Tuesday, March 14, 2023

869. எங்கிட்ட மோதாதே!

"நீ மலையோட மோதற! ஜாக்கிரதை!" என்று பலரும் தாமோதரனை எச்சரித்தார்கள்.
ஆனால் 'மலை' என்று குறிப்பிடப்பட்ட சதாசிவத்திடம் மோதுவது என்று தாமோதரன்  முடிவு செய்து விட்டான்.

தாசிவம் சாலைப்பணிகளைச் செய்யும் ஒரு ஒப்பந்தக்காரர். 

சிறிய ஒப்பந்தக்காரராக இருந்த அவர் முதலில் சில அரசியல் செல்வாக்குகளை உருவாக்கிக் கொண்டும், பிறகு அந்த அரசியல் செல்வாக்குகளைப் பயன்படுத்திப் பிற ஒப்பந்ததாரர்களைத் தன்னுடன் போட்டிக்கு வர முடியாமல் செய்தும், அதற்கும் அடுத்த நிலையில் சில ஒப்பந்ததாரர்களுடன் பேசி ஒவ்வொரு ஒப்பந்ததாரரும் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே பணிகளுக்கு விண்ணப்பிப்பது என்ற ஒரு உடன்பாட்டை ஏற்படுத்திக் கொண்டும், தனக்கான பகுதிகளில் போட்டியின்றித் தனிக்காட்டு ராஜாவாகக் கோலோச்சி வந்தார் 

குறிப்பிட்ட சில பகுதிகளில் நடக்கும் எல்லா சாலைப் பணிகளுக்கும் அவர் மட்டும்தான் விண்ணப்பிக்க வேண்டும் என்ற ஒரு எழுதப்படாத விதியை அவர் உருவாக்கி விட்டார்.

ஒரு சில சிறிய ஒப்பந்தப் பணிகளைச் செய்து அனுபவம் பெற்றபின், தாமோதரன் சாலைப் பணிகளுக்கான டெண்டர்களில் பங்கு பெற முடிவு செய்து, "சதாசிவத்தின் பகுதி" யில் ஒரு பணிக்கான டெண்டரில் கலந்து கொள்ள முடிவு செய்தபோதுதான் சிலர் அவனை சதாசிவத்துடன் மோத வேண்டாம் என்று எச்சரித்தனர். ஆனால் அந்த எச்சரிகைகளை தாமோதரன் பொருட்படுத்தவில்லை.

"பத்து வருஷத்துக்கு மேல சதாசிவம் யாரையும் நெருங்க விடாம இது தன்னோட கோட்டைங்கற மாதிரி ஆட்டம் போட்டுக்கிட்டிருந்தாரு. நீ எப்படி தைரியமா அவரோட கோட்டைக்குள்ள நுழைஞ்சு ஜெயிச்சே?" என்றான் தாமோதரனின் நண்பன் குலசேகரன்.

"அடிப்படையில சதாசிவம் ஒரு கோழை. அதோட அவர் ஒண்ணும் பெரிய அறிவாளி இல்லை. அப்படி இருந்திருந்தா, இந்தத் துறையில நுழைஞ்சு வெற்றி பெற்றப்பறம் புதுசா சில ப்ராஜக்ட்கள்ள இறங்கி இருப்பார். ஆனா அவரு இந்த ஒரு வேலையே பிடிச்சுக்கிட்டு தனக்கு யாரும் போட்டியா வந்துடாம பாத்துக்கிட்டிருக்காரு. அப்படிப்பட்டவரை ஜெயிக்கறது கஷ்டமா இருக்காதுன்னு நினைச்சேன்!" என்றான் தாமோதரன்.

"அவர் கோழைன்னு எப்படிச் சொல்றே?"

"தன்னோட யாரும் போட்டிக்கு வரக் கூடாதுன்னு நினைக்கறதே பயத்தால வர எண்ணம்தானே? போட்டிக்கு வரவங்களோட போட்டியில நின்னு ஜெயிக்கறதுதான் தைரியம், வலிமை. அந்த தைரியம் இல்லாததாலதான் குறுக்கு வழியில போட்டியை ஒழிக்க அவர் முயற்சி செஞ்சிருக்காரு. இவரை மாதிரி நபர்கள் எல்லாம் எதிரி கையை ஓங்கினாலே பயந்துடுவாங்க. அதனாலதான் நான் தைரியமா அவரோட போட்டியில இறங்கினதும் அவரால என்னை எதுவும் செய்ய முடியல. இவர் மாதிரி போட்டியாளர்கள் இருக்கற வரைக்கும் நாம ஜெயிச்சுக்கிட்டே இருக்கலாம்!" என்றான் தாமோதரன்.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 87
பகைமாட்சி

குறள் 869:
செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலா
அஞ்சும் பகைவர்ப் பெறின்.

பொருள்: 
அறிவு இல்லாத, அஞ்சும் இயல்புடைய பகைவரைப் பெற்றவனுக்கு, அவரை எதிர்த்துப் பகை கொள்வதால் கிடைக்கும் இன்பங்கள் விரைவில் நீங்காமல் நிலைத்து இருக்கும்.

அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1061. ஏன் உதவி கேட்கவில்லை?

"இன்னும் ஒரு வாரத்தில ஆபரேஷன் பண்ணணும்!" என்றார் டாக்டர். "முடிவு பண்ணிட்டுச் சொல்லுங்க!" டாக்டரின் அறையிலிருந்து வெளியே...