Sunday, March 5, 2023

676. தொழிலைத் துவங்கிப் பார்!

"ஏதோ தொழிற்சாலை ஆரம்பிக்கப் போறதாச் சொன்னே! அதுவும் நம் ஊரை விட்டுட்டு வெளி மாநிலத்தில இருக்கற இந்தச் சின்ன ஊரைத் தேர்ந்தெடுத்திருக்கே! கேட்டா, இங்கதான் முலப்பொருள் கிடைக்குதுன்னு சொன்னே. உன்னோட நானும் வந்து இந்த ஊர்லேயே உக்காந்துக்கிட்டிருக்கேன். ஒரு மாசத்துக்கு மேல ஆச்சு. அடிக்கடி எங்கேயோ போயிட்டு வர. அப்பப்ப யாரையாவது அழைச்சுக்கிட்டு வந்து அவங்களோட ரொம்ப நேரம் பேசற. ஆனா இதுவரையிலும் தொழிற்சாலை கட்டடத்துக்கான பிளானைக் கூடத் தயார் பண்ணல! நீ என்ன செய்யறேன்னே எனக்குப் புரியலையே!" என்றான் சந்திரன் தன் நண்பன் கணேசனிடம்.

"தொழிற்சாலை ஆரம்பிக்கறதுக்கு முன்னால நிறைய ஏற்பாடுகள் செய்யணும் இல்ல?" என்றான் கணேசன்.

"அப்ப எதுக்கு என்னையும் உன்னோட கூட்டிக்கிட்டு வந்தே? ஏற்பாடுகளையெல்லாம் செஞ்ச பிறகு என்னை வரச் சொல்லி இருக்கலாமே!"

கணேசன் சந்திரனை முறைத்துப் பார்த்து விட்டு, "டேய்! உன்னை என் பார்ட்னரா இருக்கச் சொன்னேன். பார்ட்னர்னா ஆரம்பத்திலிருந்தே கூட இருக்க வேண்டாமா?" என்றான்.

"நான் இன்னும் பார்ட்னரா இருக்க ஒத்துக்கலையே! இந்தத் தொழிலைப் பத்தி எனக்கு எதுவும் தெரியாது. நீ சொல்றதால முதலீடு செய்யலாம்தான். ஆனா என் அப்பாதான் பணம் கொடுக்கணும். அவர் கேக்கற கேள்விக்கெல்லாம் என்னால பதில் சொல்ல முடியாது, நீயே அவர்கிட்ட விளக்கிச் சொல்லுன்னு சொன்னேன். ஆனா நீ அதைச் செய்யாம என்னை நேரா இங்கே அழைச்சுக்கிட்டு வந்துட்டே! நாம இங்கே இருக்கறதுக்கு நீதான் செலவு செய்யறே! நான் எதுவும் செய்யாம உக்காந்துக்கிட்டிருக்கேன். எனக்கு இது ரொம்ப கஷ்டமா இருக்கு!" என்றான் சந்திரன்.

"கவலைப்படாதே! இனிமே உனக்கும் வேலை இருக்கும். இத்தனை நாளா நான் செஞ்சதெல்லாம் டெக்னிகல் விஷயங்கள். அதனால உனக்கு இது எந்த அளவுக்குப் புரியும்னு நினைச்சுதான் உன்னை ஈடுபடுத்தல" என்றான் கணேசன்.

"தொழிற்சாலை ஆரம்பிக்கறதுன்னு முடிவு செய்யறதுக்கு முன்னாலேயே எல்லாத்தையும் ஆய்வு செஞ்சிருப்ப இல்ல?"

"நிச்சயமா! நிறைய ஆய்வெல்லாம் செஞ்சு, நிபுணர்களைக் கலந்தாலோசிச்சு, புராஜக்ட் ரிபோர்ட் தயாரிச்சு, அதை பாங்க்ல கொடுத்து, கடனுக்கான அங்கீகாரம் எல்லாம் கூட வாங்கியாச்சு. தொழிற்சாலைக்கான இடத்தைத் தேர்ந்தெடுத்து அதை வாங்க ஒப்பந்தம் கூடப் போட்டாச்சு."

