Sunday, January 1, 2023

739. விக்கிரமசிங்கனின் வருத்தம்!

"என்ன மன்னா, மேகல நாட்டுக்குச் சென்று வந்தாயே! உன் வெளிநாட்டுப் பயணம் எப்படி இருந்தது?" என்றார் ராஜகுரு.

"நன்றாக இருந்தது குருவே!" என்றான் மன்னன் விக்கிரமசிங்கன்.

"உன்னிடம் ஒரு சோர்வு தெரிகிறதே! பயணக் களைப்பா? அல்லது உன்னை அவர்கள் சரியாக நடத்தவில்லையா?"

"இல்லை குருவே! உபசாரமெல்லாம் மிகச் சிறப்பாகத்தான் இருந்தது. மன்னர் பரகாலர் என்னிடம் மிக அன்பாகப் பழகினார். பயணக் களைப்பும் இல்லை!"

"பின்னே உன் சோர்வுக்குக் காரணம்?"

"ஒன்றுமில்லை அரசே! மேகல நாட்டின் இயற்கை வளங்களைப் பார்த்து நான் பிரமிப்படைந்தேன்.மலைகள், காடுகள், ஆறுகள், குளங்கள் என்று நாட்டில் எத்தனை வளங்கள்! எங்கு பார்த்தாலும் பசுமை! 

"நம் நாடோ வறண்ட பூமி. மலைகள் காடுகள் ஏதும் இல்லாத சமவெளி. மழை பெய்வதும் குறைவு.ஒரே ஒரு ஆறுதான் ஓடுகிறது. மழை பெய்தால்தான் அதில் நீரோட்டம் இருக்கும் 

"நாம் மிகவும் சிரப்பட்டு நீர்நிலைகளை உருவாக்கி இருக்கிறோம். நிலத்தடி நீரை அதிகம் பயன்படுத்த வேண்டிய தேவை இருந்தும் நிலத்தடி நீர்மட்டம் மிகவும் கீழே சென்று விடாமல் பாதுகாக்கப் பல திட்டங்களை வகுத்திருக்கிறோம். வறண்ட நிலத்தில் வளரும் பயிர்களை அதிகம் பயிர் செய்து உண்கிறோம். அதிக அளவில் கைத்தொழில் செய்து பல பொருட்களை உருவாக்கிப் பிற நாடுகளுக்கு விற்றுப் பொருள் ஈட்டுகிறோம். 

மமேகல நாட்டைப் போல் நமக்கு இயற்கை வளங்கள் வாய்க்கவில்லையே, நாம் இவ்வளவு முயற்சிகள் செய்து வளங்களை உருவாக்க வேண்டி இருந்ததே என்பதை நினைத்தபோது மனதில் வருத்தமும் ஏக்கமும் ஏற்பட்டது. அதன் காரணமாக என் முகத்தில் வெளிப்பட்ட சோர்வுதான் அது!"

"மன்னா! இத்தகைய சிந்தனை வருவது இயற்கைதான். ஆனால் இப்படி நினைத்துப் பார். ஒருவன் பிறக்கும்போதே செல்வந்தனாகப் பிறக்கிறான். இன்னொருவன் வறியவனாகப் பிறந்து, தன் முயற்சியால் செல்வந்தனாகிறான். அவன் தன்னை நினைத்துப் பெருமைப்பட அல்லவா வேண்டும்?" என்றார் ராஜகுரு.

"தாங்கள் சொல்வது சரிதான். ஆயினும் வறியவனாகப் பிறந்து தன் முயற்சியால் செல்வம் சேர்த்த ஒருவனுக்கு செல்வந்தவனாகப் பிறந்தவனைப் பார்க்கும்போது, 'இவனைப் போல் நான் ஒரு செல்வந்தனாகப் பிறந்திருந்தால் இவ்வளவு கடினமாக உழைத்துச் செல்வம் சேர்க்க வேண்டி இருக்க வேண்டி இருந்திருக்காதே!' என்ற சிந்தனை ஏற்படுவது இயல்புதானே!" என்றான் விக்கிரமசிங்கன் வறண்ட  புன்னகையுடன். 

பொருட்பால்
அரணியல்
அதிகாரம் 74
நாடு

குறள் 739:
நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளந்தரு நாடு.

பொருள்: 
முயற்சி செய்து தேடாமலேயே தரும் வளத்தை உடைய நாடுகளைச் சிறந்த நாடுகள் என்று கூறுவர், தேடி முயன்றால் வளம் தரும் நாடுகள் சிறந்த நாடுகள் அல்ல.
அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...