Wednesday, January 11, 2023

666. சின்ன நோட்டு, பெரிய நோட்டு!

கல்லூரி ஆண்டுவிழாவுக்குச் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட தொழிலதிபர் சச்சிதானந்தம், "நான் ஏதோ வாழ்க்கையில பெரிசா சாதிச்சுட்டதா நினைச்சு என்னை இங்கே பேசக் கூப்பிட்டிருக்கீங்க! ஆனா நான் ஒண்ணும் பெரிசா சாதிக்கல!" என்று ஆரம்பித்தார்.

அடுத்து அவர் என்ன சொல்லப் போகிறார் என்பதை மாணவர்கள் ஆவலுடன் கவனித்துக் கொண்டிருந்தனர்.

சச்சிதானந்தம் தான் மேஜை மீது வைத்திருந்த ஒரு நோட்டுப் புத்தகத்தை எடுத்துப் பிரித்துக் காட்டினார்.

"இதெல்லாம் நான் செய்ய வேண்டுமென்று நினைத்த விஷயங்கள். ஆனால் இவற்றில் தொண்ணூற்றொன்பது சதவீதத்தை என்னால் செய்ய முடியவில்லை,"

இப்போது அவர் தன் சட்டைப்பையிலிருந்து ஒரு பாக்கெட் நோட்டை எடுத்தார்.

 "ஆனால் இதில் எழுதி இருக்கிற விஷயங்களில் கிட்டத்தட்ட எல்லாவற்றையுமே செய்து முடித்து விட்டேன். நீங்கள் என்னை இங்கே அழைத்துப் பேச வைத்திருப்பதற்குக் கராணம் இந்த பாக்கெட் நோட்புக்தான்!" என்று சொல்லி நிறுத்தினார் சச்சிதானந்தம்.

"இரண்டு நோட்டுகளுக்கும் என்ன வித்தியாசம்? நான் முதலில் காட்டிய பெரிய நோட்டில் நான் என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று நினைத்தேனோ அத்தனையையும் எழுதி வைத்திருக்கிறேன். ஆனால் அவற்றைச் செய்ய நான் எந்த முயற்சியையும் எடுக்கவில்லை! ஆனால் அந்தப் பட்டியலிலிருக்கும் சிலவற்றை  முக்கியமானவையாக நினைத்து இந்த பாக்கெட் நோட்டில் எழுதினேன். அவற்றைச் செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டேன். அதனால்தான் அவற்றில் பெரும்பாலானவற்றை என்னால் நிறைவேற்ற முடிந்தது."

மாணவர்களின் முகங்களைப் பார்த்தார் சச்சிதானந்தம். அவர்கள் ஆர்வமாக கவனிப்பதைக் கண்டதும், மேலும் தொடர்ந்தார்.

"எண்ணங்கள் சக்தி வாய்ந்தவை, நீங்கள் எவற்றையெல்லாம் நினைக்கிறீர்களோ அவை எல்லாம் நிறைவேறும் என்று சிலர் சொல்வார்கள். நாம் நினைப்பவை எல்லாமே நிறைவேற மாட்டா. ஆனால் நாம் நினைப்பவற்றைச் செயல்படுத்த நினைத்து அவற்றுக்கான முயற்சிகளில் ஈடுபட்டால் நாம் நினைப்பவற்றில் பலவற்றை நிறைவேற்ற முடியும். நீங்கள் நினைப்பவை இந்தப் பெரிய நோட்டில் இருப்பவை போல. அவை வெறும் எண்ணங்களாகத்தான் இருக்கும். எந்த எண்ணங்களை நிறைவற்ற நாம் உறுதியுடன் செயல்படுகிறோமோ அவை இந்த சின்ன நோட்டில் இருப்பவை போல. அவைதான் நிறைவேறும்."

சச்சிதானந்தம் பேசி முடித்ததும் மாணவர்கள் உற்சாகமாகக் கைதட்டினர்.

"என்னங்க பால் கணக்கு எழுதி வச்சிருந்தேனே ஒரு பாக்கெட் நோட்டு அதைப் பாத்தீங்களா?" என்றாள் பார்க்கவி.

"நான்தான் எடுத்துட்டுப் போனேன். இந்தா!" என்று தன் கைப்பையிலிருந்த நோட்டை எடுத்து மனைவியிடம் கொடுத்த சச்சிதானந்தம், ஒரு பெரிய நோட்டை எடுத்து, "இந்தா! இது ரமேஷ் கதை எழுதறதுக்கான ஐடியா எல்லாம் குறிச்சு வச்சிருக்கற நோட்டு. அவன் மேஜையிலேந்து எடுத்தேன். அங்கேயே வச்சுடு!" என்று சொல்லி மனைவியிடம் கொடுத்தார்.

"காலேஜில பேசப் போறதுக்கு இந்த ரெண்டு நோட்டையும் எதுக்கு எடுத்துக்கிட்டுப் போனீங்க? இதில ஏதாவது குறிப்பு எழுதிக்கிட்டுப் போனீங்களா என்ன?" என்றபடியே தன் பால் கணக்கு நோட்டைப் பிரித்துப் பார்த்தாள் பார்க்கவி.

"குறிப்பெல்லாம் எதுவும் எழுதல. மாணவர்கள்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்னு நினைச்சேன். அதை வெறும் பேச்சில சொன்னா சும்மா கேட்டுக்கிட்டுப் போயிடுவாங்க. கொஞ்சம் டிராமாடிக்கா ஏதாவது செஞ்சா அது அவங்க மனசில பதியும்னு நினைச்சேன். இந்த ரெண்டு நோட்டையும் மேஜையில பார்த்தப்ப ஒரு யோசனை தோணிச்சு. அதான் டக்குனு ரெண்டையும் எடுத்துக்கிட்டுப் போயிட்டேன்!" என்று சொல்லிச் சிரித்தார் சச்சிதானந்தம்.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 67
வினைத்திட்பம்

குறள் 666:
எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்.

பொருள்:
எண்ணியவர் (எண்ணியபடியே செயல் ஆற்றுவதில்) உறுதியுடையவராக இருக்கப் பெற்றால் அவர் எண்ணியவற்றை எண்ணியவாறே அடைவர்.

      அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...