Saturday, January 21, 2023

857. கணவனுக்கு ஆறுதல்!

"கல்யாணம் ஆகிப் பத்து வருஷம் ஆகுது. இன்னும், எங்க வீட்டு மனுஷங்ககிட்ட விரோதம் பாராட்டிக்கிட்டிருக்கீங்களே, இது உங்களுக்கே தப்பாத் தெரியலையா?" என்றாள் சுகந்தி, கோபத்துடன்.

"அதுக்கு நான் என்ன செய்ய முடியும்? உங்க வீட்டு மனுஷங்க அப்படி இருக்காங்க!" என்றான் பத்ரி.

"எப்படி இருக்காங்க?"

"உன் தங்கை கல்யாணத்துக்கு என்னைக் கூப்பிட்டு அவமானப்படுத்தினாங்களே, அதை நான் எப்படி மறக்க முடியும்?"

"இங்கே பாருங்க, உங்களை அவமானப்படுத்தணும்னு யாரும் நினைக்கல. கல்யாணத்தில நிறைய பேர் இருந்தப்ப, உங்களை சரியா கவனிக்காம இருந்திருக்கலாம். அதுகூட, சரியா கவனிக்கலேன்னு நீங்க சொல்றீங்க! அப்படி என்ன கவனிக்காம விட்டுட்டாங்கன்னு உங்களுக்குத்தான் வெளிச்சம்! அப்படியும், எங்கப்பா உங்ககிட்ட வந்து மன்னிப்புக் கேட்டாரே, அப்புறம் என்ன?"

"செய்யறதையெல்லம் செஞ்சுட்டு, மன்னிப்புக் கேட்டுட்டா, எல்லாம் சரியாயிடுமா? என்னை மதிக்கலேங்கறதால, நான் ஒதுங்கி இருக்கேன். அதில யாருக்கு என்ன கஷ்டம்?" என்றான் பத்ரி.

"உங்க தங்கை வீட்டுக்காரர் இருக்காரே, அவர் நம்மகிட்ட எவ்வளவு இயல்பா நடந்துக்கிறாரு!"

"அவனுக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையை நான் கொடுக்கறேன். அதோட, அவனுக்கு சொரணை கிடையாது. யாராவது சாப்பாடு போடறாங்கன்னு சொன்னா, முதல்ல போய் உக்காந்துடுவான்!"

"உங்க தங்கை வீட்டுக்காரரைப் பத்தி இவ்வளவு இழிவாப் பேசறீங்களே, இது அவரை அவமானப்படுத்தறது இல்லையா?"

"அவன் இல்லாதப்பதானே சொல்றேன்! அவனைப் பத்தின பேச்சு இப்ப எதுக்கு? உங்க வீட்டு விழாவுக்கு நான் வரல. நீ மட்டும் போயிட்டு வா. அவ்வளவுதான்!" என்று விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தான் பத்ரி.

"எப்படியோ போங்க! நீங்க எப்பதான் மாறப் போறீங்களோ?" என்றாள் சுகந்தி, ஆயாசத்துடன். 

ரண்டு நாட்களுக்குப் பிறகு, சுகந்தி தன் பெற்றோர் வீட்டு விழா முடிந்து திரும்பிய போது, பத்ரி சோர்வுடன் வீட்டில் அமர்ந்திருப்பதைப் பார்த்தாள்.

"என்னங்க? இன்னிக்கு ஆஃபீஸ் போகலியா? ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க? உடம்பு சரியில்லையா?" என்றபடியே, பத்ரியின் நெற்றியில் கையை வைத்துப் பார்த்தாள் சுகந்தி.

"உடம்புக்கு ஒண்ணுமில்ல. எனக்கு ஆஃபீஸ் போகப் பிடிக்கல. இந்த வருஷமும் எனக்கு ப்ரொமோஷன் கிடைக்கல!" என்றான் பத்ரி, சோர்வுடன்.

"விடுங்க. உங்க அருமை உங்க மேலதிகாரிகளுக்குப் புரியல. அடுத்த வருஷம் கண்டிப்பாக் கிடைக்கும். கவலைப்படாதீங்க!" என்றாள் சுகந்தி, அவன் தோள் மீது ஆறுதலுடன் தன் கையை வைத்தபடி.

'நீங்க இப்படி எல்லோர்கிட்டயும் விரோதம் பாராட்டிக்கிட்டு சண்டை போட்டுக்கிட்டிருந்தீங்கன்னா, உங்களுக்கு எப்படி நல்லது நடக்கும்?' என்று தன் மனதில் தோன்றிய எண்ணத்தை சுகந்தி பத்ரியிடம் கூறவில்லை!

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 86
இகல்

குறள் 857:
மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல்
இன்னா அறிவி னவர்.

பொருள்: 
பகை உணர்வு கொள்ளும் தீய அறிவுடையவர்கள், வெற்றிக்கு வழிகாட்டும் உண்மைப் பொருளை அறிய மாட்டார்கள்.
அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...