.
"சரி. இந்த இருபத்தைஞ்சு லட்சம் ரூபாயில, உன்னோட பங்களிப்பு எவ்வளவு?" என்றார் சாந்தானந்தர், சிரித்தபடி.
"சுவாமிஜி!"
"என்னடா இது, நாம சம்பளம் இல்லாம இந்த மடத்தில உழைச்சுக்கிட்டிருக்கோம், இவர் நம்மகிட்ட வந்து நீ எவ்வளவு பணம் கொடுத்தேன்னு கேக்கறாரேன்னு பாக்கறியா? சரி, நான் எவ்வளவு கொடுத்தேன்னு தெரியுமா?"
விஜயன் மௌனமாக இருந்தான்.
சாந்தானந்தர் தன் ஆள்காட்டி விரலால் காற்றில் ஒரு வட்டம் போட்டார்.
"இந்த மடத்தில இருக்கறவங்க யாருமே - நீயோ, நானோ, வேற யாருமோ - ஒரு பைசா கூட இந்த மடத்துக்காக சம்பாதிச்சுக் கொடுக்கல. ஆனா, இந்த மடத்தில இவ்வளவு நல்ல வேலைகள் நடக்குதே - அனாதை ஆசிரமம் நடத்தறோம், அன்னதானம் செய்யறோம், இன்னும் பல நல்ல காரியங்கள் செய்யறோம். இதுக்கெல்லாம் பணம் எங்கேந்து வருது?"
சுவாமிஜி பணத்துக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்று தான் சரவணனிடம் பேசியதை சாந்தானந்தர் கேட்டிருக்க வேண்டும் என்று விஜயனுக்குப் புரிந்தது.
"சுவாமிஜி! நான் தெரியாம..." என்றான் விஜயன், சங்கடத்துடன்.
"விஜயா! உனக்கு இந்தக் கேள்வி வந்தது தப்பு இல்ல. அதுக்கு விளக்கம் சொல்ல வேண்டியது என் கடமை. நாம சில அனாதைக் குழந்தைகளை எடுத்து வளக்கறோம். அவங்க பெற்றோர்கள்தான் அவங்களை உருவாக்கினாங்க. ஆனா, அனாதையா விடப்பட்ட அவங்களை நம்மை மாதிரி யாராவது எடுத்து வளர்க்கலேன்னா, அந்தக் குழந்தைகளால எப்படி ஜீவிக்க முடியும், எப்படி வளர முடியும்? நமக்கு எல்லார்கிட்டேயும் அன்பு இருக்கு. நம்மகிட்ட கருணை இருக்கு. ஆனா பணம் இல்லேன்னா, நம்மகிட்ட இருக்கற அன்புக்கும், கருணைக்கும் பலன் இல்லாம போயிடும். நமக்குப் பணம் கொடுத்து உதவறவங்கதான் நம் அன்புக்கும், அருளுக்கும் உயிர் கொடுக்கறாங்க. அதனாலதான், அவங்களுக்கு நம் நன்றியைத் தெரிவிக்கிற விதமா, அவங்களைப் பாராட்ட ஒரு விழா ஏற்பாடு செஞ்சேன். புரிஞ்சுதா?"
"சுவாமிஜி!" என்றுபடியே சாந்தானந்தரின் காலில் விழுந்தான் விஜயன்.
பொருட்பால்
கூழியல்
அதிகாரம் 76
பொருள் செயல் வகை
குறள் 757:
அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்
செல்வச் செவிலியால் உண்டு.
No comments:
Post a Comment