"கவலைப்படாதே, பார்வதி! கடவுள் ஏதாவது வழி காட்டுவாரு. உங்க சொந்தக்காரங்க யாராவது உதவுவாங்க" என்றாள் அவள் பக்கத்து வீட்டில் வசிக்கும் தேவி.
பார்வதியின் கணவர் மறைந்து, ஆறு மாதங்களுக்கு மேல் ஆகி விட்டன. பார்வதி எப்படியோ கஷ்டப்பட்டு, குடும்பத்தை நடத்திக் கொண்டிருந்தாள்.
அப்போது ஒருநாள், பார்வதியைப் பார்க்க அவளுடைய ஒன்று விட்ட சகோதரியின் மகன் முருகன் வந்தான்.
"எனக்கு இப்பதான் விஷயம் தெரிஞ்சது, பெரியம்மா. அதான் பாத்துட்டுப் போகலாம்னு வந்தேன்!" என்றான் முருகன்.
"நெருங்கின சொந்தக்காரங்களே, நாங்க இருக்கமா, போயிட்டமான்னு தெரிஞ்சுக்கற அக்கறை கூட இல்லாம இருக்காங்க. நீ எங்க மேல அக்கறை எடுத்துக்கிட்டு, இவ்வளவு தூரம் வந்திருக்கியேப்பா, ரொம்ப ஆறுதலா இருக்கு!" என்றாள் பார்வதி.
பார்வதியின் நிலைமையைப் பற்றிக் கேட்டறிந்த பிறகு, "கவலைப்படாதீங்க, பெரியம்மா! உங்க பொண்ணைப் பத்தின கவலையை விடுங்க. அவ என்னோட தங்கச்சி! அவளுக்கு ஒரு நல்ல வேலை வாங்கித் தர வேண்டியது என்னோட பொறுப்பு. கொஞ்சநாள் வேலைக்குப் போகட்டும். ரெண்டு மூணு வருஷத்தில, ஒரு நல்ல மாப்பிள்ளையைப் பாத்துக் கல்யாணத்தையும் நடத்தி வச்சுடறேன்!" என்றான் முருகன்.
"நீ மவராசனா இருப்ப!" என்று மகிழ்ச்சியுடன் வாழ்த்தினாள் பார்வதி.
முருகன் வந்து போனது பற்றியும், தன் மகளுக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறியது பற்றியும், தேவியிடம் கூறினாள் பார்வதி.
"இந்தக் காலத்தில, இப்படி ஒரு பிள்ளையா!" என்று வியந்தாள் தேவி
முருகன் வந்து போய்ப் பல மாதங்கள் ஆகி விட்டன. அதற்குப் பிறகு, அவன் மீண்டும் வரவில்லை, வேறு எந்தத் தகவலும் இல்லை.
"அவ்வளவு நம்பிக்கையாப் பேசினான், அப்புறம் ஆளையே காணுமே?" என்றாள் பார்வதி, தேவியிடம்.
"வேலை அதிகமா இருந்திருக்கும். அதனால, நேரம் கிடைக்கலையோ, என்னவோ! வீட்டு விலாசமோ, வேலை செய்யற இடத்தோட விலாசமோ, ஃபோன் நம்பரோ கொடுத்தானா? என் வீட்டுக்காரரை விட்டு விசாரிக்கச் சொல்றேன்" என்றாள் தேவி.
"அதெல்லாம் எதுவும் கொடுக்கல. ஏதாவது அவசரம்னா கூப்பிடறதுக்காக, ஒரு ஃபோன் நம்பர் கொடுத்தான். அது அவன் ஃபிரண்டோட ஃபோன் நம்பர்னு நினைக்கிறேன்."
"சரி. அந்த நம்பரைக் கொடு. அவரை ஃபோன் பண்ணி விசாரிக்கச் சொல்றேன்"
தேவியின் கணவர், பார்வதி கொடுத்த தொலைபேசி எண்ணை அழைத்து, "உங்க நண்பர் முருகன் இந்த நம்பரைக் கொடுத்தாரு" என்று ஆரம்பித்தார்.
"முருகன் கொடுத்தானா? உங்ககிட்ட கடன் ஏதாவது வாங்கி இருக்கானா?" என்றான் அவன் நண்பன்.
"அதெல்லாம் ஒண்ணுமில்ல. அவரோட பெரியம்மா பார்வதிங்கறவங்களோட பொண்ணுக்கு வேலை வாங்கித் தரதா சொல்லி இருந்தாராம். நான் பார்வதியம்மாவோட பக்கத்து வீட்டில இருக்கறவன். அவங்க அது பத்தி கேக்கச் சொன்னாங்க."
முருகனின் நண்பன் பெரிதாகச் சிரித்து விட்டு, "வேலை வாங்கிக் கொடுக்கப் போறானா? அவனே வேலை வெட்டி இல்லாம சுத்திக்கிட்டிருக்கான். நான் எவ்வளவோசொல்லிட்டேன். வேலை தேடிக்க முயற்சி கூடப் பண்ண மாட்டேங்கறான். அவன் எங்கே இன்னொத்தருக்கு வேலை வாங்கித் தரது? தன்னைப் பெரிய பரோபகாரின்னு காட்டிக்கறத்துக்காக, எதையோ சொல்லிட்டு வந்திருக்கான்னு நினைக்கிறேன்!" என்றான்.
பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 62
ஆள்வினையுடைமை (விடாமுயற்சி)
குறள் 614:
தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
வாளாண்மை போலக் கெடும்.
பொருள்:
முயற்சி இல்லாதவன், பிறர்க்கு உதவுவேன் என்பது, படை கண்டு நடுங்கும் பேடி, களத்துள் நின்று, தன் கை வாளைச் சுழற்றுதல் போல், ஒரு பயனும் இல்லாமல் போகும்.
No comments:
Post a Comment