Thursday, August 11, 2022

806. சேதுவின் முடிவு

"இது ஒரு பெரிய கௌரவம். அரசாங்கத்துக்கு என்னோட மனமார்ந்த நன்றி!" என்றார் சேது.

"உங்களை மாதிரி விஞ்ஞானிகளை கௌரவிக்கிறதில இந்த அரசாங்கம் எப்பவுமே முனைப்போட இருக்கு" என்றார் ஆளும் கட்சிப் பிரமுகர் குபேரன்.

அப்போது நாகராஜன் உள்ளே நுழைந்தார். சேதுவுடன் இன்னொருவர் இருப்பதைப் பார்த்ததும், "சாரி, நான் அப்புறம் வரேன்!" என்று திரும்ப எத்தனித்தார்.

"வா, வா! பரவாயில்ல. சார் ஒரு நல்ல சேதி சொல்லத்தான் வந்திருக்காரு. என்னை ராஜ்ய சபா உறுப்பினரா நியமிக்கப் போறாங்களாம். அதைச் சொல்லத்தான் வந்திருக்காரு. நீ வந்து உக்காரு!" என்றார் சேது.

"கங்கிராசுலேஷன்ஸ்!" என்று தான் நின்ற இடத்திலிருந்தே கையை உயர்த்தி வாழ்த்திய நாகராஜன், "எனக்கு ஒரு ஃபோன் வருது. பேசிட்டு வரேன்" என்று கூறி விட்டு அங்கிருந்து அகன்றார்.

"நாகராஜனை உங்களுக்குத் தெரியுமா?" என்றார் குபேரன் சற்றே அதிர்ச்சியுடன். அவர் முகத்தில் ஒரு மாற்றம் ஏற்பட்டிருந்ததை சேது கவனித்தார்.

"அவன் என்னோட நீண்ட நாள் நண்பன். உங்களுக்கு நாகராஜனைத் தெரியுமா?" என்றார் சேது வியப்புடன்.

"அவர் சமூக ஊடகங்கள்ள இந்த அரசாங்கத்துக்கு எதிரா பல கருத்துக்களை சொல்லிக்கிட்டு இருக்காரு. நாங்க அவரைக் கண்காணிச்சுக்கிட்டு இருக்கோம்."

"ஏன், ஜனநாயக நாட்டில கருத்து சுதந்திரம் இருக்கு இல்ல?"

"நாங்க அவரை ஒரு அர்பன் நக்சலைட்னு கிளாசிஃபை பண்ணி இருக்கோம். அவர் எப்ப வேணும்னா பயங்கரவாதத் தடைச் சட்டத்தில கைது செய்யப்படலாம்! நான் வெளிப்படையா சொல்லிடறேன். நாகராஜன் உங்க நண்பர்னு தெரிஞ்சா அரசாங்கத்தில இந்த ராஜ்யசபா சீட்டை உங்களுக்குக் கொடுக்க மாட்டாங்க. அதோட இல்லாம, அவரோட நெருக்கமா இருக்கறதால உங்களுக்கும் சில பிரச்னைகள் வரலாம். நீங்க உடனே அவரோட தொடர்பை முறிச்சுக்கங்க" என்றார் குபேரன்.

"இங்க பாருங்க மிஸ்டர் குபேரன்! நாகராஜனோட கருத்துக்கள்ள எனக்கு உடன்பாடு இல்ல. சொல்லப்போன, நாங்க பல விஷயங்கள்ள எதிர் எதிர் கருத்துக்கள் உள்ளவங்க. ஆனா எங்க கருத்து வேறுபாடுகளை ஒரு எல்லைக்கு வெளியில நிறுத்தி அவை எங்க நட்பை பாதிக்காம நாங்க பாத்துக்கிட்டிருக்கோம். நாகராஜனோட நட்பை முறிச்சுக்கிட்டாத்தான் எனக்கு இந்த ராஜ்யசபா சீட் கிடைக்கும்னா அது எனக்குத் தேவையில்லை! அவனோட நட்பா இருக்கறதால எனக்கு வேற பிரச்னைகள் ஏற்படும்னாலும் அவற்றை நான் சந்திக்கத் தயாரா இருக்கேன். எங்க நட்புதான் எனக்கு முக்கியம்" என்றார் சேது கடுமையான குலில்.

குபேரன் மௌனமாக எழுந்து வெளியேறினார்.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 81
பழைமை (நீண்டகால நட்பு) 

குறள் 806:
எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும்
தொல்லைக்கண் நின்றார் தொடர்பு.

பொருள்: 
நட்பின் எல்லையைக் கடக்காமல் வரம்பிற்குள்ளேயே நின்றவர், தம்முடன் நெடுங்காலமாக நட்புக் கொண்டவரால் கெடுதிகள் நேரும் என்றாலும் அவரது நட்பினை விடமாட்டார்.
       அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...