"அவசரப்பட வேண்டாம், அமைச்சரே! எதிரி எப்படிப்பட்டவர் என்று தெரியாமல், அவரோடு அவசரப்பட்டு மோதக் கூடாது. இரு நாட்டின் பிரச்னைகளையும் பேசித் தீர்க்க ஒரு சமாதானத் தூதுவரை அனுப்புவதாகக் காளிங்கருக்கு ஒரு ஓலை அனுப்புங்கள்!" என்றார் அரசர்.
"அரசே! காளிங்கரிடமிருந்து பதில் வந்து விட்டது. நாம் சமாதானத் தூதுவரை அனுப்ப விரும்புவதாகக் கூறிய யோசனையை அவர் ஏற்றுக் கொண்டு விட்டார்!" என்றார் அமைச்சர்.
"நல்லது, அமைச்சரே! நீங்களே தூதுவராகச் சென்று வாருங்கள்!" என்றார் அரசர்.
"நானா?" என்றார் அமைச்சர், தயக்கத்துடன்.
"ஏன், தூதுவராகச் செல்வதை கௌரவக் குறைவாக நினைக்கிறீர்களா? பாண்டவர்களுக்காக அந்தக் கண்ணபிரானே தூதுவராகச் செல்லவில்லையா?"
"அதற்கில்லை!.."
"அமைச்சரே தூதுவராக வந்திருப்பதைக் காளிங்கர் நாம் அவருக்கு அளிக்கும் உயரிய கௌரவமாக நினைப்பார். அதனால், அவர் சற்று இறங்கி வரலாம்" என்றார் அரசர்.
தூது சென்று வந்த திரும்பிய அமைச்சர் அரசரைச் சந்தித்தார்.
"அரசே! தங்கள் கணிப்பு மிகச் சரியாக இருந்தது. அமைச்சரான என்னையே தூதுவராக அனுப்புவீர்கள் என்பதைக் காளிங்கர் எதிர்பார்க்கவில்லை. நீங்கள் அவருக்கு அளித்த கௌரவத்தால் அவர் மனம் மகிழ்ந்து, தன் நிலையிலிருந்து இறங்கி வந்திருக்கிறார். அவருடைய கோரிக்கைகள் தொடர்பாகத் தங்களைச் சந்தித்துப் பேச விருப்பம் தெரிவித்திருக்கிறார். அவரது யோசனைப்படி நீங்கள் இருவரும் சந்தித்துப் பேசினால், ஒரு சுமுகமான முடிவு எட்டப்படும் என்று நினைக்கிறேன்'' என்றார் அமைச்சர்.
"அவசியமில்லை, அமைச்சரே! நான் இறங்கி வரத் தயாராயில்லை. இனி காளிங்கன் வாலாட்டினால், அவனுடன் போர் புரியவும் தயாராயிருக்கிறேன்!" என்றார் அரசர்.
"புரியவில்லை, அரசே! தாங்கள்தானே நல்லெண்ணத் தூதரை அனுப்ப வேண்டும் என்று முடிவு செய்து, என்னை அனுப்பினீர்கள்?" என்றார் அமைச்சர், குழப்பத்துடன்.
"உண்மையில், இது நல்லெண்ணத் தூது இல்லை, வஞ்சகத் தூதுதான்! உங்களை தூதுவராக அனுப்பினால், காளிங்கன் நான் அவனுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதாக நினைத்து, சற்று அலட்சியத்துடன் இருப்பான் என்று நினைத்தேன். அதனால், உங்களுடன் சென்றவர்களில் ஒருவர் ஒற்றராகச் செயல்பட்டுக் காளிங்கனைப் பற்றி அவனைச் சுற்றி இருப்பவர்களிடமிருந்தே பல தகவல்களைப் பெற்று வந்ததை அவன் கவனிக்கவில்லை!"
"என்ன தகவல்கள், அரசே!'"
"காளிங்கன் நன்மை எது, தீமை எது என்று ஆராய்ந்து பார்க்காமல், தன் மனம் போனபடி செயல்படுபவன். தனக்கு வேண்டியவர்கள், நெருக்கமானவர்கள், உதவி செய்பவர்கள் என்பதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல், யாரையும் மதிக்காமலும், அனைவரிடமும் அலட்சியமாகவும் நடந்து கொள்பவன். அதிகம் கோபம் கொள்பவன். பெண்ணாசை மிகுந்தவன். இப்படிப்பட்ட ஒருவன் எதிரியாக அமைந்தால், அவனை வீழ்த்துவது சுலபம். அவனுக்கு நாம் அஞ்ச வேண்டியதுமில்லை, அவனிடம் சமாதானமாகப் போக வேண்டியதுமில்லை!" என்றார் அரசர்.
பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 87
பகைமாட்சி
குறள் 866:
காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்
பேணாமை பேணப் படும்.
No comments:
Post a Comment