Saturday, April 29, 2023

700. இது எப்படி நடந்தது?

நிறுவனத்தின் உரிமையாளர் வேதமுத்துவின் அழைப்பின் பேரில் அவர் அறைக்கு நிறுவன மேலாளர் சுந்தரம் சென்றபோது, வேதமுத்து மிகவும் கோபமாக இருந்தார்.

சுந்தரம் எப்போது தன் அறைக்கு வந்தாலும் முதலில் அவரை உட்காரச் சொல்லும் பழக்கம் உள்ள வேதமுத்து அன்று தான் இருந்த கோபமான மனநிலையில் சுந்தரத்தை உட்காரக் கூடச் சொல்லாமல் அவர் உள்ளே நுழைந்ததுமே கோபமாகப் பேச ஆரம்பித்தார்.

"என்ன சுந்தரம், உங்களை நம்பித்தானே நான் கம்பெனியை ஒப்படைச்சிருக்கேன்! நீங்களே இப்படிச் செய்யலாமா?"

"எதை சார் சொல்றீங்க?" என்றார் சுந்தரம் பதட்டத்துடன்.

"ராம் என்டர்ப்ரைசஸ் பணம் கொடுக்க ரொம்ப லேட் பண்றாங்க, அதோட நாம அனுப்பின பொருளோட தரம் சரியில்லேன்னு பில் தொகையிலேந்து அவங்க இஷ்டத்துக்குக் குறைச்சுக்கிறாங்க. அதனல அவங்களுக்கு இனிமே சப்ளை பண்ண வேண்டாம்னு சொன்னேன். ஆனா மறுபடி அவங்களுக்கு சப்ளை பண்ணி இருக்கீங்களே!"

"சார்! அவங்க கேட்டப்ப நான் சப்ளை பண்ண முடியாதுன்னு சொல்லிட்டேன். ஆனா, நேத்திக்கு நான் லீவ்ல இருந்தப்ப சப்ளை ஆகி இருக்கு. நீங்கதான் சப்ளை பண்ணச் சொல்லி இருப்பீங்கன்னு நினைச்சேன். நீங்க ஆஃபீசுக்கு வந்த்ததும் உங்ககிட்ட இது பத்திக் கேக்கணும்னு நினைச்சேன், அதுக்குள்ள நீங்களே என்னைக் கூப்பிட்டுட்டீங்க!" என்றார் சுந்தரம்.

ஒரு கணம் யோசித்த வேதமுத்து பியூனை அழைத்து, "குமாரை வரச் சொல்லு!" என்றார்.

உள்ளே வந்த குமார் வேதமுத்துவுக்கு எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்து, "என்ன பெரியப்பா, எதுக்குக் கூப்பிட்டீங்க?" என்றான்.

"முதல்ல எழுந்திரு. மானேஜர் நின்னுக்கிட்டிருக்காரு. நீ பாட்டுக்கு வந்து உக்காந்துட்ட?" என்று குமாரைக் கடிந்து கொண்ட வேதமுத்து, சுந்தரத்தைப் பார்த்து, "சுந்தரம், நீங்க உக்காருங்க. எனக்கு இருந்த பதட்டத்தில உங்களை உக்காரச் சொல்லவே மறந்துட்டேன். ஐ ஆம் சாரி!" என்றார்.

"பரவாயில்லை சார்!" என்றபடியே சுந்தரம் அமர்ந்து கொள்ள, குமார் அதிர்ச்சியுடன் எழுந்து நின்று, "என்ன பெரியப்பா இது?" என்றான்.

"முதல்ல, என்னைப் பெரியப்பான்னு கூப்பிடறதை நிறுத்து. இது ஆஃபீஸ். நீ இங்கே வேலை செய்யற. சுந்தரம் உனக்கு மேலதிகாரி. மற்ற ஊழியர்கள் உன்னோட சக ஊழியர்கள். ஆனா நீ என்னோட சொந்தக்காரன்கற உரிமையில இங்கே எல்லாரையும் அதிகாரம் பண்றேன்னு கேள்விப்பட்டேன். உங்கிட்ட சொல்லி உன்னைக் கண்டிக்கணும்னு நினைச்சேன். அதுக்குள்ள நீ இன்னொரு பெரிய தப்பு பண்ணி இருக்க!" என்றார் வேதமுத்து கோபம் குறையாமல்.

"இல்லை பெரியப்பா..இல்லை, சார்..நான்.."

"ராம் என்டர்பிரைசஸுக்கு சப்ளை பண்ணக் கூடாதுன்னு மானேஜர் சொல்லி இருக்காரு. அவர் அப்படிச் சொன்னதே என்னோட முடிவுப்படிதான். நேத்திக்கு அவர் லீவ்ல இருந்தப்ப அவங்களுக்கு டெலிவரி போயிருக்கு. டெலிவரி கொடுக்கச் சொன்னது நீதானே?"

"அவங்க ஃபோன்ல கெஞ்சிக் கேட்டாங்க. அதான் சரின்னு சொன்னேன்!"

"அப்படிச் சொல்ல உனக்கு யாருக்கு அதிகாரம் கொடுத்தது? சரி, அவங்களுக்கு சப்ளை பண்ண வேண்டாம்னு மானேஜர் சொல்லி இருக்கார்னு மற்ற ஊழியர்கள் உங்கிட்ட சொல்லி இருப்பாங்களே!"

குமார் மௌனமாகத் தலையாட்டினான்.

"மானேஜர் சப்ளை பண்ணக் கூடாதுன்னு தெரிஞ்சும், நீ அவர் சொன்னதுக்கு எதிரா முடிவு எடுத்திருக்க. நீ என் சொந்தக்காரன்னு தெரிஞ்சதால மற்ற ஊழியர்கள் நீ சொன்னதை மறுக்க முடியாம சப்ளை பண்ணி இருக்காங்க!... நீ இங்கே தொடர்ந்து வேலை செய்யணும்னா மற்ற ஊழியர்கள் மாதிரி உன்னோட பொறுப்பு, லிமிட் எல்லாத்தையும் தெரிஞ்சு நடந்துக்க. இல்லேன்னா நீ வேற வேலை பாத்துக்கலாம்!" என்றார் வேதமுத்து.

"என்னை மன்னிச்சுடுங்க சார்! இனிமே நான் இப்படி நடந்துக்க மாட்டேன்!" என்றான் குமார், தாழ்ந்த குரலில். 

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 70
மன்னரைச் சார்ந்தொழுதல்

குறள் 700:
பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும்
கெழுதகைமை கேடு தரும்.

பொருள்:

ஆட்சியாளருடன் நமக்கு நீண்ட நாள் பழக்கம் உண்டு என்று எண்ணித் தீய செயல்களைச் செய்யும் மன உரிமை ஒருவருக்குக் கெடுதியையே தரும்.

      அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...