Thursday, April 13, 2023

695. அமைச்சரின் உதவியாளர்

"என்னோட உதவியாளர் ஒத்தர் ஓய்வு பெறப் போறாரு. அவருக்கு பதிலா இன்னொரு உதவியாளரை நான் நியமிக்கணும். உங்க உதவியாளர்கள் ரெண்டு பேருமே திறமையானவங்கன்னு கேள்விப்பட்டேன். அவங்கள்ள ஒருத்தரை நீங்க எனக்குக் கொடுக்கணும்!"என்றார் முதலமைச்சர் செல்வன் சிரித்தபடி.

அமைச்சர் அன்புமொழி, "இந்தத் தலைமைச் செயலகத்திலேயே எவ்வளவோ திறமையான ஊழியர்கள் இருக்காங்களே செல்வன்! ஏன் என்னோட உதவியாளர்கள்ள ஒருத்தர் வேணும்னு கேக்கறீங்க?" என்றார்.

செல்வனும், அன்புமொழியும் இளம் வயதிலிருந்தே கட்சியில் இணைந்து பணியாற்றியவர்கள் என்பதால் அவர்களுக்குள் நெருக்கமும் இணக்கமும் உண்டு. 

செல்வனின் தலைமைப் பண்பைச் சிறு வயதிலிருந்தே பார்த்து வந்த அன்புமொழி அவரைத் தன் தலைவராக ஏற்றுக் கொண்டு விட்டார். செல்வனும் அன்புமொழியிடம் நட்புடன் இருந்ததுடன் கட்சியிலும், அமைச்சரவையிலும் அவருக்கு உரிய மரியாதையைக் கொடுத்து வந்தார்.

"உங்களோட உதவியாளர்கள் ரெண்டு பேரும்தான் இருக்கறதிலேயே சிறந்தவங்கன்னு எல்லா அதிகாரிகளும் சொல்றாங்க. உங்களோட பயிற்சிதான் அதுக்குக் காரணம்னும் சொல்றாங்க!"

"அப்படி இருக்கும்போது எங்கிட்டேந்து ஒத்தரை எடுத்துக்கிறீங்களே, அது நியாயமா?" என்றார் அன்புமொழி சிரித்தபடி.

"அதனால என்ன? வேற ஒத்தரை உதவியாளரா எடுத்துக்கிட்டு சில மாசங்களிலேயே அவரைச் சிறந்தவரா ஆக்கிடுவீங்களே நீங்க!"

"சரி. அப்படீன்னா, முருகனை எடுத்துக்கங்க!" என்றார் அன்புமொழி.

"உங்க உதவியாளர்கள் முருகன், பாபு ரெண்டு பேரில பாபுதான் அதிகத் திறமையானவர்னு கேள்விப்பட்டேன். அதிகத் திறமையானவரை நீங்க வச்சுக்க நினைக்கிறது நியாயம்தான். நான் முருகனையே எடுத்துக்கறேன்!" என்றார் செல்வன்.

"இல்லை செல்வன். பாபு அதிகத் திறமையானவர்தான். ஆனா முதலமைச்சரா இருக்கற உங்களுக்கு உதவியாளரா இருக்க பாபுவை விட முருகன்தான் அதிகப் பொருத்தமானவர்!" என்றார் அருள்மொழி.

"எதனால அப்படிச் சொல்றீங்க?"

"இப்ப நான் என் அறைக்குப் போய் உங்களுக்கு ஃபோன் செஞ்சுட்டு இணைப்பைத் துண்டிக்காம இருக்கேன். என் அறையில நான் யார்கிட்டேயும் பேசறதை நீங்க கேக்கலாம் இல்லையா? என் அறையில நடக்கற பேச்சுக்களை நீங்க கேளுங்க. நான் அப்புறம் திரும்ப வந்து உங்ககிட்ட பேசறேன்" என்று சொல்லி எழுந்து சென்றார் அன்புமொழி.

