Saturday, January 7, 2023

855. மனக்கசப்பு நீங்கியது!

"அனந்தமூர்த்தின்னு உங்களுக்கு ஒரு நண்பர் இருக்காரா என்ன? இத்தனை நாளா, நீங்க அவரைப் பத்திச் சொன்னதே இல்லையே!" என்றாள் மல்லிகா.

"நெருங்கின நண்பர் இல்ல. என்னோட வேலை செய்யறவர்" என்றான் பரமசிவம்.

"குழந்தை பொறந்து மூணு மாசமாச்சுன்னு சொல்றீங்க. முன்னாடியே போய்ப் பாத்திருக்கலாமே!"

"குழந்தை பொறந்த உடனேயே எல்லோரும் போய்ப் பார்ப்பாங்க. நாம கொஞ்சம் நிதானமாப் போய்ப் பாக்கலாமேன்னுதான் போகல. கிளம்பு. போய்ப் பார்த்துட்டு வந்துடலாம்."

"போகும்போது, குழந்தைக்கு ஒரு டிரஸ் வாங்கிக்கிட்டுப் போயிடலாம்!" என்றாள் மல்லிகா.

"குழந்தையைப் பார்த்து விட்டு வந்தது ரொம்ப சந்தோஷமாக இருந்தது. உங்க நண்பரோட மனைவி எங்கிட்ட ரொம்ப நல்லாப் பழகினாங்க. உங்க நண்பருக்கும் ரொம்ப சந்தோஷம்னு நினைக்கிறேன். குழந்தையைப் பார்க்க நாம வருவோம்னு அவர் எதிர்பார்க்கல போல இருக்கு!" என்றாள் மல்லிகா.

"ஆமாம். நாங்க ரொம்ப நெருக்கமான நண்பர்கள் இல்லேன்னு சொன்னேனே! உண்மையில, அவர் குழந்தையைப் பார்க்கப் போகணும்னு நான் திடீர்னுதான் முடிவெடுத்தேன்!" என்றான் பரமசிவம்.

"ஏன் அப்படி?" என்றாள் மல்லிகா, வியப்புடன்.

"கொஞ்ச நாள் முன்னால, அலுவலகத்தில, எனக்கும், அனந்தமூர்த்திக்கும் நடுவில ஒரு பிரச்னை ஏற்பட்டது. அது முடிஞ்சு போனப்பறம் கூட, எங்களுக்குள்ள ஒரு மனக்கசப்பு இருந்துக்கிட்டே இருந்தது. இதைச் சரி செய்ய என்ன செய்யலாம்னு யோசிச்சேன். அலுவலகத்திலேயே அவரோட சுமுகமா இருக்க முயற்சி செஞ்சேன். ஆனா, அதுக்கும் மேலே ஏதாவது செய்யணும்னு தோணிச்சு. அப்பதான், ரெண்டு மூணு மாசம் முன்னால அவருக்குக் குழந்தை பிறந்திருந்த விஷயம் நினைவு வந்தது. அதனால, அவர் குழந்தையைப் பார்த்துட்டு வந்தா, அதன் மூலமா அவரோட நல்லுறவு ஏற்பட்டு, எங்களுக்குள்ள இருக்கற மனக்கசப்பைப் போக்கிக்கலாம்னு நினைச்சேன். நான் நினைச்ச மாதிரியே, எங்களுக்குள்ள இருந்த மன வேறுபாடு இப்போ நீங்கிடுச்சு!" என்றான் பரமசிவம்.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 86
இகல்

குறள் 855:
இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே
மிக்லூக்கும் தன்மை யவர்.

பொருள்: 
தன் மனத்துள் வேறுபாடு தோன்றும்போது, அதை வளர்க்காமல், அதற்கு எதிராக நடக்கும் வலிமை மிக்கவரை வெல்ல எண்ணுபவர் யார்?
அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...