Monday, December 26, 2022

664. வழிகாட்டி

"எல்லாத்துக்கும் ஒரு வழி இருக்குப்பா!" என்றார் சுந்தரம். 

'சுந்தரம் விஷயம் தெரிந்தவர். எந்த ஒரு செயலையும் எப்படிச் செய்வது என்பதை நன்றாக அறிந்தவர். 

அவரிடம் ஆலோசனை கேட்டால் அவர் சரியாக வழிகாட்டுவார்' என்று என் அப்பா என்னிடம் சொல்லி இருந்ததால் என் நண்பன் செல்வத்தின் சொத்து பிரச்னை தொடர்பாக ஆலோசனை கேட்க அவனை அவரிடம் அழைத்துச் சென்றேன். 

செல்வம் தன் பிரச்னையைக் கூறி அதற்குத் தீர்வு உண்டா என்று அவரிடம் கேட்டபோதுதான் அவர் இப்படிச் சொன்னார்.

"நாம ஒரு செயலைச் செய்ய நினைக்கிறது ஒரு உயரமான இடத்துக்குப் போற மாதிரி. ஒரு கட்டிடத்தோட எந்த ஒரு மேல் தளத்துக்கு போகணும்னாலும் படியேறிப் போகலாம். முதல் மாடின்னனா படிகள் குறைவா இருக்கும். சுலபமா சீக்கிரமாப் போயிடலாம். பத்தாவது மாடின்னா அதிகப் படிகள் ஏறணும். கடினமா இருக்கும். அதிக நேரம் ஆகும். ஆனா போக முடியும். படியேற முடியலேன்னா லிஃப்ட் மாதிரி வசதிகள் சில சமயம் கிடைக்கும். அதுக்கு அதிக செலவு செய்ய வேண்டி இருக்கும்! படிகளே இல்லேன்னா, கயிறு போட்டு மேல ஏறுகிறது மாதிரி குறுக்கு வழிகளைப் பயன்படுத்தணும். இது எல்லாராலும் முடியாது. முடியும்னாலும் எல்லாருமே செய்யவும் மாட்டாங்க. இதெல்லாம் சட்ட விரோதமான வழிகள் மாதிரி. அதனால ஒரு வேலையைச் செஞ்சு முடிக்க என்னென்ன படிகள் இருக்கு, அந்தப் படிகள்ள ஏறிப் போக என்னென்ன செய்யணுங்கற ஒரு புளூபிரின்ட்டை முதல்ல தயாரிச்சுக்கிட்டா அப்புறம் வேலையை செஞ்சு முடிச்சுடலாம்!"

இந்த நீண்ட விளக்கத்துக்குப் பிறகு சுந்தரம் செல்வத்தின் சொத்து விஷயத்துக்கு வந்தார்.

"உங்க பிரச்னை கொஞ்சம் சிக்கலானதுதான். பாகம் பிரிக்காத குடும்பச் சொத்து, நிறைய வாரிசுகள், வாரிசுகள்ள சிலபேர் இறந்துட்டாங்க - இது மாதிரி பிரச்னை எல்லாம் இருக்கு. நீங்க வரிசையா என்னென்ன செய்யணும்னு சொல்றேன், எழுதிக்க!" என்ற சுந்தரம், செல்வம் செய்ய வேண்டியவற்றைப் படிப்படியாகக் குறிப்பிட்டார்.

"அவ்வளவுதான். செஞ்சு முடிக்க நேரம் ஆகும். நிறைய அலைச்சல், பணச்செலவு எல்லாம் ஏற்படும். ஆனா ஒவ்வொண்ணா செஞ்சுக்கிட்டு வந்தா செஞ்சு முடிச்சுடலாம். அஞ்சாறு மாசம் ஆகலாம். ஆனா  செஞ்சு முடிச்சப்பறம் எவ்வளவு பெரிய வேலையை எப்படி அழகா செஞ்சு முடிச்சுட்டோம்னு உனக்கே பெருமையா இருக்கும்!" என்றார் சுந்தரம்.

செய்ய வேண்டியவற்றை அவர் எளிமையாக, படிப்படியாக விளக்கிச் சொன்னதைக் கேட்டதும், வேலையைச் செய்து முடித்து விடலாம் என்ற நம்பிக்கை செல்வத்துக்கு ஏற்பட்டது 

"ரொம்ப நன்றி சார்!" என்று விடைபெற்றான் செல்வம். நானும் எழுந்தேன்.

