Monday, February 6, 2023

669. பட்ட அவமானம் போதாதா?

'கலியுக வள்ளல்' என்று அழைக்கப்பட்ட சுந்தரமூர்த்தியின் வீட்டிலிருந்து கண்ணன் ஏமாற்றத்துடன் வெளியே வந்த பிறகுதான் தமிழறிஞர் கந்தப்பனைப் பற்றித் தான் தயாரித்திருந்த தகவல் புத்தகத்தை சுந்தரமூர்த்தி வீட்டின் வரவேற்பறையிலிருந்த மேசை மீதே விட்டு விட்டு வந்தது நினைவுக்கு வந்தது.

அதை எடுத்து வர உள்ளே நுழைந்தபோது, "யாரோ ஒரு தமிழறிஞராம் அவர் எழுதின புத்தகங்களைப் பத்தி யாருக்குமே தெரியாதாம். அதையெல்லாம் வெளியிடப் போறேன், அதுக்குப் பணம் கொடுங்கன்னு கேட்டுக்கிட்டு வரான், பணம் சம்பாதிக்கறதுக்கு எப்படிப்பட்ட குறுக்கு வழியெல்லாம் யோசிக்கறாங்க பாரு!" என்று 'வள்ளல்' தன் மனைவியிடம் கூறிக் கொண்டிருந்தது கண்ணன் காதில் விழுந்தது.

கண்ணனைப் பார்த்ததும் சுந்தரமூர்த்தியின் முகம் சற்று மாறியது. "என்னப்பா! அதான் என்னால இதுக்கெல்லாம் பணம் கொடுக்க முடியாதுன்னு சொல்லிட்டேனே! மறுபடி என்ன?' என்றார் அவர் எரிச்சலுடன்.

தான் பேசியதைக் கண்ணன் கேட்டு விட்டதால் ஏற்பட்ட தர்மசங்கடத்தை மறைக்கவே சுந்தரமூர்த்தி இப்படிக் கடுமையாகப் பேசுகிறார் என்பது கண்ணனுக்குப் புரிந்தது.

'தாக்குதல்தான் தற்காப்புக்குச் சிறந்த வழி (Offense is the best form of defense)' என்ற ஆங்கிலப் பழமொழியை உருவாக்கியவர் ஒரு மேதைதான் என்று நினைத்துக் கொண்டான் கண்ணன்.

"இல்லை சார். தகவல் புத்தகத்தை எடுத்துக்க மறந்துட்டேன். தொந்தரவுக்கு மன்னிச்சுக்கங்க!" என்று சிரித்துக் கொண்டே கூறி விட்டு அந்தப் புத்தகத்தை எடுத்துக் கொண்டு வெளியேறினான் கண்ணன்.

வெளியே வந்ததும், அவனுடன் வந்த அறிவழகன், "என்ன இப்படிப் பேசறாரு!" என்றான் கோபத்துடன்.

"விடு. ஒரு 'வள்ளலா' இருந்தும் தான் இந்த முயற்சிக்கு உதவலியேங்கற தன் குற்ற உணர்ச்சியை மறைச்சுக்கத்தான் இப்படிப் பேசறாரு!" என்றான் கண்ணன்.

"நீ என்ன சைகாலஜி படிச்சிருக்கியா என்ன? அவர் உன்னை அவமானப்படுத்திப் பேசினதுக்கு இப்படியெல்லாம் காரணம் கற்பிக்கற!" என்றான் அறிவழகன் வியப்புடன்.

"அடுத்தாப்பல யார் வீட்டுக்குப் போய் அவமானப்படப் போறோம்?" என்றான் அறிவழகன் தொடர்ந்து.

"பத்து பேர் இல்லைன்னு சொல்லி கதவைச் சாத்தினாலும் ஒத்தர் உதவி செய்ய மாட்டாரா? பார்க்கலாம்!" என்றான் கண்ணன்.

"கண்ணா! உன்னை நினைச்சா எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கு. அதுவரைக்கும் நாம ஏழெட்டு பேரைப் பாத்துட்டோம். யாருமே உன்னோட இந்த ப்ராஜக்டுக்கு உதவத் தயாராயில்ல. எத்தனையோ அறிஞர்களோட நூல்களைத் தேடித் தேடிப் பதிப்பிக்கிற அரசாங்கம் கூட உன்னோட கோரிக்கைக்குச் செவி சாய்க்கல. ஆனா நீ விடாம இன்னும் முயற்சி பண்ணிக்கிட்டிருக்கியே! இப்படி கஷ்டப்படறது, அவமானப்படறது இதெல்லாம் உன்னைக் காயப்படுத்தலையா?"

நடந்து கொண்டிருந்த கண்ணன் சட்டென்று நின்றான். கண்களை மூடிக் கொண்டான்.

தான் சொன்னதைக் கேட்டு நண்பன் மனம் தளர்ந்த விட்டானோ என்ற அச்சம் அறிவழகனுக்கு ஏற்பட்டது.

கண்ணை மூடிக் கொண்டு ஒரு நிமிடம் மௌனமாக இருந்த கண்ணன் சட்டென்று கண்ணைத் திறந்து அறிவழகனைப் பார்த்தான்.

"அறிவு! எனக்கு மனசில ஒரு சிந்தனைதான் இருக்கு. என் முயற்சி வெற்றி அடைந்து அந்த அறிஞரோட ஆறு நூல்களையும் வெளியிட்டப்பறம் என் மனநிலை எப்படி இருக்கும்னு நினைச்சுப் பாக்கறேன். ஆகா! என்ன ஒரு இனம் தெரியாத மகிழ்ச்சி! என்ன ஒரு மனநிறைவு! இந்த உணர்வை நினைக்கும்போது நான் படற கஷ்டம், அவமானம் எல்லாம் எனக்கு ஒரு பொருட்டா தெரியல. நீ என்னோட வரது எனக்கு ஒரு பலமா இருக்கு. ஆனா உனக்கு இது கஷ்டமா இருந்தா..."

சட்டென்று அவனை இடைமறித்த அறிவழகன், "சேச்சே! உனக்கு இருக்கிற உணர்வில பத்தில ஒரு பங்காவது எனக்கு இருக்காதா? உன் முயற்சியில நான் எப்பவுமே துணையா இருப்பேன். நீ நிச்சயமா வெற்றி அடைஞ்சு, இப்ப நினைச்சுப் பாக்கற மகிழ்ச்சியையும், திருப்தியையும் உண்மையாகவே அனுபவிக்கத்தான் போற!" என்றான் கண்ணனின் கைகளைப் பற்றியபடி.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 67
வினைத்திட்பம்

குறள் 669:
துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை.

பொருள்:
(முடிவில்) இன்பம் கொடுக்கும் தொழிலைச் செய்யும் போது துன்பம் மிக வந்த போதிலும் துணிவு மேற்கொண்டு செய்து முடிக்க வேண்டும்.

      அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...