Sunday, March 12, 2023

867. ராஜினாமா முடிவு!

"சார்! உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்" என்றான் சந்திரமோகன்.

"சொல்லுங்க, சந்திரமோகன்!" என்றார் பிரபாகர்.

"நான் பத்து வருஷமா உங்ககிட்ட வேலை செய்யறேன். நான் வந்தப்பறம், நம்ம தொழிற்சாலையில நிறைய முன்னேற்றங்களைக் கொண்டு வந்திருக்கேன்!"

"இதெல்லாம் எனக்குத் தெரியுமே!"

"நான் கொண்டு வந்த சில புராசஸ் இம்ப்ரூவ்மென்ட் எல்லாம் இந்த இண்டஸ்ட்ரியில வேற யாரும் செஞ்சிருக்க மாட்டாங்க!"

"ஆமாம்! நானே அப்படிச் சொல்லி இருக்கேன்! நீங்க செஞ்ச இம்ப்ருவ்மென்ட்டுக்கெலாம் உங்களை ரிவார்ட் பண்ணி இருக்கேன். நான் உங்களுக்குக் கொடுக்கற சம்பளம், உங்களுக்கு வேற எங்கேயும் கிடைக்காது!" என்றார் பிரபாகர், சற்று எரிச்சலுடன்.

'கிடைச்சிருக்கே!' என்று மனதுக்குள் நினைத்துப் புன்னகைத்த சந்திரமோகன், "ஆனா, சில காரணங்களால, நான் வேலையிலேந்து விலகிக்கறேன்!" என்று சொல்லி விட்டு, பிரபாகரைப் பார்த்தான்.

பிரபாகர் முகத்தில் சிறிது வியப்புத் தெரிந்தது. "நீங்க இன்னும் அதிக சம்பளம் எதிர்பார்த்தா, என்னால கொடுக்க முடியாது. வேலையை விட்டுப் போறது உங்க விருப்பம்!" என்றார் பிரபாகர்.

பிரபாகர் தன்னைச் சமாதானப்படுத்தி, தான் போகாமல் தடுக்க முயல்வார் என்று எதிர்பார்த்த சந்திரமோகனுக்குச் சற்றே ஏமாற்றமாக இருந்தது.

"சம்பளத்துக்காக நான் போகலைங்கறது உங்களுக்கே தெரியும்!"

"சந்தரமோகன்! நீங்க போகறதுன்னு தீர்மானிச்சுட்டீங்க. அதனால, இதைப் பத்திப் பேசறதில பிரயோசனமில்லை. நீங்க எந்த கம்பெனிக்குப் போறீங்கன்னு கூட நான் கேட்க மாட்டேன். நீங்க எந்த கம்பெனிக்குப் போனாலும், அவங்களுக்கு ஒரு அஸெட்டாத்தான் இருப்பீங்கங்கறதில எனக்கு சந்தேகம் இல்லை. உங்களை மாதிரி திறமையான ஒத்தர் எங்களுக்குக் கிடைக்கிறது கஷ்டம்தான். ஆனா என்ன செய்யறது? ஆல் தி பெஸ்ட்!" என்றார் பிரபாகர்.

"சந்திரமோகன் போறாரே! நீங்க அவரைப் போக வேண்டாம்னு சொல்லலியா?" என்றார் அக்கவுன்டன்ட் கதிரேசன்.

"போக வேண்டாம்னா, கேக்கவா போறாரு?" என்றார் பிரபாகர், சிரித்துக் கொண்டே.

கதிரேசன் சற்றுத் தயக்கத்துடன், "கொஞ்ச நாளாவே, சந்திரமோகனால கம்பெனியில நிறைய பிரச்னைகள் வந்துக்கிட்டிருக்கே!" என்றார்.

