வெஞ்சர் காபிடல் நிறுவனத்திலிருந்து பேட்டி முடிந்து வெளியே வந்தபோது, சதீஷ் மிகவும் உற்சாகமாக இருந்தான்.
"நிச்சயமா என்னோட ப்ராஜக்டுக்கு ஃபைனான்ஸ் பண்ணுவாங்கன்னு நினைக்கிறேன். உனக்கு என்ன தோணுது?" என்றான் சதீஷ், உடன் வந்த தன் நண்பன் குமாரிடம்.
"உன்னோட ப்ராஜக்ட் ஐடியா அவங்களுக்குப் பிடிச்சிருக்குன்னுதான் நினைக்கிறேன். பாக்கலாம். சீக்கிரமே நல்ல முடிவு வரும்னு நம்புவோம்!" என்றான் குமார்.
"உனக்குத்தான் நான் நன்றி சொல்லணும்."
"இவங்க கொஞ்சம் கன்ஸர்வேடிவ் டைப். ரெஃபரன்ஸ் இல்லாம, எந்த அப்ளிகேஷனையும் எடுத்துக்க மாட்டாங்க. எனக்குத் தெரிஞ்ச ஒத்தர் இங்கே டைரக்டரா இருக்கறதால, நான் உனக்கு சிபாரிசு பண்ணினேன். உன்னை இன்டர்வியூவுக்குக் கூப்பிட்டாங்க. பொதுவா, இது மாதிரி இன்டர்வியூவுக்குத் தொழில் செய்யப் போறவரை மட்டும்தான் கூப்பிடுவாங்க. என்னையும் ஏன் கூட இருக்கச் சொன்னாங்கன்னு தெரியல!" என்றான் குமார்.
இரண்டு வாரங்களுக்குப் பிறகு, சதீஷ் குமாருக்கு ஃபோன் செய்து விசாரித்தபோது, "எனக்குத் தகவல் எதுவும் வரல. கொஞ்சம் வெயிட் பண்ணு. எதுவா இருந்தாலும், உனக்குத்தான் நேரடியாத் தகவல் வரும்" என்றான் குமார்.
"உனக்குத் தெரிஞ்ச அந்த டைரக்டர் உங்கிட்ட எதுவும் சொல்லலியா?" என்றான் சதீஷ்.
"இல்ல. நான் அவரைக் கேட்டாலும் நல்லா இருக்காது!" என்றான் குமார்.
ஒரு மாதத்துக்குப் பிறகு, சதீஷுக்கு அந்த வெஞ்சர் காபிடல் நிறுவனத்திலிருந்து , "உங்கள் தொழில் முயற்சிக்கு உதவ இயலாமல் இருப்பதற்கு வருந்துகிறோம்" என்று சுருக்கமாக ஒரு கடிதம் வந்தது.
குமாரை ஃபோனில் அழைத்த சதீஷ், "என்னடா இப்படிச் சொல்லிட்டாங்க? நான் ரொம்ப நம்பிக்கையோட இருந்தேனே!" என்றான், ஏமாற்றத்துடன்.
"இன்டர்வியூவில உன் வேலையில ரெண்டு வருஷம் பிரேக் இருந்ததைப் பத்திக் கேட்டாங்களே, நினைவிருக்கா?" என்றான் குமார்.
"ஆமாம், கேட்டாங்க. ஒரு தொழில் முயற்சியில இறங்கினேன், அது வெற்றிகரமா அமையல, அதனால அதை மூடிட்டு மறுபடி வேலைக்குப் போயிட்டேன்னு உண்மையைச் சொன்னேனே!"
"அந்தத் தொழில் பற்றின விவரங்களைக் கேட்டாங்க இல்ல?"
"ஆமாம், கேட்டாங்க. அது என்ன தொழில், அதில என்ன பிரச்னை, அதை ஏன் கைவிட்டேன்னெல்லாம் விவரமா சொன்னேனே! நான் வெளிப்படையாப் பேசினது அவங்களுக்குப் பிடிச்ச மாதிரிதானே இருந்தது?"
"நீ வெளிப்படையாப் பேசினது அவங்களுக்குப் பிடிச்சிருக்கலாம். ஆனா நீ ஆரம்பிச்ச தொழில், நிறைய பொடென்ஷியல் இருந்த ஒரு தொழில். உனக்கு மார்க்கெடிங் பிரச்னைகள் இருந்தது உண்மைதான். ஆனா, நீ இன்னும் ஒரு வருஷமோ ரெண்டு வருஷமோ தாக்குப் பிடிச்சிருந்தா, உன் தொழில் லாபம் கொடுக்க ஆரம்பிச்சிருக்கும். உங்கிட்டேந்து அதை வாங்கினவர், இன்னிக்கு சக்கை போடு போடறாரே!"
"நீ என்ன சொல்ல வரே?"
"நீ ஏற்கெனவே ஒரு தொழிலை ஆரம்பிச்சு அதைக் கைவிட்டது, உனக்கு எதிரான நெகடிவ் பாயின்ட்டா ஆகி இருக்கும்னு நினைக்கிறேன். இதுக்கு மேல நஷ்டப்பட வேண்டாம்னு நினைச்சு, நீ உன் தொழிலை விட்டுட்டு வந்திருக்கலாம். ஆனா வெஞ்சர் காபிடல் நிதி கொடுக்கறவங்க, அதை ஒரு குறையாப் பாத்திருப்பாங்கன்னு நினைக்கிறேன்!" என்றான் குமார், சற்றுத் தயக்கத்துடன்.
சற்று நேரம் மௌனமாக இருந்த சதீஷ், "இது உனக்கு முன்னாலேயே தெரியுமா? நீ ஏன் எங்கிட்ட சொல்லலே?" என்றான்.
"இன்டர்வியூவில அவங்க இதைப் பத்திக் கேட்டப்பவே, இது உனக்கு எதிரான ஒரு நெகடிவ் பாயின்ட்டா இருக்குமோங்கற சந்தேகம் எனக்கு வந்தது. ஆனா, நீ நம்பிக்கையோட இருந்தப்ப, அவசரப்பட்டு உன் நம்பிக்கையைக் குலைக்க வேண்டாம்னுதான், நானும் நம்பிக்கையாப் பேசினேன். ஆனா ரெண்டு வாரத்துக்கு மேல ஆனப்பறம், உன் பழைய தொழிலைப் பத்தி அவங்க விசாரிக்கிறாங்களோங்கற சந்தேகம் எனக்கு வந்தது. அப்படித்தான் செஞ்சிருக்காங்கன்னு இப்ப தோணுது. எனக்கு எந்தத் தகவலும் இல்லாதப்ப, முடிவு தெரியறதுக்கு முன்னால என்னோட கருத்தைச் சொல்ல வேண்டாம்னுதான், நான் என் சந்தேகத்தை உங்கிட்ட சொல்லல. சாரி. கவலைப்படாதே! வேற எங்கேயாவது முயற்சி செய்யலாம்" என்றான் குமார்.
பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 62
ஆள்வினையுடைமை (விடாமுயற்சி)
குறள் 612:
வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை
தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு.
பொருள்:
ஒரு செயலைச் செய்யும்போதே, அதைத் தொடர்ந்து செய்வது கடினம் என எண்ணி அதைச் செய்து முடிக்காமல் விட்டு விடக் கூடாது. அவ்வாறு விட்டு விடுபவரை இந்த உலகமும் விட்டு விடும்.
No comments:
Post a Comment