Sunday, July 17, 2022

801. பரணிதரனின் கோபம்!

"பரணிதரன் வீடு இதுதானே?"

"வாங்க, உக்காருங்க!" என்று வந்தவரை வரவேற்ற பாகீரதி, அவர் அமர்ந்ததும், "நீங்க?" என்றாள்.

"என் பேரு ஈஸ்வரமூர்த்தி" என்ற அவர், "என் பெண்ணோட கல்யாண விஷயமாப் பேச வந்தேன். நீங்க பரணிதரனோட அம்மாதானே?" என்றார்.

"ஆமாம். எங்களைப் பத்தி உங்களுக்கு யார் தகவல் சொன்னாங்க?" என்றாள் பாகீரதி, சற்று வியப்புடன்.

"என்னோட நண்பர் ஒத்தர் சொன்னாரு. அவருக்கு யார் சொன்னாங்கன்னு எனக்குத் தெரியல. உங்க பையனுக்குப் பெண் பாத்துக்கிட்டிருக்கீங்க இல்ல?"

"ம்..." என்றாள் பாகீரதி, தயக்கத்துடன்.

ஈஸ்வரமூர்த்தி தன் குடும்பம் பற்றிய விவரங்களையும், தன் பெண்ணைப் பற்றிய விவரங்களையும் தெரிவித்தார்.

"சரி. ஜாதகம் கொடுத்துட்டுப் போங்க. பாத்துட்டு சொல்றேன்" என்று சொல்லி அவரை அனுப்பி வைத்தாள் பாகீரதி.

ரணிதரன் வீட்டுக்கு வந்ததும், அவனிடம் விஷயத்தைச் சொன்ன பாகீரதி, "ஏண்டா, நான் கல்யாணத்தைப் பத்திப் பேசினப்ப எல்லாம் பதில் சொல்லாம தட்டிக் கழிச்சே! இப்ப யாரோ சொல்லி, ஒத்தர் வந்து ஜாதகம் கொடுத்துட்டுப் போறாரு. யார்கிட்டயாவது சொல்லி, உனக்குப் பெண் பார்க்கச் சொன்னியா என்ன?" என்றாள்.

"நான் யார்கிட்டேயும் சொல்லல. இதை யார் செஞ்சிருப்பாங்கன்னு எனக்குத் தெரியும். அந்த அதிகப் பிரசங்கி பாலுவாத்தான் இருக்கும். அவன் வரட்டும், பேசிக்கிறேன்!" என்று கோபத்துடன் கூறிய பரணிதரன், "அவர் ஜாதகம் கொடுத்ததும் நல்லதாப் போச்சு. ஜாதகம் பொருந்தலேன்னு இன்னிக்கே அவருக்கு ஒரு கார்டு எழுதிப் போட்டுடு" என்றான் தொடர்ந்து.

"உன் நண்பன் உன் மேல ரொம்பக் கோபமா இருக்காண்டா! அவன்கிட்ட கேக்காம நீ ஏன் பெண் வீட்டுக்காரங்களை இங்கே வரச் சொன்னே?" என்றாள் பாகீரதி, வீட்டுக்கு வந்த பாலுவிடம். பரணிதரன் அப்போது வீட்டில் இல்லை. வெளியே எங்கோ சென்றிருந்தான்.

"எனக்குப் பெண் பாக்கறதிலேந்து கல்யாண ஏற்பாடுகள் வரை என் கல்யாணத்தில அவன் எனக்கு நிறைய உதவி செஞ்சான். அதனாலதான், அவனுக்குப் பொருத்தமா ஒரு பெண் இருக்கறது தெரிஞ்சதும், உங்களை வந்து பாக்கச் சொன்னேன். இது தப்பா?" என்றான் பாலு.