"ஆமாம். சந்திரமோகன் எல்லார்கிட்டேயும் திமிரா நடந்துக்கறரு, தன்னை விட சீனியர்களைக் கூட அதிகாரம் பண்றாரு. அவர் தொழிற்சாலையில நிறைய முன்னேற்றங்களை ஏற்படுத்தி இருக்கறதால, எனக்கு அவர் மேல நிறைய மதிப்பு இருக்கு, அதனால, மத்தவங்க அவரோட அதிகாரத்துக்கு பயப்படறாங்க, அவருக்கு எதிரா எங்கிட்ட புகார் கொடுக்கக் கூடத் தயங்கறாங்க, சமீபத்தில ரெண்டு மூத்த ஊழியர்கள் வேலையை விட்டுப் போனதுக்கு அவர்தான் காரணம் அப்படின்னெல்லாம் நீங்கதானே சொன்னீங்க!" என்றார் பிரபாகர், சிரித்தபடி.

பிரபாகரின் தந்தை காலத்திலிருந்தே அந்த நிறுவனத்தில் பணியாற்றி வருபவர் என்ற உரிமையில், நிறுவனத்தின் பிரச்னைகளைப் பற்றி, பிரபாகரிடம் வெளிப்படையாகப் பேசக் கூடியவர் அக்கவுன்டன்ட் கதிரேசன்.

"அப்படின்னா...?"

"நீங்க நினைக்கறது சரிதான்! அவர் போக வேண்டிய சூழ்நிலையை நானேதான் ஏற்படுத்தினேன். அவர் மற்ற ஊழியர்கள்கிட்ட நடந்துக்கற விதம் சரியில்லேன்னு அவர்கிட்ட சொல்லிப் புரிய வைக்க முயற்சி செஞ்சேன். ஆனா, அவர் தன்னை மாத்திக்கல. தான் இந்த கம்பெனிக்கு நிறைய கான்ட்ரிபியூட் பண்ணி இருக்கறதால, அவரை நான் எதுவும் செய்ய மாட்டேன்னு நினைச்சாரு. அதனாலதான், சமீப காலமா, அவரோட மதிப்பைக் குறைக்கிற மாதிரி சில நடவடிக்கைகளை எடுத்தேன். அவர் காயப்பட்டதா உணர்ந்து, வேற வேலையைத் தேடிக்கிட்டாரு!"

"அவர் நமக்குக் கிடைச்ச பெரிய அஸெட், அவர் நம்ம தொழிற்சாலையில நிறைய முன்னேற்றங்களைக் கொண்டு வந்திருக்காரு, அவர் நிரந்தரமா நம்ம கம்பெனியிலேயே இருக்கற மாதிரி பாத்துக்கணும்னெல்லாம் சொல்லுவீங்களே!"

"உண்மைதான். சொல்லப்போனா, அவர் நம்ம போட்டி நிறுவனத்திலதான் சேரப் போறாரு. நமக்கு அது நல்லது இல்லைதான். ஆனா என்ன செய்யறது? நம்ம நிறுவனத்தோட அடித்தளம் மாதிரி இருக்கற ஊழியர்கள்கிட்ட அவர் சரியா நடந்துக்காம, அதனால அவங்கள்ள சில பேர் வேலையை விட்டுப் போற அளவுக்கு வந்துடுச்சு. நான் அவர்கிட்ட சொல்லியும், அவர் மாறல. அதனால, அவரைப் போக வைக்கறதைத் தவிர வேற வழியில்லையே! அதனால நமக்கு சில பிரச்னைகள் வந்தா, அதையெல்லாம் எதிர்கொள்ள வேண்டியதுதான்!" என்றார் பிரபாகர்.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 87
பகைமாட்சி

குறள் 867:
கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து
மாணாத செய்வான் பகை.

பொருள்: 
தன்னை அடுத்துத் தன்னோடிருந்தும், பொருந்தாதவற்றைச் செய்பவனுடைய பகையைப் பொருள் கொடுத்தாவது கொள்ள வேண்டும்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...