"இப்பதான் கட்சிக்குத் தலைவரா வந்திருக்காரு. அதனால, நம்ம கெத்தைக் காட்டலாம்னு நினைக்கிறாரு போல இருக்கு. ஆனா, கள எதார்த்தம் தெரியாம இருக்காரே!"
"ஆமாம். இடைத் தேர்தல்கள்ள, ஆளும் கட்சிதான் ஜெயிக்கும். அதுவும், நாம இப்பதான் ஒரு பெரிய தோல்வியைச் சந்திச்சிருக்கோம். இந்த இடைத் தேர்தல்ல போட்டி போடாம தவிர்த்திருக்கலாம்."
"ஒருவேளை, போட்டியிடற மாதிரி களத்தில இறங்கிட்டு, 'ஆளும் கட்சி பணம் கொடுத்து வெற்றி பெறப் பாக்குது, இதைத் தேர்தல் ஆணையம் கண்டுக்காம இருக்கு, அதனால, நாங்க போட்டியிலேந்து விலகிக்கப் போறோம்'னு சொல்லிப் பின் வாங்கப் போறாரோ என்னவோ?"
கட்சித் தொண்டர்களிடையே நிலவிய இந்தப் பேச்சுக்கள் கட்சித்தலைவர் துரைராசன் காதிலும் விழுந்தன.
"என்ன தலைவரே! அவசரப்பட்டு முடிவு எடுத்திட்டீங்க போல இருக்கு. நமக்கு டெபாசிட் கூடக் கிடைக்காதுன்னு தோணுது. பேசாம, ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லிப் போட்டியிலிருந்து விலகிடலாம்!" என்றார் மூத்த தலைவர் தாமோதரன்.
"அவசரப்பட்டு முடிவெடுக்கலையே! உங்க எல்லாரையும் கலந்து ஆலோசிச்சுத்தானே முடிவெடுத்தேன்?" என்றார் துரைராசன்.
"போட்டி போட்டு பலத்தைக் காட்டலாம்னுதான் நினைச்சோம். ஆனா, நம்ம நிலைமை இவ்வளவு மோசமா இருக்கும்னு எதிர்பாக்கலையே!"
"நிலைமை மோசம்னு அதுக்குள்ள ஏன் முடிவு பண்றீங்க? நாம இன்னும் பிரசாரத்தையே ஆரம்பிக்கலையே! ஜெயிக்கறோமோ, தோக்கறோமோ, கடுமையா உழைச்சு, ஒரு வலுவான போட்டியைக் கொடுக்கணும்!" என்றார் துரைராசன்.
தாமோதரன் நம்பிக்கை இல்லாமல் தலைவரைப் பார்த்தார்.
அடுத்த பல நாட்களில், துரைராசன் தொகுதி முழுவதும் சுழன்று வந்தார். ஒவ்வொரு பகுதியிலும், கட்சிக்காரர்களைச் சந்தித்துப் பேசி, அவர்களுக்கு யோசனைகள் கூறி, அவர்கள் கடுமையாக உழைக்கும் விதத்தில், உந்துதல் அளித்தார்.
அதிக நம்பிக்கையுடன் பிரசாரத்தைத் தொடங்கிய ஆளும் கட்சி, துரைராசனின் சுறுசுறுப்பான, உற்சாகமான செயல்பாடுகளைப் பார்த்துக் கவலை கொண்டது.
ஆளும் கட்சித் தலைவர், தங்கள் கட்சி உறுப்பினர்களிடம் பேசும்போது, 'துரைராசன் இதுபோல் செயல்படுவதைப் பார்த்தால், நமக்கு வெற்றி அவ்வளவு எளிதாக இருக்காது என்று தோன்றுகிறது. எச்சரிக்கையாகப் பணியாற்றுங்கள்!" என்றார்.
ஆளும் கட்சி எளிதாக வெற்றி பெறும் என்று துவக்கத்தில் கணித்த ஊடகங்கள், துரைராசனின் கடின உழைப்பைப் பார்த்து, 'துரைராசன் ஒரு ஆச்சரியத்தை நிகழ்த்திக் காட்டுவாரா?' என்று எழுதவும் பேசவும் தொடங்கின.
தேர்தல் முடிந்து, முடிவு அறிவிக்கப்பட்டது. ஆளும் கட்சி குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆயினும், ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் பார்வையில், துரைராசன் ஒரு சாதனையை நிகழ்த்தி விட்டார் என்ற கருத்துதான் நிலவியது.
"நாமதான் தோத்துட்டமே! எனக்கு எதுக்கு இவ்வளவு பெரிய மாலையைப் போடறீங்க?" என்றார் துரைராசன்.
"தலைவரே! எல்லாருமே நீங்க வெற்றி பெற்றதாகத்தான் கருதறாங்க. டெபாசிட் கூடக் கிடைக்காதுங்கற நிலைமையிலேந்து, வெற்றிக்கு இவ்வளவு நெருக்கமா கட்சியைக் கொண்டு வந்துட்டீங்களே! உங்களோட தெளிவான முடிவும், உறுதியான செயல்பாடும்தான் இதுக்குக் காரணம்!" என்றார் தாமோதரன்.
பொருட்பால்
அமைச்சியல்
அதிகாரம் 67
வினைத்திட்பம்
குறள் 668:
கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
தூக்கங் கடிந்து செயல்.
பொருள்:
மனக் குழப்பமின்றித் தெளிவாக முடிவு செய்யப்பட்ட ஒரு செயலைத் தளர்ச்சியும், தாமதமும் இடையே ஏற்படாமல், விரைந்து நிறைவேற்ற வேண்டும்.
No comments:
Post a Comment