"இருங்க. நம்ம வீட்டுக்கு வந்தவங்க காப்பி சாப்பிடாம போகக் கூடாது. காப்பி வந்துக்கிட்டிருக்கு. சாப்பிட்டுட்டுப் போங்க!" என்றவர் கைக்கடியாரத்தைப் பார்த்து விட்டு, "நான் ஒரு இடத்துக்குப் போகணும். அதனால கிளம்பறேன். நீங்க இருந்து காப்பி குடிச்சுட்டுப் போங்க!" என்று எங்கள் இருவரையம் பார்த்துச் சொல்லி விட்டு எழுந்தார். பிறகு செல்வத்திடம் திரும்பி, "ஏதாவது சந்தேகம் இருந்தா நீ எப்ப வேணும்னாலும் எங்கிட்ட வந்து கேக்கலாம்!" என்று சொல்லி விட்டுக் கிளம்பினார்.

ஒருசில நிமிடங்களில் காப்பியுடன் வந்த சுந்தரத்தின் மனைவி, என்னைப் பார்த்து, "என்ன தம்பி! நல்லா இருக்கியா? அப்பா அம்மா எப்படி இருக்காங்க?" என்று விசாரித்தாள்.

அனைவரும் நலம் என்று கூறி விட்டு, "இவன் என் நண்பன் செல்வம். இவன் குடும்ப சொத்துல ஒரு பிரச்னை. அதை எப்படிச் செய்யறதுன்னு கேட்டுத் தெரிஞ்சுக்கத்தான் சாரைப் பாக்க வந்தோம். செய்ய வேண்டிய விஷயங்களை சார் ரொம்பத் தெளிவா விளக்கினாரு" என்றேன் நான்.

"ஆமாம், ஆன்ட்டி!" என்றான் செல்வம்.

"அதெல்லாம் வக்கணையா சொல்லுவாரு. ஆனா அவரால எந்த வேலையையும் உருப்படியா செய்ய முடியாது!" என்றாள் அவள் அலுத்துக் கொண்டே.

"ஏன் ஆன்ட்டி இப்படிச் சொல்றீங்க?" என்றேன் நான் புரியாமல்.

" பின்னே என்ன? இவரோட அம்மா பேரில ஒரு சொத்து இருக்கு. அதை அவங்க இவருக்குக் கொடுக்கப் போறதா சொல்லி இருக்காங்க. இவரோட கூடப் பிறந்தவங்களுக்கு அது தெரியும். அவங்களும் இதுக்கு சம்மதிச்சுட்டாங்க. ஆனா அவங்க உயில் ஏதும் எழுதி வைக்காம இறந்துட்டாங்க. சொத்தை இவர் பேருக்கு மாத்திக்கிட்டாத்தான் எங்களால அதில உரிமை கொண்டாடவோ, விக்கவோ முடியும். 'லீகல் ஹேர் சர்ட்டிஃபிகேட் வாங்கிட்டு, என்னோட கூடப் பிறந்தவங்க நாலு பேரும் அந்த சொத்தை எனக்கு விட்டுக் கொடுக்கறதா பத்திரம் எழுதி ரிஜிஸ்டர் பண்ணிட்டா சொத்தை என் பேர்ல மாத்திக்கலாம்'னு இவரு சொன்னாரு. இவர் கூடப் பிறந்தவங்களும் பத்திரத்தில கையெழுத்துப் போட்டு ரிஜிஸ்டர் பண்ணிக் கொடுக்கத் தயாரா இருக்காங்க. இவர் அம்மா போயி மூணு வருஷம் ஆயிடுச்சு. இவரு செஞ்சுடலாம், செஞ்சுடலாம்னு காலத்தை ஓட்டிக்கிட்டே இருக்காரு. அவர் அதை செஞ்சு முடிப்பார்ங்கற நம்பிக்கையே எனக்குப் போயிடுச்சு. பத்து லட்சம் ரூபா மதிப்புள்ள சொத்து அம்போன்னு போயிடப் போகுதோன்னு எனக்கு பயமா இருக்கு!" என்று புலம்பினாள் சுந்தரத்தின் மனைவி.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 67
வினைத்திட்பம்

குறள் 664:
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.

பொருள்:
ஒரு செயலை இவ்வாறு செய்து முடிக்கலாம் என்று சொல்லுதல் எவர்க்கும் எளிது, சொல்லியபடி செய்து முடித்தல் அரியது..

குறள் 663

      அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...