Friday, April 14, 2023

696. அரசரின் சம்மதம்

"நாட்டில் கடும் பஞ்சம் நிலவுகிறது. மக்கள் உணவில்லாமல் தவிக்கிறார்கள். இதைத் தாங்கள் அரசரிடம் எடுத்துக் கூறிப் பசியால் வாடும் மக்களுக்கு உதவி கிடைக்கச் செய்ய வேண்டும்!" என்றார் தனாதிகாரி.

"அதைத்தான் யோசித்துக் கொண்டிருக்கிறேன். அரசாங்கத்தின் உணவு தானியக் கிடங்குகளிலிருந்து உணவுப் பொருட்களை மக்களுக்கு வழங்க வேண்டும். ஆனால் மக்களுக்கு இலவசமாக எதையும் வழங்குவது அரசருக்குப் பிடிக்காது. மன்னரிடம் எப்படிச் சொல்லிப் புரிய வைப்பதென்றே தெரியவில்லை!" என்றார் அமைச்சர்.

"மழை பெய்தால்தான் நிலைமை மேம்படும். மழை வருவதற்கான அறிகுறிகளே தென்படவில்லையே!" என்றார் தனாதிகாரி கவலையுடன்.

அமைச்சரின் முகம் சட்டென்று மலர்ந்தது. "எனக்கு ஒரு யோசனை பிறந்திருக்கிறது!" என்றார் அவர்.

"நாட்டின் பல பகுதிகளிலும் அன்னதானத்துக்கு ஏற்பாடு செய்து விட்டீர்கள். மழை வரும் வரை அன்னதானம் தொடரும் என்றும் மன்னர் அறிவித்து விட்டார். இதை எப்படிச் சாதித்தீர்கள் அமைச்சரே?" என்றார் தனாதிகாரி வியப்புடன்.

"நம் அரசருக்கு தர்மசிந்தனை கிடையாது. நீங்கள் என் நம்பிக்கைக்குரியவர் என்பதால் உங்களிடம் நான் இதை வெளிப்படையாகச் சொல்கிறேன். ஆனால் அரசருக்கு ஆன்மீகம், சோதிடம் போன்றவற்றில் நம்பிக்கை உண்டு. நாட்டில் ஒரு பீடை நிலவுவதாகவும், தொடர்ந்து அன்னதானம் செய்தால்தான் அந்தப் பீடை நீங்கி நாட்டில் மழை பொழிந்து சுபீட்சம் ஏற்பட்டு அரசாங்கப் பெட்டகத்தில்பணம் வந்து நிறையும் என்றும் ஒரு புகழ் பெற்ற சோதிடரைக் கொண்டு அரசரிடம் சொல்ல வைத்தேன்" என்றார் அமைச்சர்.

"சோதிடர் எப்படி இதற்கு ஒப்புக் கொண்டார்?""

"நாட்டுக்கு நன்மை பயக்கும் என்பதால் சோதிடர் இதற்கு ஒப்புக் கொண்டார். அதுவும் அவர் சொன்னது பொய் இல்லையே! பசியால் வாடும் மக்களுக்கு உணவளித்தாலே அது பீடை நீங்குவதுதானே! அரசர் இதற்கு உடனே ஏற்பாடு செய்து விட்டார். 

"அரசாங்கம் மட்டும் அன்னதானத்துக்குப் பணம், தானியங்கள் கொடுத்து உதவினால் போதாது, வசதி படைத்தவர்கள், வியாபாரிகள், பெருந்தனக்காரர்கள் ஆகியோரும் இதற்குப் பணம் கொடுத்து உதவினால்தான் அன்னதானத்தைத் தொடர்ச்சியாகவும், பெரிய அளவிலும் நடத்த முடியும் என்று நான் அரசரிடம் கூறினேன். அவர் அதை ஏற்றுக் கொண்டு பொருள் படைத்தவர்கள் அனைவரும் இந்த அன்னதானத்துக்கு உதவ வேண்டும் என்று அறிவிப்புச் செய்து விட்டார்.

"அதனால் ஓரளவுக்கு வசதி உள்ளவர்கள் கூட அன்னதானத்துக்குப் பணம், பொருட்கள், தானியங்கள் கொடுத்து உதவுகிறார்கள். நிலைமை சரியாகும் வரை பசியால் வாடும் ஏழைகளுக்கு ஒருவேளை உணவாவது வழங்குவதற்கான ஏற்பாட்டைச் செய்து விட்டோம் என்ற திருப்தி எனக்கு இருக்கிறது. 

"நீங்கள் அன்று மழை வருவதற்கான அறிகுறிகளே தென்படவில்லையே என்று கூறியதைக் கேட்டதும்தான் எனக்கு இந்த யோசனை தோன்றியது. அதானால் உங்களுக்குத்தான் நான் நன்றி கூற வேண்டும்!

தானாதிகாரியைக் கனிவுடன் பார்த்துச் சிரித்தார் அமைச்சர்.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 70
மன்னரைச் சார்ந்தொழுதல்

குறள் 696:
குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில
வேண்டுப வேட்பச் சொலல்.

பொருள்:
ஆட்சியாளருக்கு எதையேனும் சொல்ல விரும்பினால், ஆட்சியாளரின் அப்போதைய மனநிலையை அறிந்து தான் சொல்லக் கருதிய செய்திக்கு ஏற்ற சமயத்தையும் எண்ணி ஆட்சியாளருக்கு வெறுப்புத் தராததும், வேண்டியதும் ஆகிய காரியத்தை அவர் விரும்புமாறு சொல்ல வேண்டும்.

      அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...