Saturday, August 27, 2022

615. கற்பகத்தின் மதிப்பீடு

"என்ன, இன்னிக்காவது வேலை முடிஞ்சுதா?" என்றாள் கற்பகம், வீட்டுக்குள் நுழைந்த  தாமோதரனைப் பார்த்து.

"முடிஞ்சது. ஒரு வழியா, ஒரு நல்ல காலேஜில சீட் கிடைச்சது. வள்ளி வீட்டுக்காருக்கு ரொம்ப சந்தோஷம். ரொம்ப நன்றி மச்சான்னு அவர் திரும்பத் திரும்பச் சொன்னப்ப, எனக்கு ஒரு மாதிரி சங்கடமா ஆயிடுச்சு."

"நீங்க ஆஃபீசுக்கு லீவ் போட்டுட்டு, அஞ்சாறு நாள் அலைஞ்சு திரிஞ்சு, எத்தனையோ காலேஜ் படியேறி, ஒரு நல்ல காலேஜில சீட் வாங்கிக் கொடுத்திருக்கீங்க. அந்த நன்றி அவருக்கு இருக்காதா?"

"என்ன செய்யறது? குணா மார்க் சுமாராத்தான் வாங்கி இருக்கான். அவனுக்கு நல்ல காலேஜ்ல அட்மிஷன் வாங்கணும், அதுவும், டொனேஷன் கேக்காம, ஃபீஸ் அதிகம் வாங்காத காலேஜா இருக்கணும். அப்படிப்பட்ட காலேஜை தேடிப் பிடிக்கணும். அவங்க நமக்கு சீட் கொடுக்கணும். வள்ளி புருஷன் வெளியுலகப் பழக்கம் அதிகம் இல்லாதவரு. 'நீதான் அண்ணே குணாவுக்கு ஒரு நல்ல காலேஜ்ல சீட் வாங்கிக் கொடுக்கணும்'னு வள்ளி எங்கிட்ட கேட்டப்ப, நான் எப்படி அவளுக்கு உதவி செய்யாம இருக்க முடியும்?"

"ஆனா, உங்களை மாதிரி ஆஃபீசுக்கு லீவ் போட்டுட்டு, வேளைக்கு சோறு கூடத் திங்காம அலைஞ்சு திரிஞ்சு, மத்தவங்களுக்கு உதவி செய்யறவங்க எத்தனை பேரு இருப்பாங்க?" என்றாள் கற்பகம்.

"நீ என்னைப் பாராட்டறியா, குத்தம் சொல்றியான்னே தெரியலையே!" என்றான் தாமோதரன், குழப்பத்துடன்.

"நான் ஏன் உங்களைக் குத்தம் சொல்லப் போறேன்? உங்களுக்காக எந்த அளவுக்கு முயற்சி செய்வீங்களோ, அதே அளவு மத்தவகளுக்காகவும் செய்யறீங்கன்னுதான் சொல்ல வரேன். என்னோட குடும்பத்துக்கும்தானே நீங்க உதவி செஞ்சிருக்கீங்க? என் தம்பிக்கு வேலை போனப்ப, அவன் கம்பெனி யூனியன் கூட அவனுக்கு உதவி செய்யல. நீங்கதானே ஒரு வக்கீலைத் தேடிப் பிடிச்சு, அவர் மூலமா லேபர் கமிஷனருக்கு பெடிஷன் கொடுத்து, அவனுக்கு மறுபடி வேலை கிடைக்க வழி செஞ்சீங்க? வக்கீலுக்கு நீங்க கொடுத்த ஃபீஸைக் கூட அவன்கிட்டேந்து வாங்கிக்கல. வக்கீலுக்கு நீங்க எவ்வளவு ஃபீஸ் கொடுத்தீங்கன்னு எங்கிட்ட கூட சொல்லல. உங்க மேல நான் குத்தம் சொன்னா, என் பிறந்த வீட்டிலேயே எல்லாரும் என்னை ஒதுக்கி வச்சுடுவாங்க!" என்றாள் கற்பகம், கணவனைப் பெருமையுடன் பார்த்து.

பொருட்பால்
அரசியல் இயல்

அதிகாரம் 62
ஆள்வினையுடைமை (விடாமுயற்சி)

குறள் 615:
இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
துன்பம் துடைத்தூன்றும் தூண்.

பொருள்:
தன் இன்பத்தை விரும்பாதவனாய் மேற்கொண்ட செயலை முடிக்க விரும்புகிறவன், தன் சுற்றத்தாரின் துன்பத்தைப் போக்கித் தாங்குகின்ற தூண் ஆவான்.

      அறத்துப்பால்                                                            காமத்துப்பால்

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...