"அரசாங்கத்துக்கு எவ்வளவு வருவாய் வந்தாலும் போதவில்லையே! என்ன செய்வது?" என்றார் அரசர்.
"அரசே! வருவாய் போதவில்லையென்றால், ஒன்று செலவினங்களைக் குறைக்க வேண்டும், அல்லது வருவாயைப் பெருக்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்!" என்றார் அமைச்சர்.
"நீங்கள் சொல்வது சரிதான். ஆனால், வருவாயை உயர்த்துவதற்கான வழி இல்லை. மக்கள் மீதான வரிச் சுமையை ஏற்ற நான் விரும்பவில்லை. எனவே, செலவினங்களைக் குறைப்பதற்கான வழிவகைகளை ஆராயுங்கள்."
"அரசே! அரசாங்கச் செலவுகளை எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவு குறைத்து விட்டோம். தாங்களே மிகவும் எளிமையாகத்தான் வாழ்கிறீர்கள். இனி செலவுகளைக் குறைப்பதென்றால், மக்கள் நலனுக்கான செலவுகளைத்தான் குறைக்க வேண்டும்!" என்றார் அமைச்சர்.
"நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் அமைச்சரே?"
"அரசே! வரிகளை உயர்த்தாமல், வேறு வகைகளில் நம் வருவாயை அதிகரிப்பது பற்றி நாம் பரிசீலிக்க வேண்டும்."
"வேறு வகைகளில் என்றால், மற்றொரு நாட்டின் மீது படையெடுத்து வென்று. அவர்களிடமிருந்து கப்பம் பெறுவதா?" என்றார் அரசர், சிரித்தபடி.
"அதுவும் ஒரு வழிதான், அரசே! ஆனால், அதற்கான வாய்ப்பு வரும்போதுதான் அதைச் செய்ய முடியும்."
"அத்துடன், மற்றொரு நாட்டிடமிருந்து கப்பம் பெறுவது அந்த நாட்டு மக்களிடமிருந்து அடித்துப் பிடுங்குவது. அதை நான் எப்போதுமே ஏற்றுக் கொண்டதில்லை!"
"தங்கள் உயர்ந்த உள்ளத்தை நான் அறிவேன், அரசே! நான் சொல்ல வந்தது வெளிநாட்டு வணிகர்களைத் தங்கள் பொருட்களை இங்கே விற்க அனுமதித்து, அந்தப் பொருட்களின் மீது சுங்கவரி விதித்து, அதன் மூலம் வருமானம் பெறுவது!"
"வெளிநாட்டுப் பொருட்களை இங்கே விற்கச் செய்தால், நம் நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களின் விற்பனை பாதிக்கப்படாதா?"
"அரசே! நம் நாட்டில் உற்பத்தி செய்யப்படாத பல பொருட்கள் உள்ளன. அவற்றை வாங்குவதில் நம் நாட்டு மக்கள் ஆர்வம் காட்டக் கூடும். நம் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சில பொருட்களை வெளிநாட்டு வணிகர்கள் விற்றாலும், அவற்றின் விலை உள்நாட்டுப் பொருட்களின் விலையை விட அதிகமாக இருக்கும் அளவுக்கு நாம் சுங்கவரி விதிக்கலாம். இங்கே உள்ள வசதியுள்ள சிலர் மட்டுமே அந்தப் பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்குவார்கள். அதனால், உள்நாட்டுப் பொருட்களின் விற்பனை பெருமளவு பாதிக்கப்படாமல் நாம் பார்த்துக் கொள்ளலாம். அத்துடன்..."
தான் கூறுபவற்றை அரசர் எப்படி எடுத்துக் கொள்கிறார் என்று அறிய விரும்புவதுபோல், அரசரின் முகத்தைப் பார்த்தார் அமைச்சர்.
"சொல்லுங்கள்!" என்றார் அரசர், ஆர்வத்துடன்.
"இங்கே வணிகம் செய்ய வரும் வெளிநாட்டு வணிகர்கள் நம் நாட்டுப் பொருட்களை வாங்கிச் சென்று தங்கள் நாட்டில் விற்கலாம். ஏன், அந்த வணிகர்களைப் பார்த்து விட்டு, நம் நாட்டு வணிகர்களில் சிலர் கூட வெளிநாடுகளுக்குச் சென்று தங்கள் பொருட்களை விற்கும் முயற்சியில் ஈடுபடலாம். இவையெல்லாம் நம் நாட்டுக்கு நன்மை பயத்து, நம் வருவாயையும் அதிகரிக்கச் செய்யும் அல்லவா?" என்று முடித்தார் அமைச்சர்
"சிறந்த யோசனை, அமைச்சரே! நீங்கள் ஒரு சிறந்த பொருளாதார நிபுணர்!" என்றார் அரசர், பாராட்டும் தொனியில்.
பொருட்பால்
கூழியல்
அதிகாரம் 76
பொருள் செயல் வகை
குறள் 756:
உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள்.
No comments:
Post a Comment