Saturday, March 18, 2023

685. கதிர்வேந்தனின் கேள்விகள்!

"தூது போகிறவர்கள் தனியாகத்தானே போவார்கள்?" என்று கேட்டான் கதிர்வேந்தன்.

"பொதுவாக அப்படித்தான். ஏன் கேட்கிறாய்?" என்றான் குமாரவிசயன்.

"இல்லை. நீங்கள்தான் தூதர். என்னை ஏன் உங்களுடன் அனுப்பி இருக்கிறார்கள்?"

"நீ எனக்கு உதவியாக இருப்பாய் என்று நினைத்து அனுப்பி இருப்பார்கள்!"

"ஆனால், நான் உங்களுக்கு எந்த விதத்திலும் உதவவில்லையே! அதற்கான தேவையோ, வாய்ப்போ கூட ஏற்படவில்லையே!"

"அப்படியானால், உன்னை ஏன் என்னுடன் அனுப்பி இருக்கிறார்கள் என்பதை நீயே சிந்தித்துத் தெரிந்து கொள்!"

"அதற்கான அவசியத்தைக் கூட அமைச்சர் எனக்கு விட்டு வைக்கவில்லை. உங்களிடமிருந்து கற்றுக் கொள்ளத்தான் என்னை உங்களுடன் அனுப்பி வைப்பதாகவும், வாயை மூடிக் கொண்டு உங்கள் பின்னால் சென்று, நீங்கள் பேசுவதையும், செய்வதையும் மட்டும் கவனிக்கும்படியும், கிளம்பும்போதே அமைச்சர் என்னிடம் சொல்லி விட்டார்!"

"அப்படியானால், என்னிடம் ஏன் கேட்கிறாய்?"

"ஒருவேளை, நீங்கள் வேறு ஏதேனும் காரணம் சொல்வீர்களோ என்று நினைத்தேன். உங்களிடம் என்னைப் பற்றி அமைச்சர் என்ன சொன்னார் என்று நான் தெரிந்து கொள்ளலாமா?"

"ஓ! நிச்சயமாக. 'இந்தப் பையன் எதிர்காலத்தில் ஒரு சிறந்த தூதனாக வருவான். அப்போது நீ உயிருடன் இருப்பாயோ, என்னவோ! அதனால், இப்போதே அவனைப் பார்த்துக் கற்றுக் கொள்!' என்று சொல்லி அனுப்பினார்!"

"கேலி வேண்டாம், குமாரவிசயரே! உங்களிடம் நிறையக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆவல் எனக்கு இருக்கிறது. உங்களிடம் சில கேள்விகளையும், விளக்கங்களையும் கேட்கலாமா?"

"தாராளமாகக் கேட்கலாம். ஆனால், அமைச்சர் உன்னை வாயை மூடிக் கொண்டு இருக்கச் சொன்னதாக நீதானே சொன்னாய்!"

"மறுபடியும் கேலியா? உங்களிடம் கற்றுக் கொள்ளும் ஆவலில்தானே கேட்கிறேன்!"

"சரி, கேள்."

"முதலில் என் வியப்பைத் தெரிவித்துக் கொள்கிறேன். சொல்ல வேண்டிய விஷயங்கள் அனைத்தையும் மிகவும் அழகாக, சுருக்கமாகத் தொகுத்துக் கூறினீர்களே! இந்நாட்டு மன்னர் கூட நீங்கள் சொன்ன விதத்தைக் கேட்டு வியந்தார் என்பதை கவனித்தேன்."

"சொல்ல வேண்டியவற்றைச் சுருக்கமாக, கோர்வையாக, எதையும் விட்டு விடாமல் தொகுத்துச் சொல்ல வேண்டியது ஒரு தூதனுக்கு இருக்க வேண்டிய அடிப்படைத் திறமை. நீ ஒரு தூதனாக வேண்டுமென்றால், இதை முதலில் கற்றுக் கொள்ள வேண்டும்!"

