"ஆம் அரசே! நேற்று இரவு வந்தார். அவரை நம் விருந்தினர் விடுதியில்தான் தங்க வைத்திருக்கிறோம். இன்று காலை தங்களைச் சந்திக்கலாம் என்று கூறி இருந்தோம். ஆனால் இன்று காலை, திடீரென்று அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போய் விட்டது. அதனால், நாளைதான் அவரை அரசவைக்கு அழைத்து வர முடியும் என்று நினைக்கிறேன்."
"உடல்நிலை சரியில்லாவிட்டால் என்ன? அரசவைக்கு வந்து செய்தி சொல்லி விட்டுப் போக வேண்டியதுதானே!" என்றான் சுபகீர்த்தி, சற்று எரிச்சலுடன்.
"அவருக்குக் கடுமையான வயிற்றுப் போக்கு, அரசே!" என்றார் அமைச்சர், சற்றுத் தயக்கத்துடன்.
அடுத்த நாளும் தூதர் வரவில்லை. அரண்மனை வைத்தியர் அவருக்கு மருந்து கொடுத்தும், அவருடைய வயிற்றுப் போக்கு நிற்கவில்லை என்று தகவல் வந்தது.
"அப்படியானால், நீங்களே அவரைச் சந்தித்துச் செய்தி என்ன என்று கேட்டு அறிந்து வாருங்கள்!" என்றான் அரசன், அமைச்சரிடம்.
"அதற்கு முயற்சி செய்தேன், அரசே! ஆனால், செய்தியைத் தங்களிடம்தான் சொல்ல வேண்டும் என்று மரகத நாட்டு மன்னர் அவரிடம் கூறி இருப்பதாகச் சொல்கிறார்!" என்றார் அமைச்சர்.
"அப்படியானால் ஒன்று செய்யலாம். இன்று மாலை, நானே விருந்தினர் விடுதிக்குச் சென்று அவரைப் பார்த்து, மரகத நாட்டு மன்னர் அவரிடம் சொல்லி அனுப்பியுள்ள செய்தியைக் கேட்டுத் தெரிந்து கொள்கிறேன்!" என்றான் சுபகீர்த்தி.
"அரசே! தூதர் இருக்கும் இடத்துக்குத் தாங்கள் செல்வது பொருத்தமாக இருக்காது!"
"ஏலத்தீவு யாருக்குச் சொந்தம் என்பது பற்றி நமக்கும் மரகத நாட்டுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருக்கும் நிலையில், மரகத நாட்டு மன்னர் என்ன செய்தி சொல்லி அனுப்பி இருப்பார் என்று தெரிந்து கொள்ள ஆவலாய் இருக்கிறேன்!" என்றான் அரசன்.
"என்ன தூதரே, உடல்நிலை எப்படி இருக்கிறது?" என்றான் அரசன்.
கட்டிலில் படுத்திருந்த தூதன் மேகநாதன் திடுக்கிட்டவனாக,"அரசே! தாங்களா?" என்றபடி, தலையைத் தூக்கி எழுந்திருக்க முயன்றான்.
"சிரமப்பட வேண்டாம். படுத்த நிலையிலேயே நீர் கொண்டு வந்த செய்தியைச் சொல்லும்!" என்றான் சுபகீர்த்தி, அதிகார தொனியில்.
"அரசே! தாங்கள் நின்று கொண்டிருக்கும்போது, நான் படுத்துக் கொண்டு தங்களிடம் பேசுவது..."
அருகிலிருந்த நாற்காலியில் அமர்ந்த அரசன், "இப்போது சொல்லும்!" என்றான்.
மேகநாதன் மெல்லிய குரலில் பேசியது அரசனுக்குக் காதில் சரியாக விழாததால், குனிந்து மேகநாதனின் வாயருகில் காதை வைத்துக் கொண்டு கேட்க வேண்டி இருந்தது.
மேகநாதன் பேசி முடித்ததும், அரசனின் முகம் சிவந்தது. கோபத்தில் வாளை உருவப் போனவன், தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு எழுந்தான்.
அகிலிருந்த அமைச்சர் அரசனின் படபடப்பைப் பார்த்து விட்டு, "அரசே! தூதர் கூறிய செய்தி என்ன?" என்றார், தயக்கத்துடன்.
"ஏலத்தீவு மரகத நாட்டுக்குச் சொந்தமானதாம். அங்கிருக்கும் நம் படைகளை நாம் உடனே விலக்கிக் கொள்ளாவிட்டால், மரகத நாட்டின் கப்பல் படையை அனுப்பி, அந்தத் தீவில் இருக்கும் நம் மொத்தப் படைகளையும் அழித்து விடுவானாம்! இந்தச் செய்தியை இவன் நம் அரசவையில் கூறி இருந்தால் எனக்குப் பெருத்த அவமானமாகி இருக்கும். அந்த நிலையில், இவனை என்ன செய்திருப்பேனோ தெரியாது. இவனுக்கு உடல்நிலை சரியானாலும், சரியாகாவிட்டாலும், இவனை நாளைக் காலை நம் நாட்டின் எல்லைக்கு வெளியே கொண்டு விடச் செய்யுங்கள்!" என்று அமைச்சரிடம் கூறி விட்டுக் கோபமாக வெளியேறினான் சுபகீர்த்தி.
மேகநாதனின் முகத்தைப் பார்த்த அமைச்சருக்கு, அவன் இதழோரத்தில் ஒரு புன்னகை தவழ்ந்ததாகத் தோன்றியது.
பொருட்பால்
அமைச்சியல்
அதிகாரம் 69
தூது
குறள் 687:
கடனறிந்து காலங் கருதி இடனறிந்து
எண்ணி உரைப்பான் தலை.
பொருள்:
தன் கடமை இன்னதென்று தெளிவாக அறிந்து, அதைச் செய்வதற்கு ஏற்ற காலத்தைக் கருத்தில் கொண்டு, தக்க இடத்தையும் ஆராய்ந்து செய்தியைச் சொல்கின்றவனே தூதன்.
No comments:
Post a Comment