"கபிலர் பெருமானே! தங்களைப் போன்ற ஒரு அறிஞர் எங்கள் நாட்டுக்கு வருகை தந்திருப்பது நாங்கள் செய்த புண்ணியம்!" என்றான் அரசன்.
"அதெல்லாம் எதுவும் இல்லை, அரசே! நான் ஒவ்வொரு நாடாகச் சென்று கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு நாட்டிலும் சில மாதங்கள் தங்கி, அந்த நாடு பற்றி அறிந்து கொள்வதே என் பணி" என்றார் கபிலர்.
"தாங்கள் விரும்பும் வரை, இந்த நாட்டில் எங்கே வேண்டுமானாலும் தங்கலாம். தங்களுக்கு எல்லா வசதிகளையும் செய்து தரச் சொல்லி இருக்கிறேன். நீங்கள் எங்கே வேண்டுமானாலும் சென்று வரலாம். அதற்கான பயண ஏற்பாடுகளைச் செய்து தர, அரண்மனை ஊழியர் ஒருவர் உங்களுடனேயே இருப்பார்!" என்றான் அரசன்.
சில மாதங்களுக்குப் பிறகு, மீண்டும் அரசனைச் சந்திக்க அரண்மனைக்கு வந்தார் கபிலர்.
"என்ன கபிலரே! நாட்டைச் சுற்றிப் பார்த்தீர்களா? எங்கள் நாட்டைப் பற்றி என்ன அறிந்து கொண்டீர்கள்? அடுத்து எந்த நாட்டுக்குச் செல்ல விரும்புகிறீர்கள்?" என்றான் அரசன்.
"அரசே! நான் உங்கள் நாட்டிலேயே தொடர்ந்து வசிக்க விரும்புகிறேன். நீங்கள் அனுமதி அளித்தால், என் மீதமுள்ள வாழ்நாட்களை உங்கள் நாட்டிலேயே கழிக்க விரும்புகிறேன்!" என்றார் கபிலர்.
"அது என் பாக்கியம், அறிஞரே! தாங்கள் இந்த நாட்டிலேயே நிரந்தரமாகத் தங்க வேண்டுமென்று நானே தங்களைக் கேட்டுக் கொள்ள நினைத்தேன். ஆனால், தாங்கள் ஒரு நாட்டுக்குச் சென்று அங்கே சில மாதங்கள் தங்கி அந்த நாட்டைப் பற்றி அறிந்து கொண்டு விட்டுப் பிறகு இன்னொரு நாட்டுக்குச் செல்வது என்ற பழக்கம் உள்ளவர் என்று கூறியதால்தான், அவ்வாறு கேட்கவில்லை. இப்போது தாங்களே இங்கே நிரந்தரமாகத் தங்க விருப்பம் தெரிவித்திருப்பது எனக்குப் பெருமகிழ்ச்சி அளிக்கிறது."
"அரசே! என்னை அறிஞர் என்று சிலர் கூறுகிறார்கள். உண்மையில், நான் கற்றது சிறிதளவே. ஆயினும், நான் கற்றறிந்ததை வேறு சிலருக்கு எடுத்துச் சொல்லி, அவர்கள் மூலம் அதைப் பல நாடுகளிலும் உள்ள மக்களுக்கும் பரப்ப விரும்புகிறேன். இந்தப் பணியைச் செய்ய, எனக்கு ஒரு அமைதியான இடம் வேண்டும்.
"நான் பிறந்த நாட்டில், அரசருக்கு நெருக்கமாக இருந்த பலரே அவருக்கு எதிராகச் சதி புரிந்து வந்தார்கள். அரசர் அதை உணராமல் இருந்தார். அந்த நாட்டில் நிலையான அரசாட்சி இருக்காது என்பதால், அமைதியான ஒரு இடத்தைத் தேடி இன்னொரு நாட்டுக்குச் சென்றேன்.
"நான் என் சொந்த நாட்டை விட்டு வெளியேறிய சிறிது காலத்திற்கெல்லாம், நான் எதிர்பார்த்தபடியே, அரசரைக் கவிழ்த்து வேறொருவர் ஆட்சிக்கு வந்து விட்டார். அவராலும் நிலையாக ஆள முடியாது என்பதால், அங்கே குழப்பம் நீடிக்கிறது.
"நான் குடிபுகுந்த நாட்டில், அரசர் வலுவாக இருந்தாலும், நாட்டில் பல்வேறு குழுக்கள் இருந்தன.அவர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். அதனால், அங்கு அமைதி இல்லாத சூழ்நிலை நிலவியது.
"எனவே அந்த நாட்டை விட்டு வெளியேறி இன்னொரு நாட்டுக்கு வந்தேன். அங்கே குற்றங்கள் அதிகமாக இருந்தன. குற்றவாளிகளைப் பிடித்து தண்டனை கொடுப்பதே அரசரின் முக்கியமான பணியாக இருந்தது.
"அதன் பிறகு, உங்கள் நாட்டுக்கு வந்தேன். உங்கள் நாட்டில் நிலைமை எப்படி இருக்கும் என்று தெரியாததால்தான், இங்கே சில நாட்கள் மட்டுமே தங்கப் போவதாக உங்களிடம் கூறினேன்.
"ஆனால், மற்ற நாடுகளில் நான் பார்த்த நிலைமைகள் இங்கு இல்லை. நீங்கள் வலுவாக இருக்கிறீர்கள். நாட்டு மக்களிடையே ஒற்றுமை நிலவுகிறது. நாட்டில் குற்றங்கள் அதிகம் இல்லை. சில மாதங்கள் உங்கள் நாட்டைச் சுற்றிப் பார்த்து இவற்றை அறிந்து கொண்டதால்தான், இங்கேயே நிரந்தமாகத் தங்கி, என் கல்விப்பணியைத் தொடங்க முடிவு செய்திருக்கிறேன்."
"கபிலரே! தாங்கள் இங்கேயே வசிக்க முடிவு செய்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்றால், தாங்கள் இங்கே கல்விப்பணியைத் துவக்கப் போவது எனக்குப் பெருமிதத்தை அளிக்கிறது. தங்களுக்கு வேண்டிய எல்லா வசதிகளையும் செய்து தர ஏற்பாடு செய்கிறேன். எங்கள் நாட்டை நாடி வந்ததன் மூலம், தாங்கள் என்னையும் இந்த நாட்டு மக்களையும் பெருமைப்படுத்தி விட்டீர்கள்!" என்றான் அரசன் பெருமிதத்துடன்,
பொருட்பால்
அரணியல்
அதிகாரம் 74
நாடு
குறள் 735:
பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
கொல்குறும்பும் இல்லத நாடு.
No comments:
Post a Comment