"இல்லை சார்! சம்பளத்துக்காக இல்லை. நீங்க என் திறமையை அங்கீகரிச்சு, எனக்கு அதிக சம்பளம் கொடுத்து ஊக்கப்படுத்தறீங்க. அதுக்காக, நான் உங்ககிட்ட எப்பவும் நன்றியோட இருப்பேன். ஆனா, நான் சொந்தமாத் தொழில் செய்யலாம்னு பாக்கறேன்" என்றான் அன்பரசன்.
"சொந்தத் தொழில் செய்யறது ரொம்ப கஷ்டம்ப்பா. என் அனுபவத்திலேந்து சொல்றேன். ஆரம்பத்தில முதலீடு செய்யறதைத் தவிர, கையில நிறையப் பணம் இருந்தாத்தான், தொழில்ல அப்பப்ப ஏற்படற நெருக்கடிகளை சமாளிக்க முடியும்!"
"புரியுது, சார். ஒரு சின்ன லேத் பட்டறை விலைக்கு வருது. மெஷின் எல்லாம் நல்ல கண்டிஷன்ல இருக்கு. நான் செக் பண்ணிப் பாத்துட்டேன். ரொம்பக் குறைஞ்ச விலைக்கு வருது. நான் கொஞ்சம் பணம் சேத்து வச்சிருக்கேன். அதை வச்சு அந்தப் பட்டறையை வாங்கி, முதல்ல ஜாப் ஒர்க் எடுத்துக்கிட்டு ஓட்டலாம்னு இருக்கேன். நீங்க கூட எனக்கு ஏதாவது வேலை கொடுத்து உதவலாம் சார்!" என்றான் அன்பரசன்.
"வாழ்த்துக்கள்! நீ நல்லா வருவே!" என்று வாழ்த்தினார் பொன்னம்பலம்.
ஆறு மாதங்களுக்குப் பிறகு, அன்பரசனைத் தொலைபேசியில் அழைத்த பொன்னம்பலம், "என்னப்பா! தொழில் எப்படிப் போய்க்கிட்டிருக்கு?" என்றார்.
"நீங்க சொன்னது சரிதான் சார். கஷ்டமாத்தான் இருக்கு. ஜாப் ஒர்க்ல அதிக வருமானம் வரல. பெரிய கம்பெனிகளுக்கு ஏதாவது காம்பொனன்ட் தயாரிச்சுக் கொடுத்தாதான் ஓரளவு வருமானம் வரும்னு தோணுது. ஆனா, அதுக்கு முதலீடு வேணும். அதான் எப்படிச் செய்யறதுன்னு யோசிக்கறேன்!" என்றான் அன்பரசன்.
"நீ எப்ப வந்தாலும் உன்னை நான் திரும்பவும் வேலையில சேத்துக்கத் தயாரா இருக்கேன். உனக்கு மறுபடி இங்கே வந்து வேலையில சேரத் தயக்கம் இருந்தா சொல்லு. நான் எனக்குத் தெரிஞ்ச வேற ஏதாவது நிறுவனத்தில உனக்கு வேலை வாங்கித் தரேன்!"
"நீங்க என் மேல வச்சிருக்கற அன்புக்கு நான் உங்களுக்கு ரொம்பக் கடமைப்பட்டிருக்கேன் சார்! ஆனா, நான் எப்படியாவது கஷ்டப்பட்டுத் தொழிலைத் தொடர்ந்து நடத்தறதில உறுதியா இருக்கேன்!" என்றான் அன்பரசன்.
சில மாதங்களுக்குப் பிறகு, பொன்னம்பலத்தைத் தொலைபேசியில் அழைத்த அன்பரசன், "சார்! தைரியமாப் போய், ஒரு பெரிய கம்பெனியிலேந்து ஒரு காம்பொனன்ட்டுக்கு ஆர்டர் வாங்கிட்டேன். அதை ஒரு சப்ளையர்கிட்ட காட்டிக் கடனுக்கு மெடீரியல்ஸ் வாங்கி, அந்த காம்பொனன்ட்டைத் தயாரிச்சு ஆர்டரை நிறைவேத்திட்டேன். ஒரு மாசத்தில பணம் வந்துடும். அதுக்கப்பறம், சப்ளையருக்குப் பணத்தைக் கொடுத்துடுவேன். அவர் தொடர்ந்து எனக்குக் கடன்ல மெடீரியல்ஸ் சப்ளை பண்றதாச் சொல்லி இருக்காரு!" என்றான் அன்பரசன், உற்சாகத்துடன்.
"ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா. நீ நிச்சயமா பெரிய தொழிலதிபரா வருவே!" என்று வாழ்த்தினார் பொன்னம்பலம்.
அதற்குப் பிறகும், பலமுறை பொன்னம்பலத்தைத் தொலைபேசியில் அழைத்து தான் சந்தித்து வரும் பிரச்னைகளைப் பற்றியும், வேறு சமயங்களில் தன்னுடைய முன்னேற்றங்களையும் பற்றிக் கூறி வந்தான் அன்பரசன்.
இப்போது, அன்பரசன் ஒரு பெரிய தொழிலதிபராகி விட்டான். பல வருடங்கள் ஆகியும், தன் முன்னேற்றங்களைப் பற்றியும், தனக்கு ஏற்படும் பிரச்னைகள், தான் அவற்றைச் சமாளித்த விதம் ஆகியவை பற்றியும் அவ்வப்போது பொன்னம்பலத்திடம் பகிர்ந்து கொண்டிருந்தான் அவன்.
குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து வந்த அந்தக் கடிதத்தைச் சற்று வியப்புடனும், பதட்டத்துடனும் பிரித்தான் அன்பரசன். நாடு முழுவதிலுமிருந்தும் தொழில்துறையில் சாதித்தவர்கள் ஐம்பது பேரை குடியரசுத் தலைவர் கௌரவித்து விருது அளிக்கப் போவதாகவும், தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் அன்பரசனும் ஒருவன் என்றும் அந்தக் கடிதம் அறிவித்தது.
இந்த மகிழ்ச்சியான செய்தியைப் பொன்னம்பலத்திடம் பகிர்ந்து கொள்ள நினைத்து, அவரைத் தொலைபேசியில் அழைத்தான் அன்பரசன்.
பொருட்பால்
அமைச்சியல்
அதிகாரம் 67
வினைத்திட்பம்
குறள் 665:
வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்
ஊறெய்தி உள்ளப் படும்.
பொருள்:
செயல்திறனால் பெருமை பெற்று உயர்ந்தவரின் வினைத்திட்பமானது, நாட்டை ஆளும் அரசனையும் எட்டி, மதிக்கப்பட்டு விளங்கும்.
No comments:
Post a Comment