"அப்படித்தான் பரணி நினைக்கிறான். கல்யாணத்தைப் பத்தி அவன் என்ன நினைக்கிறான்னு எனக்கே தெரியல. எப்ப கேட்டாலும், கொஞ்ச நாள் ஆகட்டும்னு சொல்லிக்கிட்டிருக்கான். அவன் மனசில என்ன இருக்குன்னு நானே குழம்பிக்கிட்டிருக்கேன். நீ அவனைக் கேக்காம ஒத்தரை வீட்டுக்கு அனுப்பினா?"

"அவன் ரொம்ப இன்டிபென்டன்ட் டைப்தான். அவன் விஷயத்தில அவனைக் கேக்காம நான் செஞ்சிருக்கக் கூடாது. கோவிச்சுக்கிட்டுக் கத்தினான்னா, பொறுமையாக் கேட்டுக்கறேன். நீங்க சொல்றதைப் பாத்தா, அவன் என் மேல ரொம்பக் கோபமா இருக்கற மாதிரி தெரியுது. என் முகத்திலேயே முழிக்காதேன்னு சொல்லிடப் போறானோன்னு பயமா இருக்கு!" என்றான் பாலு, சற்றுக் கவலையுடன்.

அப்போது வீட்டுக்குள் நுழைந்த பரணிதரன், நண்பனைப் பார்த்து விட்டு, அவனைத் தன் அறைக்குள் அழைத்துச் சென்றான்..

அடுத்த சில நிமிடங்களுக்கு, பரணிதரன் பாலுவிடம் வழக்கமாகப் பேசுவதைப் போல் பல விஷயங்களைப் பற்றி இயல்பாகப் பேசிக் கொண்டிருந்தான்.

காப்பியுடன் அறைக்குள் வந்த பாகீரதி, அவர்கள் பேசுவதைக் கேட்காமலேயே, "ஏதோ தெரியாம செஞ்சுட்டான், விடு!" என்றாள், மகனிடம்.

"தெரியாம செஞ்சுட்டானா? எதை?" என்ற பரணிதரன், உடனேயே, "ஓ, எனக்குப் பெண் பார்க்கிற முயற்சியிலே இறங்கினானே, அதைச் சொல்றியா? அம்மா! பாலுவும் நானும் சின்ன வயசிலேந்தே நண்பர்களா இருக்கோம். அதனால, அவன் உரிமை எடுத்துக்கிட்டு எங்கிட்ட சொல்லாமயே எனக்குப் பெண் பாக்கற வேலையில இறங்கி இருக்கான். முதல்ல எனக்குக் கொஞ்சம் கோபம் வந்தது உண்மைதான். ஆனா, ஒரு நண்பனா உரிமை எடுத்துக்கிட்டு அவன் எனக்கு ஒரு நல்லது செய்ய நினைச்சதுக்காக, அவனை நான் எப்படிக் கோபிச்சுக்க முடியும்? அந்தக் கோபம் அன்னிக்கே போயிடுச்சு. அந்த விஷயத்தை நான் மறந்து கூடப் போயிட்டேன்!" என்றான், சிரித்தபடி.

பிறகு, "அம்மா! நான் வேலை பாக்கற கம்பெனியோட நிலைமை சரியில்ல. அதனால, வேற வேலைக்கு முயற்சி செஞ்சுக்கிட்டிருக்கேன். எனக்கு வேற வேலை கிடைச்சப்பறம், நீயும் பாலுவும் சேர்ந்தே எனக்குப் பெண் தேடலாம்!" என்றான் பரணிதரன்.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 81
பழைமை (நீண்டகால நட்பு) 

குறள் 801:
பழைமை எனப்படுவது யாதெனின் யாதும்
கிழமையைக் கீழ்ந்திடா நட்பு.

பொருள்: 
பழைமை என்று சொல்லப்படுவது எதுவென்றால், பழகியவர் உரிமை எடுத்துக் கொண்டு செய்யும் செயலை இகழாமல் ஏற்கும் நட்பாகும்.
       அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...