"இப்படிச் சொன்னவங்க கதி எல்லாம் என்ன ஆயிருக்கு தெரியுமா?" என்று முணுமுணுத்தார் அமைச்சர் சின்னசாமி. மூத்த தலைவரான தன்னைப் பின்தள்ளி விட்டு ஜெயகுமார் முதலமைச்சர் ஆகி விட்ட கோபம் அவருக்கு.
அவர் அருகிலிருந்த மற்றொரு அமைச்சர் நல்லக்கண்ணு, "ஜெயகுமார் நல்லாத்தானே ஆட்சி நடத்திக்கிட்டிருக்காரு? மக்கள் ஆதரவு அவருக்கு நிறைய இருக்கு. அந்த நம்பிக்கையிலதான் இப்படிப் பேசறாரு!" என்றார், சின்னசாமியிடம்.
சின்னசாமி பதில் சொல்லவில்லை.
சில மாதங்கள் கழித்து, சின்னசாமி, நல்லக்கண்ணு இருவரும் தனிமையில் இருந்தபோது, "நிறைய இடங்கள்ள, சட்டவிரோதமா சூதாட்டம் நடக்குது. முதல்வர் நடவடிக்கை எடுக்க மாட்டேங்கறாரே!" என்றார் சின்னசாமி.
"எப்படி எடுப்பாரு? அவருக்கு வருமானம் வந்துக்கிட்டிருக்கு இல்ல?" என்றார் நல்லக்கண்ணு, சிரித்தபடி.
"நீங்கதானே அவர் நல்ல ஆட்சி நடத்தறாருன்னு சொன்னீங்க?"
"ஆமாம், சொன்னேன். ஆனா, எதிர்க்கட்சி பலவீனமா இருக்கறதால, தன்னைத் தட்டிக் கேக்க யாரும் இல்லைங்கற தைரியத்தில, இப்ப நிறையத் தவறு செய்ய ஆரம்பிச்சுட்டாரு. சட்டவிரோத சூதாட்ட கிளப்கள் மேல நடவடிக்கை எடுக்காம இருக்காரு. மக்களுக்குத் தேவையான திட்டங்களை நிறைவேற்றாம மெத்தனமா இருக்காரு. அவர் மேலேயே ஊழல் புகார்கள் வருது. அதையெல்லாம் பத்தியும் கவலைப்படாம இருக்காரு. எனக்குக் கொஞ்சம் கவலையாத்தான் இருக்கு!" என்றார் நல்லக்கண்ணு.
"எதிர்க்கட்சி பலவீனமா இருக்கறப்ப, நாம ஏன் கவலைப்படணும்னு தெனாவெட்டா இருக்காரு போல இருக்கு!"
சில மாதங்களுக்குப் பிறகு நடந்த கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், ஜெயகுமார் சட்டமன்றக் கட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, சின்னசாமி புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
"சாதிச்சுட்டீங்களே! ஆம்பத்திலேயே நீங்கதான் முதல்வரா வந்திருக்கணும். ஆனா, ஜெயகுமார் இளைஞர்ங்கறதால அவருக்கு ஒரு வாய்ப்புக் கொடுக்க நினைச்சு, எல்லாரும் அவரைத் தேர்ந்தெடுத்தாங்க. எதிர்க்கட்சி பலவீனமா இருக்கறதால, அவர் சமாளிச்சுடுவார்னு எல்லாரும் நினைச்சோம். ஆனா, நீங்க அமைதியா இருந்து, சந்தர்ப்பம் பார்த்து அவரை வீழ்த்திட்டீங்க!" என்றார் நல்லக்கண்ணு.
"என்ன செய்யறது? ஜெயகுமார் நல்லா செய்வார்னு நினைச்சு, அவருக்கு வாய்ப்புக் கொடுத்தாங்க. ஆனா, தன்னோட தவறான செயல்களால, அவர் தன்னை பலவீமானவரா ஆக்கிக்கிட்டாரு. ஒத்தர் பலவீனமா ஆயிட்டப்பறம், அவரை வீழ்த்தறது சுலபம்தானே! அவ எதிர்க்கட்சி பலவீனமா இருக்குங்கற தைரியத்தில இருந்தாரு. அவரை எப்ப வீழ்த்தலாம்னு காத்துக்கிட்டு அவர் பக்கத்திலேயே நான் இருந்தது அவருக்குத் தெரியல!" என்றார் சின்னசாமி.
"வாழ்த்துக்கள், புதிய முதல்வரே!" என்றார் நல்லக்கண்ணு.
பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 87
பகைமாட்சி
குறள் 865:
வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்
பண்பிலன் பற்றார்க்கு இனிது.
No comments:
Post a Comment