வெங்கடேசன் தன் பேச்சை நிறுத்தி விட்டு, இலேசாகச் சிரித்தார். மற்றவர்களும் இலேசாகச் சிரித்தனர்.
"திருஷ்டி பட்டுடப் போகுது!" என்று ஒரு குரல் வந்தது.
வெங்கடேசன் குரல் வந்த திசையைப் பார்த்தார்.
பூங்காவனம்!
எதிர்மறையாகப் பேசுவது, குற்றம் கண்டுபிடிப்பது, மற்றவர்கள் மனம் புண்படும்படி எகத்தாளமாகப் பேசுவது போன்ற விஷயங்களுக்குப் பெயர் பெற்றவர் பூங்காவனம்.
'இவர் எப்படி இந்தக் கூட்டத்துக்கு வந்தார்? நான் இவரைக் கூப்பிடவே இல்லையே!' என்று நினைத்த வெங்கடேசன், தான் அழைத்தவர்களுள் ஒருவர்தான் அவரை அழைத்திருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டார்.
இந்த ஆளை அழைத்து வந்த 'புத்திசாலி' யாராக இருக்கும் என்று யோசித்தார்.
யார் அழைத்திருப்பார்கள் என்று உடனே அவருக்குப் புரிந்து விட்டது.
சிலர் பூங்காவனத்தை அதிருப்தியுடன் பார்த்தனர்.
"ஒண்ணுமில்ல. நாளைக்கு நான் மெடிகல் செக்-அப்புக்குப் போறேன். நீங்க பாட்டுக்கு, நாம எல்லாரும் நல்ல உடல்நலத்தோட இருக்கறதா சொல்லிட்டீங்க. திருஷ்டி பட்டு, மெடிகல் செக்-அப்ல எனக்கு ஏதாவது உடல்நலக் கோளாறு இருக்கறதா சொல்லிடப் போறாங்களேங்கறதுக்காகத்தான் அப்படிச் சொன்னேன்!" என்றார் பூங்காவனம், தான் சொன்னதை மற்றவர்கள் நகைச்சுவையாக எடுத்துக் கொள்வார்கள் என்று எதிர்பார்த்தது போல்.
ஆனால், யாரும் புன்னகை கூடச் செய்யவில்லை.
"இங்கே நாம மட்டும்தானே இருக்கோம்? திருஷ்டி ஏற்பட, வெளி ஆளுங்க யாராவது இருக்காங்களா என்ன?" என்றார் ஒருவர், பூங்காவனத்தைப் பார்த்து.
பிறகு, நற்பணி மன்றம் என்ற ஒரு அமைப்பைத் தொடங்கி, நலிந்த பிரிவினருக்குத் தாங்கள் எதெந்த வழிகளில் உதவி செய்யலாம் என்று பலரும் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர்.
பூங்காவனம் அவ்வப்போது குறுக்கிட்டுக் கேலியாக ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார். அவர் கூறியவற்றை யாரும் ரசிக்கவில்லை.
தாம் அழைக்காத ஒரு நபர் இங்கே வந்து, அனைவரின் உற்சாகத்தையும் சிதைத்துக் கொண்டிருக்கிறாரே என்று வெங்கடேசன் வருத்தமும், குற்ற உணர்ச்சியும் அடைந்தார்.
"பூங்காவனம்! உங்களுக்கு இந்த நற்பணி மன்றத்தில ஆர்வம் இல்லேன்னு தெரியுது. நீங்க போயிடலாமே! ஆர்வம் உள்ளவங்க மட்டும் இதை நடத்திக்கறோம்!" என்றார் ஒருவர், சற்றுக் கடுமையாக.
"போறேன். ஆனா, என்னோட கருத்துக்களைச் சொல்ல விரும்பறேன். சொல்லலாமா?" என்றார் பூங்காவனம், வெங்கடேசனைப் பார்த்து.
"அதான் அப்பப்ப சொல்லிக்கிட்டே இருக்கீங்களே!" என்று ஒருவர் முணுமுணுத்தார்.
"சரி, சொல்லுங்க. சுருக்கமா சொல்லுங்க. நெகடிவா எதுவும் சொல்லாம இருக்கப் பாருங்க" என்றார் வெங்கடேசன்.