"சரி. நம் நாட்டு வளங்கள் எப்படி இருக்கின்றன என்று அந்த மன்னர் கேட்டதற்கு, இந்த ஆண்டு பருவ மழை அதிகம் பெய்து, பயிர்களில் ஒரு பகுதி சேதமாகி விட்டதால், விவசாயப் பொருள் உற்பத்தி சற்றுக் குறைந்து விட்டதாகக் கூறினீர்கள். உண்மையில், இந்த ஆண்டு நம் நாட்டில் விளைச்சல் அமோகமாக இருந்திருக்கிறதே!"

"உண்மைதான். வரும்போது கவனித்தேன். இவர்கள் நாட்டில் ஓரளவு வறட்சி நிலவுகிறது. இந்த நிலையில், நம் நாட்டில் விளைச்சல் அமோகம் என்று சொன்னால், தங்கள் நாட்டில் வறட்சி நிலவும்போது, இவர்கள் நாட்டில் மட்டும் விளைச்சல் அமோகமாக இருந்திருக்கிறதே என்ற எண்ணம் இந்த மன்னர் மனதில் தோன்றக் கூடும். ஒருவர் எவ்வளவு நல்ல மனிதராக இருந்தாலும், இது போன்ற ஒப்பீடுகளும், அதனால் சில எதிர்மறை எண்ணங்களும் ஏற்படத்தான் செய்யும். நம் நாட்டிலும் சிறிது பாதிப்பு இருக்கிறது என்பது அவர்களுக்கு ஆறுதலாக இருக்கும். இது மனித இயல்பு. அதனால் நிலைமையைச் சற்றே மாற்றிச் சொன்னேன். இது பொய் கூறுவதல்ல!"

"புரிகிறது. ஆனால் ஒரு பொய்யையும் நீங்கள் கூறி இருக்கிறீர்கள்!"

"என்ன பொய் அது?"

"நாம் வரும் வழியில் எல்லாம், இந்த நாட்டு மக்கள் நமக்கு உணவும், உறைவிடமும் அளித்ததாகவும், இந்த நாட்டு மக்களின் விருந்தோம்பல் பண்பை வியப்பதாகவும் கூறினீர்கள். அப்படி யாரும் நமக்கு விருந்தோம்பல் அளிக்கவில்லையே! கிடைத்ததை உண்டு, அரைப்பட்டினியுடன்தானே பயணம் செய்தோம்?"

"மன்னரிடம் அவர் நாட்டு மக்களைப் பற்றி உயர்வாகச் சொன்னால், அவர் மனம் மகிழாதா? அவர் மகிழ்ச்சியான மனநிலையில் இருந்தால், நாம் சொல்பவற்றை அமைதியுடன் கேட்டு நமக்கு ஆதரவான பதிலைக் கூற வாய்ப்பு அதிகம் உள்ளது அல்லவா?"

"அப்படித்தானே நடந்திருக்கிறது! தன் நாட்டுக்கு நன்மை பயக்கும் விதத்தில் ஒரு தூதர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை உங்களுடன் வந்த இந்த ஒரு பயணத்திலேயே நிறையக் கற்றுக் கொண்டேன்!" என்றான் கதிர்வேந்தன்.

பொருட்பால்
அமைச்சியல்
அதிகாரம் 69
தூது

குறள் 685:
தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி
நன்றி பயப்பதாந் தூது.

பொருள்:
அடுத்த அரசிடம் சொல்லவேண்டியவற்றைத் தொகுத்துச் சொல்லியும், அவருக்கு வெறுப்பூட்டக் கூடியவற்றை விலக்கியும், இனிய சொற்களால் அவர் மனம் மகிழும்படி பேசியும், தம் சொந்த நாட்டிற்கு நன்மையைத் தேடித் தர வேண்டியது தூதரின் பண்பாகும்.

      அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...