"நீங்கள் சொல்வது சரிதான். இனி அவனை வஞ்சகமாகத்தான் கொல்ல வேண்டும்" என்றான் கம்சனின் நண்பனும் ஆலோசகனுமான சாணூரன்.
"எப்படி?"
"அரசே! இவ்வளவு காலம் நீங்கள் கிருஷ்ணன் இருக்கும் இடத்துக்குச் சிலரை அனுப்பி, அவனைக் கொல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டீர்கள். அவை தோல்வி அடைந்து விட்டன. கிருஷ்ணனை நம் இடத்துக்கு வரவழைத்தால், அவனை எப்படியாவது கொன்று விடலாம்!"
"அவனை எப்படி இங்கே வரவழைப்பது? வரவழைத்த பின் எப்படிக் கொல்வது?"
"கொல்வதற்குப் பல வழிகள் உள்ளன. கிருஷ்ணன் நம் அரண்மனைக்கு வரும் வழியிலேயே, நம்மிடம் இருக்கும் மதம் பிடித்த யானையான குவலயபீடத்தை அவன் மீது ஏவி அவனைக் கொல்ல வைக்கலாம். அதை ஒரு விபத்து என்றுதான் அனைவரும் கருதுவார்கள். ஒருவேளை அவன் யானையிடமிருந்து தப்பித்து விட்டால், அவனை மல்யுத்தத்துக்கு அழைக்கலாம். மல்யுத்தத்தில் என்னை வெல்ல யாரும் இல்லையே! என்னுடன் அவனை மல்யுத்தம் செய்ய அழைத்து, நான் அவனைக் கொன்று விடுவேன்!" என்றான் சாணூரன், உற்சாகத்துடன்.
"நீ சொல்வது நல்ல யோசனைதான். ஆனால், கிருஷ்ணனை இங்கே எப்படி வரவழைப்பது?" என்றான் கம்சன், யோசனையுடன்.
"நம் தலைநகரில் தனுர்யாகம் (வில்லை வளைத்து நாணேற்றும் போட்டி) நடக்க இருக்கிறதல்லவா? அதற்கு கிருஷ்ணனையும், பலராமனையும் வரும்படி அழைப்பு விடுப்போம்!"
"நல்ல யோசனைதான். ஆனால், ஒரு தூதரை அனுப்பி முறையாக அழைப்பு விடுத்தால்தான் அவர்கள் வருவார்கள்" என்றான் கம்சன்.
"நம் வீரர்களில் ஒருவனிடம் ஓலை அளித்து அனுப்பி, அவர்கள் இருவரையும் இங்கு அழைத்து வரச் செய்யலாம்!" என்றான் சாணூரன்.
"யாராவது ஒரு வீரனை தூதனாக அனுப்ப முடியாது. தூதராகச் செல்லச் சில தகுதிகள் வேண்டும்!" .
"அவை என்ன தகுதி கள்?"
"தூதருக்கு இருக்க வேண்டிய முக்கியமான குணம் அன்புடன் நடந்து கொள்வது. வேறு சில குணங்களும் வேண்டும்!"
"அவை என்ன குணங்கள்?"
"நல்ல குடியில் பிறந்தவராக இருக்க வேண்டும். அரசர்கள் பாராட்டக் கூடிய பண்பு உள்ளவராக இருக்க வேண்டும்" என்றான் கம்சன்
"அத்தகைய குணங்கள் உள்ள யாராவது நம்மிடையே இருக்கிறார்களா?" என்றான் சாணூரன்.
"ஒருவர் இருக்கிறார். அமைச்சர் அக்ரூரர்!"
"அவர் மிகவும் மென்மையானவராயிற்றே?"
"அவருடைய இயல்பான குணங்களான அன்பு, பண்பு இவற்றினால் வரும் மென்மைதான் அது. அவர் என் சிறிய தகப்பனாரின் புதல்வர். கிருஷ்ணனுக்கும் தாய்மாமன் முறை. அதனால், அவர் கூறுவதை கிருஷ்ணன் ஏற்றுக் கொள்வான். அவரையே தூதராக அனுப்பி கிருஷ்ணனையும், அவன் அண்ணன் பலராமனையும் அழைத்து வரச் சொல்கிறேன்" என்றான் கம்சன்.
பொருட்பால்
அமைச்சியல்
அதிகாரம் 69
தூது
குறள் 681:
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்
பண்புடைமை தூதுரைப்பான் பண்பு.
பொருள்:
அன்பான குணமும், நல்ல குடிப்பிறப்பும், அரசினர் பாராட்டக் கூடிய நல்ல பண்பாடும் பெற்றிருப்பதே தூதருக்குரிய தகுதிகளாகும்.
No comments:
Post a Comment