Saturday, March 18, 2023

684. அமைச்சரின் பரிந்துரையை ஏற்காதது ஏன்?

எதிரி நாட்டுக்குத் தூது சென்று திரும்பிய அறிவானந்தம் அரசரைச் சந்தித்து, எதிரி நாட்டு அரசரிடம் தான் பேசியதையும் அவர் கூறிய பதிலையும் கூறினார்.

அறிவானந்தம் சென்றதும், அமைச்சரை அழைத்த அரசர், "அமைச்சரே! தூது சென்ற அறிவானந்தம் திரும்ப வந்து விட்டார். நாம் கூறிய யோசனையை பரிதி நாட்டு மன்னர் கதிர்வேலர் ஏற்றுக் கொண்டு விட்டார்" என்றார்.

"மிக்க மகிழ்ச்சி, அரசே!" என்றார் அமைச்சர்.

"உங்கள் வார்த்தையில் தொனிக்கும் மகிழ்ச்சி உங்கள் முகத்திலோ, குரலிலோ பிரதிபலிக்கல்லையே!"என்றார் அரசர், சிரித்தபடி. 

"அப்படி ஒன்றும் இல்லை, மன்னரே!" என்றார் அமைச்சர்.

"எனக்குத் தெரியும், அமைச்சரே! நீங்கள் பரிந்துரைத்த ராமதாசரை நான் தூதராக அனுப்பவில்லை என்ற வருத்தம் உங்களுக்கு இருப்பது நியாயம்தான்!"

"அப்படி எதுவும் இல்லை, அரசே! ராமதாசர் அறிவுக் கூர்மை மிகுந்தவர், நிறைந்த கல்விப் புலமை அமைந்தவர். அப்படிப்பட்ட ஒருவர் தூதராகச் சென்றால் சிறப்பாக இருக்கும் என்று கருதினேன். அவ்வளவுதான்."

"நீங்கள் கூறியபடி, ராமதாசரை அழைத்து அவரை தூதுவராகப் போகும்படி சொன்னேன். அவர்தான் அந்தப் பணிக்குத் தான் பொருத்தமாக இருக்க மாட்டேன் என்று கூறி, அறிவானந்தத்தைப் பரிந்துரைத்தார். தூது செல்வது பற்றி அவர் அறிவானந்தத்துக்கு விரிவாக ஆலோசனை கூற வேண்டும் என்று நான் கேட்டுக் கொண்டேன். அதன்படியே, ராமதாசரிடம் ஆலோசனை பெற்றுதான் அறிவானந்தம் தூதராகச் சென்று வந்து, தன் பணியை வெற்றிகரமாக முடித்திருக்கிறார்! நீங்கள் உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்ததால், உங்களிடம் இந்த விவரங்களை நான் முன்பே கூறவில்லை" என்று விளக்கினர் அரசர்.

 "தான் இந்தப் பணிக்குப் பொருத்தமானவர் இல்லை என்று ராமதாசர் ஏன் கூறினார் என்பது எனக்கு வியப்பாக இருக்கிறது, அரசே! அப்படி அவர் தன்னைப் பொருத்தமானவர் இல்லை என்று கருதியிருந்தால், தூதராகச் செல்பவருக்கு அவர் ஆலோசனை வழங்கியது மட்டும் எப்படிப் பொருத்தமாக இருக்க முடியும்?" என்றார் அமைச்சர், குழப்பத்துடன்.

"அமைச்சரே! தூதருக்கு இருக்க வேண்டிய அறிவுக் கூர்மை, கல்வி இரண்டும் ராமதாசரிடம் நிரம்ப இருப்பதால், அவர்தான் தூது செல்லத் தகுதியானவர் என்று நீங்கள் கூறியதை அவரிடம் சொன்னபோது, அவர் என்ன சொன்னார் தெரியுமா?"

"என்ன சொன்னார்? "

"'தூதராக இருப்பவருக்கு இன்னொரு தகுதியும் இருக்க வேண்டும் - தோற்றப் பொலிவு! அது என்னிடம் இல்லை. என் மீது கொண்ட அன்பினால், அமைச்சர் அதைப் பொருட்படுத்தவில்லை போலும்! ஆனால், தோற்றப் பொலிவும் தூதருக்கு முக்கியம். அறிவுக் கூர்மை, தோற்றப் பொலிவு, கல்விப் புலமை மூன்றும் நிறைந்த ஒருவர்தான் தூது செல்லத் தகுந்தவர்' என்று கூறி அவர் அறிவானந்தத்தைப் பரிந்துரைத்தார்!" என்று கூறி, அமைச்சரின் முகத்தைப் பார்த்தார் அரசர்.

ராமதாசரின் அம்மை வடுக்கள் நிறைந்த முகம் அமைச்சரின் மனதில் வந்து போக, அதைத் தான் எப்படிக் கருத்தில் கொள்ளாமல் போனோம் என்று வியந்தார் அமைச்சர்.

பொருட்பால்
அமைச்சியல்
அதிகாரம் 69
தூது

குறள் 684:
அறிவுரு வாராய்ந்த கல்விஇம் மூன்றன்
செறிவுடையான் செல்க வினைக்கு.

பொருள்:
தூது உரைக்கும் செயலை மேற்கொள்பவர் அறிவு, தோற்றப் பொலிவு, ஆய்ந்து தெளிந்த கல்வி ஆகிய மூன்றும் நிறைந்தவராக இருத்தல் வேண்டும்.

      அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...