"அப்புறம் என்ன?"

"நடைமுறையில இதை எப்படிச் செய்யப் போறோம், எல்லாத்தையும் நாமே நேரடியா செய்யறதா, அல்லது சில விஷயங்களை ஒப்பந்த்தக்காரர்கள் மூலமா செய்யறதா,  ஊர் மக்கள்கிட்டேந்து ஏதாவது எதிர்ப்புகள் வருமா, வேற ஏதாவது பிரச்னைகள் வருமா - கிணறு தோண்டறதிலேந்து எலக்டிரிக் லைன் கொண்டு வரது வரை எல்லாத்தையும் எப்படிப் பிரச்னை இல்லாம செய்யறது -, எந்த வகையில செஞ்சா எந்த மாதிரி பலன்கள் கிடைக்கும் இதையெல்லாம் நல்லா ஆராய்ஞ்சு பாத்துட்டுத்தானே வேலையை ஆரம்பிக்கணும்?" என்று விளக்கினான் கணேசன்.

"இதெல்லாம் புராஜக்ட் ரிபோர்ட் தயார் பண்றதுக்கு முன்னாடியே செய்ய வேண்டிய விஷயங்கள் இல்லையா? எல்லாத்தையும் இறுதி செஞ்சப்பறம், வேலையை ஆரம்பிக்கறதுக்கு முன்னால, மறுபடி இதையெல்லாம் செய்யணுமா?" 

"ஒரு பெரிய நிறுவனம் ஆரம்பிக்கப் போற தொழில்னா, நீ சொல்றது சரிதான். ஆனா நாம ரெண்டு பேர் மட்டுமே பார்ட்னரா இருக்கற ஒரு சிறிய நிறுவனம்தானே! ஒரு பெரிய நிபுணர் குழுவை வச்சு நிறையப் பணம் செலவழிச்சு நாம புராஜக்ட் ரிபோர்ட் தயாரிக்கல. அதனால தொழிற்சாலை அமைக்கிற வேலையை ஆரம்பிக்கறதுக்கு முன்னால இதையெல்லாம் சரிபாத்துக்கறது நல்லதுதான். சில பெரிய தொழிற்சாலைகள் எல்லாம் கூட ஆரம்பிச்சப்பறம் பல பிரச்னைகளை சந்திக்கறதைப் பாக்கறோம் இல்ல?"

"அப்படின்னா, ஒருவேளை இதையெல்லாம் சரிபார்த்தப்பறம், இந்தத் தொழிற்சாலையை ஆரம்பிக்கறதில நிறைய பிரச்னைகள் வருங்கற முடிவுக்கு நாம வந்தா?" என்றான் சந்திரன்.

"அப்படிப்பட்ட நிலைமை ஏற்பட்டா,, இது மட்டும் செலவு செஞ்சதை நஷ்டமா ஏத்துக்கிட்டு, திட்டத்தைக் கைவிட வேண்டியதுதான்!" என்றான் கணேஷ் சிரித்தபடி.

"அதனாலதான்...?" என்று இழுத்தான் சந்திரன்.

"ஆமாம். அதனாலதான் உன்னோட முதலீட்டை அப்புறம் வாங்கிக்கலாம்னு நினைச்சு உங்கப்பாகிட்ட இது பத்திப் பேசல. நஷ்டம் ஏற்பட்டா அது என்னோட போகட்டுமே!" என்ற கணேஷ், தொடர்ந்து, "ஆனா, அப்படி நடக்கல. எல்லாமே நல்லபடியாத்தான் இருக்கு!" என்றான் உற்சாகத்துடன்."

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 68
வினை செயல்வகை

குறள் 676:
முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்
படுபயனும் பார்த்துச் செயல்.

பொருள்:
ஒரு செயலை முடிக்கும் வகை, வரக் கூடிய இடையூறுகள், அதைச் செய்து முடித்ததும் கிடைக்கப் போகும் பெரும் பயன் ஆகியவற்றை ஆராய்ந்து செய்ய வேண்டும்.

      அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...