"கோட்டை வெளியே பார்ப்பதற்குப் பெரிதாக இருக்க வேண்டும், பெரிய பரப்பை வளைத்துக் கோட்டையின் சுற்றுச் சுவர்களைக் கட்ட வேண்டும், ஆனால், கோட்டைக்குள் கட்டிடங்கள் மிகக் குறைவாகவே இருக்க வேண்டும், உள்ளே அரண்மனையைச் சேர்ந்தவர்கள், கோட்டையைக் காவல் செய்யும் வீரர்கள், தேவையான சில அங்காடிகள் இவை தவிர வேறு யாரும் அல்லது எதுவும் இருக்கக் கூடாது" என்று சிற்பி கூறியபோது, அந்த யோசனை மன்னனுக்கு முதலில் விந்தையாகத் தோன்றியது.
"ஏன் அப்படி?" என்று கேட்டான் மன்னன்.
"அரசே! கோட்டை என்பது மன்னரையும், போர்ப்படைகளையும், முக்கியமான வேறு சிலரையும், படையெடுத்து வரும் எதிரிகளிடமிருந்து பாதுகாப்பாக வைத்திருக்கும் இடம். பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் இருக்கும் இடம் சிறிதாக இருந்தால்தான், அதைச் சிறப்பாகப் பாதுகாக்க முடியும். கோட்டை பெரிதாக இருக்க வேண்டும். கோட்டைச் சுவர் அதிக சுற்றளவைக் கொண்டிருந்தால், அது தாக்குவதற்குக் கடினமானது என்ற தோற்றத்தைக் கொடுக்கும்.
"சுவர்களில் பல இடங்களில் சிறு ஓட்டைகள் மூலம் வெளியே சூழ்ந்திருக்கும் படைகளை உள்ளிருந்து தாக்குவதற்கான வசதிகளை அமைத்துக் கொள்ளலாம். இவற்றில் ஓரிரண்டு இடங்களிலிருந்து தாக்குதல் நடத்தினால் கூட, வெளியே இருக்கும் படை மிரண்டு விடும். அடுத்தாற்போல் எந்தப் பகுதியிலிருந்து தாக்குதல் வரும் என்று தெரியாமல், அவர்கள் அச்சத்திலும், குழப்பத்திலும் இருப்பார்கள்.
"கோட்டைக்குள், மையப்பகுதியில் மட்டும் குறைவான கட்டிடங்களை அமைக்க வேண்டும். கோட்டையின் சுற்றுச் சுவரிலிருந்து, கட்டிடங்கள் உள்ள மையப்பகுதி வரை உள்ள இடம் வெட்ட வெளியாக இருக்க வேண்டும். அப்போதுதான், ஒருவேளை எதிரிப்படைகள் கோட்டைக்குள் நுழைந்து விட்டாலும், வெட்டவெளியைத் தாண்டி மையப்பகுதிக்கு அவர்கள் வருவதற்குள், அவர்களைப் பல இடங்களிலிருந்தும் தாக்கிப் பின்வாங்கச் செய்ய முடியும்."
சிற்பியின் விளக்கத்தைக் கேட்ட பிறகு, சிற்பி கூறியபடியே கோட்டையைக் கட்டமைத்தான் மன்னன்.
"என்ன இது, இவ்வளவு பெரிய கோட்டை! இதை நாம் எதிர்பார்க்கவே இல்லையே!" என்றான் வடுக நாட்டின் மீது படையெடுத்து வந்திருந்த விசாக நாட்டின் படைத்தளபதி.
"ஒரு சிறிய நாடு இவ்வளவு பெரிய கோட்டையை அமைத்திருப்பது விந்தையாக இருக்கிறது!" என்றான் துணைத்தளபதி .
அப்போது எங்கிருந்தோ விரைந்து வந்த சில அம்புகள் படையின் முன்னணியிலிருந்த சில குதிரை வீரர்களைத் தாக்க, அவர்கள் குதிரைகளின் மேலிருந்து கீழே விழுந்தனர். அதனால், குதிரைகள் அச்சமடைந்து தறிகெட்டு ஓட, அதன் விளைவாகப் படையின் பல பகுதிகள் நிலைகுலைந்தன.
"முதலில் நாம் இங்கிருந்து திரும்ப வேண்டும். சற்றுத் தொலைவில் எங்காவது முகாமிட்டு, என்ன செய்வதென்று ஆலோசிக்கலாம்" என்ற தளபதி, படை முழுவதையும் திரும்பிச் செல்ல ஆணையிட்டான்.
சற்று தூரத்தில், ஒரு திறந்த வெளியில் படைகளை நிறுத்தி விட்டு படைத்தளபதி துணைத்தளபதியுடன் கலந்தாலோசித்தான்.
"இந்தப் படையெடுப்பே தவறான முடிவு. இவ்வளவு பெரிய கோட்டையைத் தாக்கி உள்ளே செல்லக் கூடிய வலிமை நம் படைகளுக்கு இல்லை. நாம் திரும்பிச் செல்வதுதான் உத்தமம்!" என்றான் துணைத்தளபதி.
"மன்னருக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. ஆனால் நாம் கோட்டையை முற்றுகையிட்டால், நம்மால் கோட்டையைப் பிடிக்கவும் முடியாது, உயிரோடு திரும்பிச் செல்லவும் முடியாது. மன்னரிடம் விளக்கிச் சொல்வோம். நமக்கு வேறு வழியில்லை!" என்றான் தளபதி.
"நம் மீது படையெடுத்து வந்த விசாக நாட்டுப் படைகள் திரும்பச் சென்று விட்டன!" என்று அரசரிடம் தெரிவித்தான் வடுக நாட்டின் கோட்டைத் தளபதி.
பொருட்பால்
அரணியல்
அதிகாரம் 75
அரண்
குறள் 744:
சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகை
ஊக்கம் அழிப்ப தரண்.
No comments:
Post a Comment