"நான் வெளிப்படையாப் பேசறவன். அதனால, பல பேருக்கு நான் பேசறது பிடிக்காது. இது மாதிரி நற்பணி மன்றம் அமைக்கறது, சமூக சேவை செய்யறேன்னு கிளம்பறது இது எல்லாமே வசதியா இருக்கறவங்க, தங்களோட குற்ற உணர்ச்சியைப் போக்கிக்கறதுக்காக செய்யற காரியங்கள்" என்று ஆரம்பித்தார் பூங்காவனம்.
ஒரு சிலர் கோபத்துடன் எழுந்து இதை ஆட்சேபித்தனர்.
"இதில குற்ற உணர்ச்சி எங்கே வந்தது?" என்றார் வெங்கடேசன்.
"சமூகத்தில மேல இருக்கறவங்க எல்லாருமே, பல பேரைக் கீழே தள்ளிட்டுத்தானே மேலே வந்திருக்கோம்! அந்தக் குற்ற உணர்ச்சி இருக்காதா?" என்றார் பூங்காவனம்.
பலர் இதை ஆட்சேபித்துக் குரல் எழுப்பினர்.
அப்போது, வெங்கடேசனின் தண்பர் தாமோதரன் பூங்காவனத்தின் அருகில் வந்து, அவர் காதில் ஏதோ சொன்னார்.
பூங்காவனம் எதுவும் பேசாமல் எழுந்து வெளியே சென்றார்.
"எப்படி சார் அவரை வெளியில அனுப்பினீங்க? ரொம்ப நன்றி!" என்றார் ஒருவர், தாமோதரனைப் பார்த்து.
தாமோதரன் எதுவும் சொல்லவில்லை.
அதற்குப் பிறகு, ஒரு மணி நேரம் அனைவரும் உற்சாகமாக விவாதித்துச் சில முடிவுகளை எடுத்தனர்.
கூட்டம் முடிந்து, ஒவ்வொருவராகக் கிளம்பினர்.
அனைவரும் சென்றதும், தாமோதரன் வெங்கடேசனிடம் வந்து, "சாரிடா! பூங்காவனத்தைப் பத்தி சரியாத் தெரிஞ்சுக்காம, அவரைக் கூப்பிட்டுட்டேன், எங்கிட்ட பேசும்போது பெரிய பரோபகாரி மாதிரி பேசுவாரு. அதைக் கேட்டு ஏமாந்துட்டேன். கூட்டத்தையே கெடுத்துட்டாரு!" என்றார்.
"அதுதான் நீயே அவர்கிட்ட பேசி, அவரை வெளியே அனுப்பிட்டியே. நீ செஞ்சது ரொம்ப நல்ல விஷயம்!" என்றார் வெங்கடேசன்.
"அவர் அப்பப்ப நெகடிவாப் பேசினப்ப, பல பேர் அதை ஆட்சேபிச்சாங்க. நீதான் இந்தக் கூட்டதைக் கூட்டி நடத்தினவன். நீ அவரைப் பேசக் கூடாதுன்னு சொல்லி இருக்கலாம். ஏன், அவரை வெளியே போகச் சொல்லி இருக்கலாம். ஆனா, கடைசி வரைக்கும் நீ அவரை எதுவுமே சொல்லலியே, ஏன்?"
"உனக்கு அவர்கிட்ட நல்ல பழக்கம் உண்டு. அதனால, நீதான் அவரைக் கூப்பிட்டிருப்பேன்னு எனக்குத் தெரியும். நீ என்னோட நண்பன். நீ உரிமையோட ஒத்தரை இந்த மீட்டிங்குக்கு அழைச்சுக்கிட்டு வந்திருக்க. நீ அவரை அழைச்சதை மதிச்சு, நான் அவருக்கு உரிய மதிப்புக் கொடுத்து நடத்த வேண்டாமா?" என்றார் வெங்கடேசன், சிரித்தபடி.
பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 81
பழைமை (நீண்டகால நட்பு)
குறள் 804:
விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற்
கேளாது நட்டார் செயின்.
No comments:
Post a Comment