Thursday, April 6, 2023

755. அப்பாவின் வீடு.

"ஏண்டா அப்பா போனதிலேந்து அந்த வீட்டைப் பூட்டியே வச்சிருக்கியே! அது பெரிய விடு. நாம அங்கே போய் இருக்கலாம் இல்ல?" என்றாள் மீனாட்சி.

"இத்தனை வருஷமா வெளியூர்ல இருந்தேன். இங்கே வந்ததும் நானே ஒரு வீடு வாங்கிட்டேன். அப்பா போனதுக்கப்பறம் நீயும் என்னோடதான் இருக்கே. அதனால அப்பாவோட வீட்டைப் பயன்படுத்தல. இந்த வீடு நமக்குப் போதாதா? பெரிய வீடுங்கறதுக்காக அங்கே போகணுமா?" என்றான் முத்து.

"அப்ப அதை வாடகைக்காவது விடலாம் இல்ல? சும்மா பூட்டி வச்சிருக்கறதில என்ன பயன்?"

"வேற ஒரு யோசனை வச்சிருக்கேம்மா!" என்றான் முத்து.

"நீ செஞ்சிருக்கறது ரொம்ப நல்ல காரியம்டா. அப்பாவோட வீட்டைப் பூட்டி வச்சிருக்கியேன்னு கவலைப்பட்டேன். இப்ப அதை ஒரு அநாதை இல்லத்துக்கு லீஸுக்கு விட்டிருக்க, அதுவும் வாடகை இல்லாம! எனக்கு இது சந்தோஷமாவும், பெருமையாகவும் இருக்கு!" என்றாள் மீனாட்சி.

"எனக்கும்தான்!" என்ற முத்து, 'ஆனா எனக்கு சந்தோஷம் மட்டும்தான், பெருமை இல்லை. வட்டிக்குக் கடன் கொடுத்துக்கிட்டிருந்த அப்பா கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாத ஒத்தர்கிட்டேந்து கடனுக்கு ஈடா எழுதி வாங்கின வீடு அது. அதில குடியிருக்க எனக்கு இஷ்டமில்ல. அந்த வீட்டிலேந்து எனக்கு எந்தப் பயனும் கிடைக்கக் கூடாதுன்னுதான் அதை வாடகை இல்லாம ஒரு அனாதை இல்லத்தோட பயன்பாட்டுக்குக்  கொடுத்தேன். ஆனா இதை அம்மாகிட்ட சொல்ல முடியாதே!' என்று நினைத்துக் கொண்டான்.

பொருட்பால்
கூழியல்
அதிகாரம் 76
பொருள் செயல் வகை

குறள் 755:
அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்
புல்லார் புரள விடல்.

பொருள்: 
அருளோடும், அன்போடும் பொருந்தாத வழிகளில் வந்த செல்வத்தின் ஆக்கத்தைப் பெற்று மகிழாமல் அதைத் தீமையானது என்று நீக்கி விட வேண்டும்.
அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...