"அதனால், அவனிடம் உண்மைகளை எடுத்துக் கூறவும், அவன் வாதங்களுக்கு பதில் கூறவும், நாம் அனுப்பும் தூதர் நல்ல கல்வி அறிவு உள்ளவராக இருக்க வேண்டும். அவனிடம் நம் கருத்துக்களைத் துணிவாகவும், தெளிவாகவும் எடுத்துச் சொல்லக் கூடியவராக இருக்க வேண்டும்.
"சேர்வராயனிடம் இன்னொரு குணம் உண்டு. தன் வாதங்கள் எடுபடாமல் போனாலோ, மற்றவர் தன் கருத்தில் உறுதியாக இருந்தாலோ, அவர்களை அச்சுறுத்த நினைப்பான். தூதர்களுக்கு எந்தத் தீங்கும் இழைக்கக் கூடாது என்ற மரபு இருந்தாலும், தன் கோபமான பார்வையாலும், அச்சுறுத்தும் பேச்சுக்களாலும், துதராக வந்தவரை மிரட்டப் பார்ப்பான். இவற்றையெல்லாம் சமாளிக்கக் கூடிய ஒருவர்தான் தூதராகச் செல்ல வேண்டும்."
அரசன் கூறியதை, அமைச்சர் மௌனமாகக் கேட்டுக் கொண்டிருந்தார்.
"என்ன, அமைச்சரே! நான் குறிப்பிட்ட தகுதிகள் உள்ள யாரும் உங்கள் கவனத்துக்கு வரவில்லையா?"
"ஒருவர் இருக்கிறார், அரசே! ஆனால், அவரைத் தூதராக அனுப்ப முடியுமா என்று தெரியவில்லை!" என்றார் அமைச்சர், தயக்கத்துடன்.
"யார் அவர்? அவரை ஏன் அனுப்ப முடியாது?"
"தாங்கள் விருப்பப்பட்டால் அனுப்பலாம். ஆனால், அவர் இப்போது சிறையில் இருக்கிறார்!" என்றார் அமைச்சர்.
"சிறையில் இருக்கிறாரா? யார் அவர்?"
"உங்கள் ஒன்று விட்ட சகோதரர் நந்திவர்மர்!" என்றார் அமைச்சர், தயக்கத்துடன்.
"நந்திவர்மனா? ராஜதுரோகக் குற்றத்துக்காகச் சிறையில் இருக்கும் அவன்தான் உங்களுக்குக் கிடைத்தானா?" என்றான் அரசன், கோபத்துடன்.
"அரசே! தாங்கள் அவருக்கு நிர்வாகத்தில் ஒரு பொறுப்புக் கொடுத்தீர்கள். ஆனால், அவர் செய்த சில விஷயங்கள் உங்களுக்குப் பிடிக்கவில்லை. நீங்கள் அவரைக் கூப்பிட்டு விசாரித்தபோது, அவர் தன் பக்கத்து நியாயங்களை உங்களிடம் எடுத்துக் கூறினார். அவர் கருத்துக்களை நீங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.
"தனக்குச் சரியென்று தோன்றும் விதத்திலும், நாட்டு நலனுக்கு எது உகந்தது என்று சிந்தித்தும்தான் செயல்படுவதாக அவர் கூறினார். நீங்கள் கோபமடைந்து அவரைப் பதவிநீக்கம் செய்ததுடன், சிறையிலும் அடைத்து விட்டீர்கள். அவர் தங்களுக்கு எதிராகவோ, நாட்டு நலனுக்கு எதிராகவோ, எதையும் செய்யவில்லை. தங்கள் கோபத்துக்கு அஞ்சாமல், தன் கருத்துக்களில் உறுதியாக இருந்ததுதான் அவர் செய்த குற்றம்.
"யோசித்துப் பார்த்தால், தூதராகச் செல்பவருக்கு இருக்க வேண்டிய குணங்கள் அவரிடம் இருப்பதைத் தாங்கள் உணர்வீர்கள். தாங்கள் அவரைச் சிறையிலிருந்து விடுவித்து தூதராக அனுப்புவதுடன், அரசுப் பணிகளில் அவரைத் தொடர்ந்து பயன்படுத்திக் கொள்வது தங்களுக்கும் நல்லது, நாட்டுக்கும் நல்லது என்பது என் பணிவான கருத்து!"
அமைச்சர் தன் கருத்தைக் கூறி விட்டு, அரசன் என்ன சொல்லப் போகிறானோ என்ற தயக்கத்துடன் நின்றார்.
ஒரு நிமிடம் மௌனமாக இருந்த அரசன், "அமைச்சரே! உங்கள் பேச்சைக் கேட்டதும், தூதருக்கு இருக்க வேண்டும் என்று நான் குறிப்பிட்ட குணங்கள் நந்திவர்மனிடம் மட்டுமல்ல, உங்களிடமும் இருக்கின்றன என்று அறிந்து கொண்டேன். நந்திவர்மனை விடுதலை செய்து, மரியாதையுடன் அழைத்து வரச் சொல்லுங்கள். நானே அவனிடம் பேசுகிறேன்!" என்றான் அரசன்.
பொருட்பால்
அமைச்சியல்
அதிகாரம் 69
தூது
குறள் 686:
கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்
தக்கது அறிவதாம் தூது.
பொருள்:
கற்க வேண்டியவற்றைக் கற்று, பிறருடைய பகையான பார்வைக்கு அஞ்சாமல் கேட்பவர் உள்ளத்தில் பதியுமாறு சொல்லி, காலத்துக்குப் பொருத்தமானதை அறிந்து செயல்படுபவனே தூதன்.
No comments:
Post a Comment