Monday, April 10, 2023

692. புதிய முதலமைச்சர்!

ஆதிமூலம் தீவிர அரசியலிலிருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்து விட்டார்.

முதலமைச்சர் பதவியிலிருந்து உடனே விலகப் போவதாகவும், சிறிது காலத்துக்குப் பின் கட்சித் தலைவர் பதவியிலிருந்தும் விலகப் போவதாகவும் அவர் அறிவித்தார்.

தனக்குப் பிறகு முதல்வர் பொறுப்பை ஏற்கப் போவது யார் என்பதைக் கட்சியின் உயர்மட்டக் குழு தீர்மானிக்கும் என்று அவர் அறிவித்தார். 

இருபது உறுப்பினர்களைக் கொண்ட உயர்மட்டக் குழு என்பது ஆதிமூலத்தின் விருப்பத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடிதான் என்பது அனைவரும் அறிந்த உண்மை.

முதலமைச்சராக யார் நியமிக்கப்படுவார் என்பது பற்றிப் பல பெயர்கள் அடிபட்டன. 

ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக, இரண்டு வருடங்களுக்கு முன்பே முதல் முறையாக அமைச்சரான பூவரசன், கட்சியின் அடுத்த முதல்வராக இருப்பார், சட்டமன்ற உறுப்பினர்களால் அவர் முறையாகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று உயர்மட்டக் குழு அறிவித்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

"என்ன இது, மூத்த அமைச்சர்கள் நாம இத்தனை பேர் இருக்கோம்! நம்ம எல்லாரையும் ஒதுக்கிட்டு, தலைவர் பூவரசனைத் தேர்ந்தெடுத்திருக்காரு?" என்று பொருமினார் ஒரு மூத்த அமைச்சர்.

"நாம என்ன செய்ய முடியும்? அவரை மீறிக் கட்சியில எதுவும் நடக்காது. கட்சித் தலைவர் பதவியிலேந்து அவர் விலகினப்பறம், அந்தப் பதவியாவது நம்ம யாருக்காவது கிடைக்குதான்னு பாக்கலாம். தலைவர் விலகினப்பறம், கட்சி நம்ம கையிலதானே இருக்கும்? அப்ப பூவரசனைத் தூக்கியடிக்க நம்மால முடியாதா என்ன?" என்றார் மற்றொரு மூத்த அமைச்சர்.

"என்ன, பூவரசா! சாதிச்சுட்டியே! தலைவர் எப்படி உன்னைத் தேர்ந்தெடுத்தாரு?" என்றான் பூவரசனின் நண்பன் அருள்.

"நான் இருபது வருஷமா அரசியல்ல இருக்கேன். மாவட்டச் செயலாளரா இருந்திருக்கேன். ரெண்டு வருஷமா அமைச்சரா இருக்கேன். தலைவர்கிட்ட நெருங்கிப் பழகற வாய்ப்பு கிடைச்சப்பவே, தலைவரைப் பத்திப் புரிஞ்சுக்கிட்டேன். தலைவர் எல்லாரையும் சந்தேகப்படறவரு. தன்னைச் சுற்றி இருக்கற எல்லாரும் தன்னைக் கவிழ்த்துடுவாங்கன்னு சந்தேகப்படறவரு. தானே எப்பவும் அதிகாரத்தில இருக்கணும்னு நினைக்கிறவரு. இப்ப கூட உடல்நிலை சரியில்லாததால ஓய்வில இருக்கணும்னு மருத்துவர்கள் சொன்னதாலதான், அவர் பதவி விலகறாரு. அவரோட நம்பிக்கையைப் பெறணும்னா, பதவிக்கு ஆசைப்படக் கூடாதுன்னு ரொம்ப நாள் முன்னாடியே தெரிஞ்சுக்கிட்டேன். ரெண்டு தடவை அவர் எனக்கு அமைச்சர் பதவி கொடுத்தப்ப வேண்டாம்னு சொல்லிட்டேன். நான் அமைச்சர் பதவியில ஆசை உள்ளவன்னு அவர் நினச்சாலே, என்னிக்காவது ஒருநாள் நான் அவரைக் கவுத்துடுவேன்னு சந்தேகப்படற ஆளு அவரு! அதனாலதான் ரெண்டு தடவை அமைச்சர் பதவியை வேண்டாம்னு சொல்லிட்டேன். மூணாவது தடவை, அவர் வற்புறுத்திக் கேட்டப்ப, ஒத்துக்கிட்டேன். இப்ப அவரே என்னை முதல்வரா ஆக்கி இருக்காரு!" என்றான் பூவரசன்.

"அது சரி. அவர் அரசியல்லேந்து விலகினப்பறம், புதுசா வர கட்சித் தலைவர் உன்னை முதல்வர் பதவியிலேந்து தூக்கப் பாப்பாரே!"

"நான் சொன்னதை நீ சரியாப் புரிஞ்சுக்கல. பதவி ஆசை இல்லாதவன் மாதிரி நான் நடிக்கல. அந்த ஆசை எனக்கு வேண்டாம், தலைவருக்கு விசுவாசியா இருந்தாப் போதும்னு நினைச்சு, என் மனசைப் பக்குவப்படுத்திக்கிட்டேன். அதனால, நாளைக்கே என் பதவி போனாலும் நான் வருத்தப்பட மாட்டேன்!" என்றான் பூவரசன்.

பொருட்பால்
அமைச்சியல்
அதிகாரம் 70
மன்னரைச் சேர்ந்தொழுகல்

குறள் 692:
மன்னர் விழைப விழையாமை மன்னரால்
மன்னிய ஆக்கந் தரும்.

பொருள்:
ஆட்சியாளருடன் பழகுபவர் ஆட்சியாளர் எவற்றை விரும்புகிறாரோ அவற்றை விரும்பாமல் இருப்பது, அவருக்கு ஆட்சியாளரிடமிருந்து நிலைத்த செல்வத்தைப் பெற்றுக் கொடுக்கும்.

      அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...