நீலகண்டன் சென்றதும், மானேஜர் பூபதியைத் தன் அறைக்கு அழைத்த சரவணகுமார், "இப்ப வந்துட்டுப் போனாரே, இவர் யார் தெரியும் இல்ல? சாரதா இண்டஸ்ட்ரீஸ் பர்சேஸ் மானேஜர் நீலகண்டன். ரொம்ப நாளா இந்த கம்பெனிகிட்ட நாம ஆர்டர் வாங்க முயற்சி பண்ணிக்கிட்டிருக்கோமே! இவருக்கு ரெண்டு பர்சன்ட் கமிஷன் கொடுத்தா, நமக்கு ஆர்டர் கொடுக்கறாராம். இவருக்குக் கொடுக்கற கமிஷனை நாம விலையில ஏத்திக்கலாமாம். என்ன சொல்றீங்க?" என்றார்.
"நீங்க இதுமாதிரி ஏற்பாடுகளுக்கெல்லாம் ஒத்துக்க மாட்டீங்களே, சார்!" என்றார் பூபதி.
"ஒத்துக்கிட்டிருந்தா நல்லா இருக்கும்னு நினைக்கிறீங்களா?"
"சார்! உண்மையைச் சொல்லணும்னா, நான் உங்க இடத்தில இருந்திருந்தா, இதுக்கு ஒத்துக்கிட்டிருப்பேன்னு நினைக்கிறேன். ஆனா. நீங்க சில கொள்கைகளை வச்சுக்கிட்டிருக்கீங்க. நேர்மையா சம்பாதிக்கணும், வரியையெல்லாம் ஒழுங்காக் கட்டணும், வாடிக்கையாளர்கள், சப்ளையர்கள்கிட்ட நேர்மையா நடந்துக்கணும். உங்ககிட்ட வேலை செய்யறவங்ககிட்டயும் நியாயமா நடந்துக்கணுங்கற மாதிரி பல கொள்கைகள். உங்ககிட்ட வேலை செய்யறது எனக்குப் பெருமையா இருக்கு, சார்!" என்றார் பூபதி.
"என்னோட கொள்கைகளால நான் நிறைய வாய்ப்புகளை இழந்துட்டதா நினைக்கிறீங்களா?" என்றார் சரவணகுமார்.
ஒரு நிமிடம் யோசித்த பூபதி, "சில வாய்ப்புகளை இழந்திருக்கலாம், சார்! ஆனா, நம்ம கம்பெனி ரொம்ப நல்லாத்தானே போய்க்கிட்டிருக்கு? வேற கம்பெனிகள்ள வேலை செய்யற சில பேரை எனக்குத் தெரியும். மற்ற கம்பெனிகள்ள பல பிரச்னைகள் இருக்கு. ஆனா, நம்ம கம்பெனியில எல்லாமே ஸ்மூத்தாப் போயிக்கிட்டிருக்கு. அது எனக்கு எப்பவுமே ஆச்சரியமா இருக்கும். நீங்க நேர்மையா இருக்கறதால, உங்களுக்கு இயல்பாவே எல்லாம் நல்லா நடக்குதுன்னு நினைக்கிறேன். அதோட, உங்க தொழில் நேர்மை உங்களை வேறு பல விதங்களிலேயும் நியாயமாகவும், தர்ம சிந்தனையோடும், மனிதாபமானத்தோடயும் நடக்க வைக்குதுன்னு நினைக்கிறேன். இன்னிக்கு உங்களைப் பார்க்க ரெண்டு பேர் வந்தாங்க. ஒத்தர் அனாதை ஆசரமத்துக்கு நன்கொடை கேட்டு வந்தாரு. அவர் உங்ககிட்டேந்து ஒரு பெரிய தொகையை நன்கொடையா வாங்கிக்கிட்டு சந்தோஷமாப் போனாரு. இன்னொத்தர் தனக்கு கமிஷன் கொடுத்தா ஆர்டர் தரேன்னு சொல்லிட்டு, அதுக்கு நீங்க ஒத்துக்காததால, ஏமாற்றத்தோட போனாரு. இந்த ரெண்டு சந்திப்புகளும் சேர்ந்து உங்க வாழ்க்கையைப் பிரதிபலிக்குதுன்னு நான் நினைக்கிறேன்!" என்றார்.
உடனேயே, "சாரி சார்! நான் கொஞ்சம் அதிகமாப் பேசி இருந்தா, என்னை மன்னிச்சுடுங்க. நீங்க கேட்டதால சொன்னேன்!" என்றார்
"இல்லை, இல்லை. நாம செய்யறது சரின்னு நமக்குத் தெரிஞ்சாலும், சில சமயம் நமக்கு மத்தவங்ககிட்டேந்து ஒரு கன்ஃபர்மேஷன் வேண்டி இருக்கு, இல்லையா? அதுக்காகத்தான் உங்ககிட்ட கேட்டேன். நீங்க விவரமா பதில் சொன்னதுக்கு நன்றி!" என்றார் சரவணகுமார்.
பொருட்பால்
கூழியல்
அதிகாரம் 76
பொருள் செயல் வகை
குறள் 754:
அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள்.
No comments:
Post a Comment