Friday, January 20, 2023

856. மீண்டும் வருக!

"சார்! லக்ஷ்மி என்டர்பிரைசஸ்ல மறுபடி ஆர்டர் கொடுத்திருக்காங்க!" என்றான் கணேசன்.

"போன தடவை சப்ளை பண்ணினப்ப குவாலிடி சரியா இல்லேன்னு கம்ப்ளைன் பண்ணிட்டு இப்ப ஏன் மறுபடி கேக்கறாங்க?" என்றார் மதிவாணன் கோபத்துடன்.

"அதான் நம்ம கெமிஸ்டை அனுப்பி அவங்க கெமிஸ்ட் முன்னாலேயே டெஸ்ட் பண்ணிக் காட்டி குவாலிடி சரியாதான் இருக்குன்னு நாம நிரூபிச்சப்பறம் அவங்க கெமிஸ்ட் டெஸ்ட் பண்ணினதிலதான் ஏதோ தப்பு நடந்திருக்குன்னு ஒத்துக்கிட்டாங்களே சார்!"

"நம்மகிட்ட தப்பு இல்லேன்னு நாம போய் நிரூபிச்சுக் காட்டினதும் ஒத்துக்கிட்டாங்க. இந்தத் தடவையும் குத்தம் சொன்னா? ஒவ்வொரு தடவையும் நம்ம கெமிஸ்டை அனுப்பி நம்ம குவாலிடி சரியா இருக்குன்னு அவங்ககிட்ட நிரூபிச்சுக்கிட்டிருக்க முடியாது!"

"சார்! நானும் இதை அவங்ககிட்ட கேட்டேன். ஒரு தடவை ஏதோ தப்பு நடந்துடுச்சு, இனிமே இப்படி நடக்காதுன்னு அவங்க புரொப்ரைட்டரே எங்கிட்ட சொன்னாரு. அவங்க நல்ல பார்ட்டி. பில்லுக்கெல்லாம் சரியான நேரத்தில பணம் கொடுத்துடறாங்க. இந்த ஒரு தடவை சப்ளை பண்ணிப் பாக்கலாமே! இன்னொரு தடவை பிரச்னை பண்ணினா அப்புறம் நிறுத்திடலாம்!" என்றான்கணேசன்.

"நம்ம ப்ராடக்டைப் பத்தி தப்பா சொன்னவங்களுக்கு சப்ளை பண்றதில எனக்கு இஷ்டம் இல்ல!" என்றார் மதிவாணன் பிடிவாதமாக.

"ஏம்ப்பா! மதிவாணனுக்கு வலது கை மாதிரி இருந்தே! அவரும் உனக்கு நல்ல சம்பளம் கொடுத்து உன்னை நல்லாத்தானே வச்சுக்கிட்டிருந்தாரு! ஏன் அவர் கம்பெனியிலேந்து விலகிட்ட?" என்றான் கணேசனின்நண்பன் கிட்டு.

"மதிவாணனோட எனக்கு எந்த பிரச்னையும் இல்ல. ஆனா அவர் எல்லார்கிட்டேயும் விரோதம் பாராட்டறாரு. கஸ்டமர்கிட்டயோ, சப்ளையர்கிட்டயோ ஒரு சின்ன பிரச்னை வந்தா கூட அவங்களை விரோதிகளா நினைச்சு அவங்களோட வியாபாரம் வச்சுக்காம வெட்டி விட்டுடறாரு. நான் அவர்கிட்ட எவ்வளவோ சொல்லிப் பாத்துட்டேன். அவர் கேக்கல. இது மாதிரி இருந்தா அவர் கம்பெனி ரொம்ப நாளைக்கு ஓடாதுன்னு எனக்குத் தோணிச்சு. அதான் வேற ஒரு நல்ல வாய்ப்பக் கிடைச்சதும் வந்துட்டேன். அவருக்கு வருத்தம்தான். ஆனா நான் என் எதிர்காலத்தைப் பாக்கணும் இல்ல?" என்றான் கணேசன்.

"ஆனா இனிமே அவர் உன்னையும் தன்னோட எதிரியா நினைக்க ஆரம்பிச்சுடுவாரு!"

"உண்மைதான். அதை நினைச்சாத்தான் எனக்கு வருத்தமா இருக்கு!" என்றான் கணேசன்.

ன்று கணேசனுக்கு மதிவாணனிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. பல மாதங்களுக்குப் பிறகு அவர் தன்னை அழைத்தது மணேசனுக்கு வியப்பாக இருந்தது.

"எப்படி இருக்கீங்க சார்?"என்றான் கணேசன்.

"கணேசன்! நீங்க சொன்னப்ப நான் கேக்கல. சில நல்ல கஸ்டமர்களையும், சப்ளையர்களையும் விட்டப்பறம் வியாபாரம் ரொம்பக் குறைஞ்சுடுச்சு. கம்பெனியைத் தொடர்ந்து நடத்த முடியுமான்னே தெரியல. நீங்க திரும்ப இங்கே வரணும்!" என்றார் மதிவாணன்.

"என்னால என்ன சார் செய்ய முடியும்?" என்றான் கணேசன்.

"நான் விரோதிச்சுக்கிட்டவங்களை நான் திரும்பப் போய்க் கூப்பிட்டா அவங்க வர மாட்டாங்க. ஆனா நீங்க பேசினா அவங்க சமாதானம் ஆகலாம். இனிமே நான் முழு நிர்வாகத்தையும் உங்ககிட்டயே விட்டுடறேன். நான் எதிலியுமே தலையிடப் போறதில்ல. உங்க அணுகுமுறைதான் சரியானது. உங்களால நிச்சயமா எல்லாத்தையும் பழைய நிலைக்குக் கொண்டு வர முடியும். நீங்கதான் எனக்கு உதவி செய்யணும்!" என்றார் மதிவாணன் இறைஞ்சும் குரலில்.

அவருக்கு என்ன பதில் சொல்வது என்று கணேசன் யோசித்தான்.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 86
இகல்

குறள் 856:
இகலின் மிகலினிது என்பவன் வாழ்க்கை
தவலும் கெடலும் நணித்து.

பொருள்: 
பிறருடன் மன வேறுபாடு கொண்டு வளர்வது நல்லதே என்பவன் வாழ்க்கை, அழியாமல் இருப்பதும் சிறிது காலமே; அழிந்து போவதும் சிறிது காலத்திற்குள்ளேயாம்.
அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...