"அப்பா! முதுகுவலி வந்துடும் போல இருக்கு. இதுக்கு உக்காந்துக்கிட்டே வரலாம்!" என்று அலுத்துக் கொண்டான் தினகர்.
"அதனாலதான், நான் சீட்டைக் கூடப் பின்னால சாய்ச்சுக்காம, நேரேயே உக்காந்துக்கிட்டிருக்கேன். இந்த செமி ஸ்லீப்பர் பஸ்னா இப்படித்தான். ஒண்ணு ஸ்லீப்பர்ல வரணும், இல்லேன்னா உக்காந்துக்கிட்டு வரதே உத்தமம்!" என்றான் அவன் நண்பன் அருண்.
"உனக்கும் எனக்கும்தான் இந்தப் பிரச்னை! அங்கே பாரு, அண்ணன் எவ்வளவு வசதியா, சொகுசா உக்காந்திருக்காருன்னு!" என்று அருணின் காதில் கூறிய தினகர், அவர்கள் இருக்கைகளுக்கு நேரே இருந்த இருக்கை வரிசையைக் காட்டினான்.
அந்த வரிசையில், ஓர இருக்கையில் அமர்ந்திருந்த நபர், தினகரனைப் போலவே, காலை நீட்டவும் முடியாமல், மடக்கவும் முடியாமல் தவித்துக் கொண்டிருக்க, தினகரனால் 'அண்ணன்' என்று குறிப்பிடப்பட்ட நபர், ஜன்னலோர இருக்கையில் சுகமாக அமர்ந்திருந்தார்.
அவர் உருவம் சிறியது என்பதால், அவரது குட்டைக் கால்கள், நீட்டப்பட்ட இருக்கைக்குள் அடங்கி விட்டன.
"அவன் காலை நீட்டினப்பறம் மீதி இருக்கிற இடத்தில, ஒத்தர் உக்காரலாம் போல இருக்கே!" என்றான் அருண், மெதுவாகச் சிரித்தபடி.
"பொம்மைக்கு பேண்ட் சட்டை போட்ட மாதிரி இருக்கு. பாவம், இவனை மாதிரி ஆளுக்கெல்லாம், வாழ்க்கை ரொம்ப கஷ்டம்தான். யாரும் வேலைக்கு எடுத்துக்க மாட்டாங்க. யாரையாவது நம்பித்தான் வாழ்க்கையை நடத்தணும்!" என்றான் தினகரன்.
"நீதான் அவன் வாழ்க்கையை நினைச்சுக் கவலைப்படற. அவன் என்னடான்னா, காலை நீட்டினதுமே கண்ணை மூடிக்கிட்டுத் தூங்க ஆரம்பிச்சுட்டான் பாரு!"
"பாவம்! நல்லா தூங்கவாவது செய்யட்டுமே!"
காலையில் பேச்சுக் குரல்கள் கேட்டுக் கண்விழித்த தினகர், பஸ் நின்று கொண்டிருப்பதையும், பயணிகள் இறங்கிக் கொண்டிருப்பதையும் பார்த்து, அருணை எழுப்பினான். "டேய், முழிச்சுக்கடா! இறங்கணும்."
அநேகமாக எல்லோருமே இறங்கி விட்ட பிறகு, இருவரும் இருக்கையை விட்டு எழுந்தனர்.
அப்போதுதான் பக்கத்து வரிசை இருக்கையில், அந்த நபர் இன்னும் உறங்கிக் கொண்டிருப்பதையும், அவருக்கு அருகே இருவர் நின்று கொண்டு, "சார்! சார்!" என்று அழைத்தபடி, அவரை எழுப்பிக் கொண்டிருப்பதையும் கவனித்தான் தினகர்.
"அசந்து தூங்கறார் போல இருக்கு. நீங்க கூப்பிடறது அவருக்குக் காதில விழல. நீங்க வேற ரொம்ப மெதுவாப் பேசறீங்க! தட்டி எழுப்புங்க. அப்பதான் எழுந்திருப்பாரு!" என்றான் தினகர்.
"அப்படிச் செய்ய முடியாது, சார்! அவர் எங்க எம் டி!" என்றார், அந்த இருவரில் ஒருவர்.
"எம் டி.யா?"
"ஆமாம் சார்! ரம்யா டெக்ஸ்டைல்ஸ்னு இந்த ஊர்லேயே பெரிய கம்பெனி இவரோடதுதான்!" என்று அவர் பெருமையுடன் சொல்லிக் கொண்டிருந்தபோதே, கண் விழித்த எம் டி, "ஓ! ஊர் வந்துடுச்சா! மேல என் பிரீஃப்கேஸ் இருக்கு. எடுத்துக்கங்க!" என்று அதிகாரமாகக் கூறியபடியே, பஸ்ஸை விட்டு இறங்கினார்.
பொருட்பால்
அமைச்சியல்
அதிகாரம் 67
வினைத்திட்பம்
குறள் 667:
உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து.
பொருள்:
உருவத்தால் சிறியவர்கள் என்பதற்காக யாரையும் கேலி செய்து அலட்சியப்படுத்தக் கூடாது. பெரிய தேர் ஓடுவதற்குக் காரணமான அச்சாணி, உருவத்தால் சிறியதுதான் என்பதை உணர வேண்டும்.
No comments:
Post a Comment