சில நிமிடங்களுக்குப் பிறகு முதலமைச்சரின் அறைக்குத் திரும்பி வந்த அன்புமொழி, "என்ன செல்வன், இப்ப புரிஞ்சுதா, முருகன்தான் உங்களுக்குப் பொருத்தமானவரா இருப்பார்னு நான் ஏன் சொன்னேன்னு?" என்றார் சிரித்தபடி.

"புரிஞ்சுது அன்புமொழி! உங்க அறைக்குப் போனதும் நீங்க முதல்ல முருகனைக் கூப்பிட்டீங்க. நீங்க என்னைப் பாத்துட்டு வந்தது அவருக்குத் தெரியும். ஆனா அவர் உங்ககிட்ட எதுவும் கேக்கல. நீங்க சொன்ன வேலையை மட்டும் கேட்டுக்கிட்டு வெளியில போயிட்டாரு. அப்புறம் பாபுவைக் கூப்பிட்டீங்க. அவரு உள்ளே வந்ததுமே, 'முதல்வர் அறைக்குப் போனீங்களே சார், ஏதாவது முக்கியமான விஷயமா?'ன்னு கேட்டாரு. நீங்க ஒண்ணும் இல்லேன்னு சொல்லீட்டீங்க. அப்புறம் கூட, அறையை விட்டுப் போறப்ப, 'முதல்வர் ஏதாவது தகவல் சொன்னாரா' சார்?ன்னு கேட்டாரு. விஷயங்களைத் தெரிஞ்சுக்க ரொம்ப ஆர்வம் உள்ளவரா இருப்பார் போல இருக்கு. அதனாலதான் அவரை நீங்க பரிந்துரைக்கலேன்னு நினைக்கறேன், சரியா?" என்றார் முதலமைச்சர்."

ஆம் என்று தலையாட்டிய அன்புமொழி, "நான் யாருகிட்டயாவது தனியாப் பேசினா நன் என்ன பேசினேன்னு தெரிஞ்சுக்க பாபு எப்பவுமே ஆர்வமா இருப்பாரு, பல சமயம் தன்னோட ஆவலை அடக்க முடியாம எங்கிட்டயே கேப்பாரு! ஆனா முருகன் அப்படி இல்லை. நானாகச் சொன்னால் ஒழிய எதையும் கேட்டுத் தெரிஞ்சுக்க முயல மாட்டாரு. நீங்க ஒரு முக்கியப் பொறுப்பில இருக்கறதால உங்க உதவியாளருக்கு இருக்க வேண்டிய குணம் முருகன்கிட்ட இருக்குன்னு நினைக்கிறேன்!" என்றார்.

"நீங்க நல்லா யோசிச்சுதான் சொல்லி இருக்கீங்க. பாபு மாதிரி இருக்கறவங்க ஆர்வம் மிகுதியால ஒட்டுக் கேட்கறதைக் கூடச் செய்யலாம் இல்ல?"

"வாய்ப்பு இருக்கு. ஆனா இதுவரையில அப்படி செஞ்சதில்லைன்னு நினைக்கிறேன். நீங்க சொன்னதால இனிமே நான் இன்னும் அதிக எச்சரிக்கையா இருக்கணும்!உங்களுக்கென்ன, அதிர்ஷ்டக்காரர்! ஒரு நல்ல உதவியாளர் கிடைக்கப் போறாரு!" என்றார் அன்புமொழி சிரித்துக் கொண்டே.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 70
மன்னரைச் சார்ந்தொழுதல்

குறள் 695:
எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளை
விட்டக்கால் கேட்க மறை.

பொருள்:
ஆட்சியாளர் பிறருடன் ரகசியம் பேசம்போது அதை ஒட்டுக் கேட்கவும் கூடாது; அது என்னவென்று வினவவும் கூடாது. அவர்களே அதுபற்றிச் சொன்னால் மட்டுமே கேட்டுக் கொள்ள வேண்டும்.

      அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...